பெங்களூரு கூட்ட நெரிசல்; RCB மீது குற்றம் சாட்டிய கர்நாடகா அரசாங்கம்!

2025 ஜூன் 4 ஆம் திகதி எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஐ.பி.எல். வெற்றி கொண்டாட்ட அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தமை மற்றும் பலர் காயமடைந்ததற்கு கர்நாடக அரசாங்கம், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பில் மாநில அரசாங்கம், கர்நாடக மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பொது வீடியோ, நிகழ்வு தொடர்பான பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியது.

மேலும், வெற்றிக் கொண்டாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த போதிலும், அந்த நிகழ்வுக்கு ஏராளமான மக்கள் கூட்டம் வந்ததாகவும் குறிப்பிட்டது.

அறிக்கையின்படி, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஜூன் 3 ஆம் திகதி திட்டமிடப்பட்ட வெற்றிக் கொண்டாட்டம் குறித்து காவல்துறைக்குத் தெரிவித்தது மட்டுமல்லாமல் முறையான அனுமதியைப் பெறவில்லை.

இது 2009 நகர உத்தரவின் கீழ் கட்டாயமாகும்.

இதன் அடிப்படையில், காவல்துறையினர் நிகழ்வை அனுமதிக்க வெளிப்படையாக மறுத்துவிட்டனர்.

எனினும், வெற்றிக் கொண்டாட்டம் தொடர்பாக RCB விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஜூன் 4 அன்று RCB, சமூக ஊடக தளங்களில் நிகழ்வுக்கான திறந்த பொது அழைப்பிதழ்களை வெளியிட்டது.

அத்தகைய ஒரு பதிவில் ரசிகர்களை இலவச நுழைவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள RCB இன் மூத்த வீரர் விராட் கோலி அழைப்பது போன்ற ஒரு வீடியோவும் இருந்தது.

இது மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையில் பெருமளவிலான வருகைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதாக அரசாங்கம் கூறியது.

இது ஏற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையினர் எதிர்பார்த்திருந்ததை விட அதிகமான எண்ணிக்கையாகும்.

நிகழ்வு நடந்த நாளில் அது தொடர்பான குழப்பம் தீவிரமடைந்தது.

ஜூன் 4 அன்று பிற்பகல் 3.14 மணிக்கு, மைதானத்திற்குள் நுழைவதற்கு அனுமதிகள் (passes) அவசியம் என்று ஏற்பாட்டாளர்கள் திடீரென அறிவித்தனர்.

இறுதி நிமிடத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம், முந்தைய திறந்த நுழைவு அறிவிப்புகளுக்கு முரணாக அமைந்ததுடன், கூட்டத்தினரிடையே பீதியைத் தூண்டியது.

இதனால், RCB நிர்வாகம், ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கம் என்பன நிகழ்வினை திறம்பட ஒருங்கிணைக்கத் தவறவிட்டதாகவும் கர்நாடக அரசாங்க அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், எம்.சின்னசாமி மைதானத்தின் நுழைவு வாயில்களில் மோசமான திட்டமிடல் மற்றும் அவற்றைத் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் என்பவற்றால் நிலைமை மோசமானது.

இதன் விளைவாக கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் விளைவாக 11 பேர் உயிரிழந்தும், 7 பொலிஸார் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இது தவிர நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாநில அரசாங்கத்தின் அறிக்கையில், சம்பவத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகள், நீதித்துறை விசாரணைகள்,காவல்துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை, முதலமைச்சரின் அரசியல் செயலாளர் இடைநீக்கம் மற்றும் மாநில உளவுத்துறைத் தலைவரின் இடமாற்றம் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply