அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தந்தை – மகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது! | Indian-origin man, daughter shot inside US store, 1 arrested

வர்ஜினியா: அமெரிக்காவின் வர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயது ஆண் ஒருவரும், அவரது 24 வயது மகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அந்த கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுட்டக்கொல்லப்பட்ட பிரதிப்குமார் படேல் மற்றும் அவரது மகள் இருவரும், வர்ஜினியாவின் கிழக்கு கரையில் அமைந்துள்ள அகோமாக் கவுண்டியின் லாங்ஃபேர்ட் நெடுஞ்சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அகோமாக் கவுண்டி போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தி ஒன்று கிடைத்து. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்ற போது, கடை ஒன்றில் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் ஆண் ஒருவர் சுயநினைவின்றி கிடந்ததைப் பார்த்தனர்.

தொடர்ந்து அந்த கட்டிடத்தை ஆராய்ந்ததில் இளம்பெண் ஒருவரும் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த ஆண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அடையாளம் காணப்படாத அந்தப் பெண், சென்ட்ரா நோர்ஃர்லோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். என்றாலும் காயம் காரணமாக அவர் அங்கு உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்ஜ் ஃப்ராஷியர் தேவோன் வார்டன் (44) என்ற அந்த நபர் தற்போது அகோமாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இதனிடையே துப்பாக்கிச் சூடு நடந்த கடையின் உரிமையாளரான பர்வேஷ் படேல், உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் உயிரிழந்த இருவரும் தனது உறவினர் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “எனது உறவினரின் மனைவியும் அவரது தந்தையும் இன்று காலையில் கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது, ஒருவர் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொலை பற்றிய செய்தி முகநூல் மூலம் பரவிய நிலையில், இது அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!