உலக மக்கள் உண்மையை அறிந்து உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் (ﷻ) அல் குர்ஆனில் கூறி மனிதனை அதனைப் பற்றி சிந்திக்க தூண்டுகிறான்.
நாம் அற்பமாக கருதும் கொசுக்கள், ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகின்றான். அவ்வகையில் வரும் ஒரு வசனம் தான்…
“ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்கள் எலோரும் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது; இன்னும் அவர்களிடம் இருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமானர்களே!” அல் குர்ஆன்.22:73.
இவ்வசனத்தில் நம்மோடு ஒன்றாய் வாழும் ஈயைப் பற்றி அல்லாஹ் (ﷻ) சொல்லிக்காட்டுகின்றான். எளிய உடலமைப்புக் கொண்ட இந்த ஈயைப் பற்றிய விபரம் அல் குர்ஆன் இறங்கிய 6ம் நூற்றாண்டு மக்கள் நிச்சயமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அது எவ்வாறு உணவு உட்கொள்கிறது என்பதும் எவருக்கும் தெரியாது. இந்த ஈக்களில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. மனிதன் படைக்கப்படுவதற்கு சுமார் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே ஈக்கள் உலகில் நடமாடுகின்றன.
ஒரு ஜோடி இறக்கையைக் கொண்ட ஈயானது நொடிக்கு 1000 தடவைகள் தன் சிறகை அடிக்கும் தன்மை கொண்டது. மணிக்கு சுமார் 5 கி.மீ. பறக்கும் திறனுடையது. அதன் ஒவ்வொரு கூட்டுக் கண்களிலும் சுமார் 4000 லென்ஸ்கள் காணப்படுகின்றன.
தன்னுடைய நுகரும் தன்மையைக்கொண்டே உணவுகளைத் தேடுகின்றது. ஈக்களுக்கு உணவை மென்று, அரைத்துத் திண்பதற்கு பற்கள் கிடையாது. ஆகவே ஈயானது திட உணவுப் பொருள்களை நேரடியாக வாயில் வைத்து மென்று உண்ண முடியாது.
திரவ நிலையில் உள்ள உணவுகளை தனது வாயில் காணப்படும் (Proboscis) ஸ்பான்ஜ் போன்ற உறுப்பால் ஒற்றி உருஞ்சிக் கொள்ளும். திட உணவாக இருப்பின் தனது உமிழ்நீரை அப்பொருளின் மீது உமிழ்ந்து அதைக் கரைத்து நீர்ம நிலைக்கு மாற்றி உறுஞ்சி நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது.
இந்த அறிவியல் உண்மைகள் எல்லாம் சுமார் 500 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்த பொருள்களை பெரிதாக்கிக்காட்டும் மைக்ராஸ்கோப் வந்த பின்னரே அறிய முடிந்தது.
“அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனை திரும்பக் கைப்பற்றவும் முடியாது;”
ஈ எவ்வாறு திட உணவுப் பொருளை திரவமாக மாற்றி எடுத்துக்கொள்கிறது என்பதை இன்றைய அறிவியல் நமக்கு தெளிவாக விளக்குகிறது. ஈ ஒரு உணவுப் பொருளில் அமர்ந்து ஒரு வித (நொதியை) எச்சிலை உமிழ்ந்து அத் திடப்பொருளை திரவமாக்கி உறுஞ்சி, நேரடியாக வயிற்றுக்கு அனுப்பி விட்டால் எம்மால் அப்பொருளை மீண்டும் கைப்பற்ற முடியாது.
இதைத் தான் அல்லாஹ் (ﷻ) ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு “ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனை திரும்பக் கைப்பற்றவும் முடியாது;” என்று கூறுகிறான்.
நோயும், மருந்தும் ஈயில் உண்டு!
ஈயைப் பற்றிய அடுத்த அறிவியல் உண்மையையை நபி (ﷺ) அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
“ உங்களில் ஒருவரது பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் (முதலில்) அந்த ஈயை அவர் (அதிலேயே) முக்கி அமிழ்த்தட்டும் பிறகு அதை வெளியில் எடுத்துப் போட்டு விடவும்; ஏனெனில் ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும், மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது.” -அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி). புஹாரி.3320.
பொதுவாக ஈயானது அசுத்தமான, சுகாதாரக்கேடான இடங்களிலும் கழிவுப் பொருள்கள் தேங்கும் இடங்களிலும் அதிகம் காணப்படும்.
கிருமி தாக்குதலுக்குறிய இடங்களில் அவை வசித்தாலும் அவைகளினால் ஈக்கள் இறப்பதில்லை. மேலும் ஈயினால் சுமார் 100 வகையான நோய்கள் (Pathogens) பரவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் ஈக்களின் உடலிலேயே அல்லாஹ் (ﷻ) அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வைத்திருப்பதால் ஈக்கள் பாக்டீரியா, மற்றும் வைரஸ் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை.
ஆக, ஈயானது நோயை கொண்டு செல்லும் அதே நேரத்தில் அந்நோய்க்கான பரிகாரத்தை நிவாரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதைத் தான் நபி (ﷺ) அவர்கள் அல்லாஹ்வின் வஹியின் மூலம் அன்றே குறிப்பிட்டுள்ளார்கள்.
இவ்வுண்மையை இன்றைய நவீன அறிவியல் ஆய்வுகளும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன. ஈயின் மரபணு முழுவதையும் ஆராய்ந்து பார்த்ததில் மனிதர்களை நோய் தாக்குவதிலிருந்து காப்பாற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, வழிமுறை ஈயின் மரபணுவில் இருப்பதாக அறிவித்தனர்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள மனித நோய்களின் மரபணுகளில் நான்கில் மூன்று பங்கு மரபணுக்கள் இந்த ஈயினது மரபணுக்களுடன் ஒத்துள்ளன. இந்த ஈக்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் உறங்கச் செல்கின்றன.
மயக்க மருந்து வகைகளுக்கு மனிதர்களைப் போலவே எதிர்வினையாற்றுகின்றன. அனைத்துக்கும் மேலாக இவை மிக விரைவாக இனப்பெருக்கம் செய்கிறது. சுமார் பதினைந்து நாட்களுக்குள் முற்றிலும் புதியதொரு தலைமுறையை அவை உருவாக்குகிறது.
எனவே, அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகம், ஆறு பெண் ஈக்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவைகளின் 15345 ஜீன்களை பிரித்து வகைப்படுத்திர்.
இவற்றுள் நோயை பரப்பும் ஜீன்கள் (animal pathogens) மற்றும் நோய் எதிர்ப்பு ஜீன்களை (Immune system & Detoxification genes) அவர்கள் ஆய்வு செய்தனர்.
வீட்டு ஈயின் குடும்பத்தைச் சேர்ந்த பழ ஈ (Fruit Fly) ன் நோய் எதிர்ப்பு ஜீன்களைக்காட்டிலும் வீட்டு ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன்கள் மிக அதிகளவில் இருப்பது ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
Detoxification என்று சொல்லப்படும் (cytochrome P450 genes) ஜீன்கள் பழ ஈயில் 85 மட்டுமே காணப்படுகின்றது. நமது வீட்டு ஈயில் இந்த ஜீன்கள் 146 உள்ளது. அது மட்டுமல்லாமல் அளவில் 5 மடங்கு மிகப்பெரியதாகவும் இருக்கின்றது.
ஈயின் நோய் எதிர்ப்பு ஜீன் மற்றும் விஷ முறிவு ஜீன்களை தனியாக பிரித்தெடுப்பதன் ஊடாக மனிதர்களுக்கு வரக் கூடிய நோய்களை தடுப்பதற்கும், மாற்று மருந்து வகைகளை உருவாக்கவும் மற்றும் சுகாதாரக் கேடான அசுத்தமான இடங்களில் உருவாகும் கிருமிகளை கட்டுப்படுத்தவும் இவை பெரிதும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அன்று சொன்னது இன்று அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு ஈ உண்ணும் முறையை அதாவது உணவுப் பொருட்ளை நீர்ம கூழாக்கி நேரடியாக வயிற்றுக்கு அனுப்பும் செய்தியையும், அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் விஷமுறிவு நிவாரணியும் உள்ளது என்பதை படைத்த இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அறிவிக்க முடியாது.
“நிச்சயமாக இரவும்,பகலும் மாறி வருவதிலும், வானங்களிலும்,பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள அனைத்திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.” -அல் குர்ஆன்.10:6.