புதுடெல்லி: பிப்ரவரி 2024 உடன் ஒப்பிடும்போது, பிப்ரவரி 2025-ல் மொத்த விலை பணவீக்கம் 2.38% ஆக உயர்ந்துள்ளது. அகில இந்திய அளவிலான மொத்த விலைக் குறியீடு தொடர்பான அரசு தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2024 ஜனவரியோடு ஒப்பிடுகையில், 2025 ஜனவரியில் பணவீக்கம் 2.31% ஆக உயர்ந்திருந்தது. இது, பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்கள், உணவு அல்லாத பொருட்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட பல பிரிவுகளில் விலைகள் உயர்ந்ததே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.
சாதகமான வானிலை காரணமாக காய்கறி உற்பத்தி அதிகரித்ததால், சமீபத்திய மாதங்களில் பணவீக்க அழுத்தங்கள் குறைந்து வருகின்றன. பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம், காய்கறி விலைகள் குறைந்ததன் காரணமாக, மத்திய வங்கியின் 4% இலக்கை விடக் குறைந்துள்ளதாக, கடந்த வாரம் அரசுத் தரவுகள் தெரிவித்தன.
மொத்த உணவுப் பொருட்களின் விலைகள் ஜனவரி மாதத்தில் 7.47% உயர்ந்த பிறகு, பிப்ரவரி மாதத்தில் 5.94% உயர்ந்தன. காய்கறிகளின் விலைகள் ஜனவரியில் 8.35% உயர்ந்த நிலையில் பிப்ரவரியில் அது 5.80% ஆக குறைந்தது. இருப்பினும், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலைகள், பழங்களுடன் சேர்ந்து, 21% முதல் 48% வரை உயர்ந்தன.
தானியங்களின் விலைகள் பிப்ரவரியில் 6.77% உயர்ந்தன. இது ஜனவரியில் 7.33% உயர்ந்தது. மொத்த விலைக் குறியீட்டில் சுமார் 64% பங்களிக்கும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள், ஜனவரியில் 2.51% உயர்ந்த நிலையில், அது பிப்ரவரியில் 2.86% ஆக அதிகரித்தது.
முதன்மைப் பொருட்கள்: உணவுப் பொருட்களின் விலை (-2.05%), கச்சா பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு (-1.46%), தாதுக்கள் (-1.26%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-0.36%) 2025 ஜனவரி 2025 உடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் குறைந்துள்ளது. இந்த முக்கிய பொருட்களுக்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 189.9-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 1.74% குறைந்து 186.6-ஆகவும் இருந்தது.
எரிபொருள் மற்றும் மின்சாரம்: மின்சாரம் (4.28%) மற்றும் தாது எண்ணெய்கள் (1.87%) ஆகியவற்றின் விலை 2025 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2025 பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. இவற்றின் குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 150.6-ஆகவும், பிப்ரவரி மாதத்தில் 2.12% அதிகரித்து 153.8-ஆகவும் உள்ளது. நிலக்கரியின் விலை முந்தைய மாதத்தின் குறியீடு அளவிலேயே இருந்தது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான 22 என்.ஐ.சி இரண்டு இலக்கமாகவும், 17 வகையான பொருட்கள் விலை உயர்வையும் கண்டுள்ளன. இதற்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 143.2-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 0.42% அதிகரித்து 143.8-ஆகவும் உள்ளது. அடிப்படை உலோகங்கள், ஏனைய உலோகமல்லாத கனிமப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள் போன்றவை விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளன.