வானில் வலம் வரப் போகும் சூப்பர்சானிக் விமானம்

சூப்பர்சானிக் விமானம்ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்துடன் செல்லக்கூடிய சூப்பர்சானிக் விமானத்தை நாசா வடிவமைத்துள்ளது. அதிக ஓசையில்லாமல் பறக்கும் இந்த விமானத்தின் மூலம் வணிகரீதியிலான விமானப் போக்குவரத்தில் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நாசா ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

லாக்ஹீட் மார்ட்டின்ஸ் கங்க் வொர்க்ஸ் (Lockheed Martin Skunk Works) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து X-59 (X-59) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தை நாசா வடிவமைத்துத் தயாரித்துள்ளது.

இந்த விமானம் முதல்முறையாக சமீபத்தில் கலிபோர்னியா பாம்டேல் (Palmdale) என்ற இடத்தில் நடந்த நிகழ்வின்போது காட்சிப்படுத்தப்பட்டது. X-59 பரிசோதனை விமானம் ஒலியின் வேகத்தை விட 1.4 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும்.

இது 99.7 அடி அல்லது 30.4 மீட்டர் நீளம் உடையது. அகலம் 29.5 அடி. தட்டையாக்கப்பட்ட இதன் மூக்குப்பகுதி லேசானது. விமானத்தின் மொத்த நீளத்தில் இது மூன்றில் ஒரு பங்கு.

இந்த வகை சூப்பர்சானிக் விமானங்கள் பறக்கும்போது பேரிரைச்சல் (supersonic boom) ஏற்படுவதால் உருவாகும் அதிர்வலைகளை சிதறடிக்கவே இந்த விமானம் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சூப்பர்சானிக் பண்புகளை மேலும் மேம்படுத்த விமானிகள் அறை (cockpit) ஏறக்குறைய விமானத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற விமானங்களில் காணப்படுவது போல விமான முகப்பகுதியில் இருக்கும் சாளரங்கள் இதில் இல்லை.

“விமானத்தில் இருந்து எழும்பும் ஓசையைக் குறைக்கவே இவ்வாறு வடிவமைக்கப்பட்டது. வளர்ந்து வரும் விமானப் பொறியியல் துறையில் இது ஒரு மைல் கல். விமானிகள் அறையில் குறைவான காட்சிப்புலன் வசதியே இருக்கும் என்பதால் உயர் தர கேமராக்கள் பொருத்தப்பட்ட அதி நவீன திரைவசதியுடன் கூடிய வெளிப்புறக் காட்சிகளை துல்லியமாகக் காண உதவும் செயல்முறை (External Vision System) வசதி இதில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை இப்போது விமானங்களில் அவற்றின் முகப்பகுதியில் இருக்கும் சாளரங்களால் ஏற்படும் குறைபாடுகலை நீக்க உதவும். வருங்கால விமான வடிவமைப்பில் இது ஒரு முன் மாதிரியாகத் திகழும்” என்று விமானக் கட்டமைப்பில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி நாசாவின் துணை நிர்வாகி ஃபாம் மெல்ராய் (Pam Melroy) கூறினார்.

தலைக்கு மேல் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்

பறக்கும்போது அதன் பின்பக்கம் பெரும் சத்தத்தை எழுப்பக் காரணமாக இருக்கும் அதிர்வுகளைத் தடுக்க மென்மையான அடிப்பகுதியுடன் கூடிய என்ஜின் விமானத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது.

2024 இறுதியில் X-59 தன் சோதனை ஓட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிறகு இந்த விமானம் அமெரிக்காவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மீது பறந்து செல்லும். அப்போது உருவாகும் ஒலி பற்றிய மக்கள் கருத்துகள் கேட்டறியப்படும்.

பல மைல்களுக்கு அப்பால் இருந்தே இவை பறக்கும்போது வெளிவிடும் பேரோசையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி மக்கள் கவலை அடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஐம்பதாண்டுகளாக வணிகரீதியிலான சூப்பர்சானிக் விமானங்கள் அமெரிக்க நிலப்பரப்பின் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“X-59ன் ஆய்வகப் பரிசோதனைகள் அதிக ஓசை எழுப்பாத சூப்பர்சானிக் விமானத்தை வடிவமைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. என்றாலும் அன்றாடம் பறக்கும்போது நிலப்பகுதியில் இது எழுப்பும் ஒலியை மக்கள் கேட்டு தெரிவிக்கும் கருத்துகளைப் பொறுத்தே இதன் நிஜமான வெற்றி அமையும்.

மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பிடம் கூறப்படும். இதன் மூலம் இவை பறக்க உள்ள தடை விரைவில் அகலும்” என்று நாசா விமானப்பிரிவு ஆய்வுத்திட்ட இணை நிர்வாகி பாஃப் பியர்ஸ் (Bob Pearce) கூறுகிறார்.

“இதன் சோதனைப் பறத்தல் 2024 வசந்த காலம் அல்லது கோடையில் தொடங்கும். வடிவமைப்பில் பழுதுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை சரி செய்யப்படும். விமானத்தின் பகுதிகள் ஏதேனும் இயங்கவில்லை என்றால் அவை மாற்றப்படும்.

புதியவை பொருத்தப்படும். அதன் மூலம் விமானத்தின் நம்பகத் தன்மை, பாதுகாப்பு மற்றும் இது பறத்தலிற்கு உகந்தது என்பது உறுதி செய்யப்பட்டு பிறகு இதன் முதல் ஓட்டம் நடத்தப்படும்” என்று லாக்ஹீட் மார்ட்டின்ஸ் X-59 விமான ஆய்வுத் திட்ட இயக்குனர் டேவிட் ரிச்சர்ட்சன் (David Richardson) கூறுகிறார்.

இந்த முயற்சிகள் வெற்றி அடையும்போது அது விமானப் போக்குவரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/jan/12/nasa-lockheed-martin-reveal-x-59-quiet-supersonic-aircraft?

– சிதம்பரம் இரவிச்சந்திரன்

நன்றி

Leave a Reply

error: Content is protected by SARINIGAR.com!!