தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….?

தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….?தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….?

ஆதமுடைய மக்களே!… உண்ணுங்கள், பருகுங்கள்; வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன்7:31)

“நபி (ﷺ) அவர்கள் காற்றைவிட வேகமாக ரமழானில் தருமம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். மேலும் ரமளானில் நிறைவேற்றப்படும் தருமமே மேலான தருமம்” என்று கூறினார்கள். (திர்மிதி)

அன்புடைய சகோதரர்களே, ரமளான் மாதம் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதத்தில் இலாபங்களை அடைய முயற்ச்சி செய்வதுண்டு.

குறிப்பாக வியாபாரிகள் தங்களது வியாபரத்தை அதிகப்படுத்துவதிலும், அரசியல்வாதிகள் அதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த தம்மை கட்சித்தலைவர்களிடமும், மக்களிடமும் அறிமுகம் செய்தற்காவும் அவர்களை மகிழ்விப்பதற்கும் களமிறங்கும் போக்கை பார்க்கின்றோம்.

இவ்விருவரில் வியாபாரிகளைப் பொறுத்தவரையில் அவர்களுடைய வியாபாரம் ஹலாலாக இருந்தால் ரமளான் மாதம் எனும் கணக்கின் அடிப்படையில் அவர்களுடைய வியாபாரத்தில் பல்லாயிரம் மடங்கு பரக்கத்தை அபிவிருத்தியை அல்லாஹ் கொடுப்பான் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் இந்த அரசியல்வாதிகளின் செயல்களுக்கு…? அவர்களுக்கு தமது அடையாளமும், விளம்பரமும் பதவி மோகமும் தான் பெரிதாக இருக்கின்றது!

குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள்,…. இவர்கள் அரசியலில் எதற்காக குதித்தார்கள்?

தம்முடை சமுதாயம் நலன் பெற்று சீரடைய வேண்டும். பிறகு தம்மால் முடிந்தளவு மற்றவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்.

ஆனால் நம் அரசியல்வாதிகளால் இதையும் செய்ய முடியாது, அதையும் செய்ய முடியாது! குறிப்பாக எதையும் செய்து கிழிக்க முடியாது.

அவர்களுக்கு முடிந்தது எல்லாம் ஆட்சியாளர்களை மகிழ்விப்பதும், வக்காளத்து வாங்குவதும் அவர்களுக்கு புகழ்பாடுவதும் தான் முக்கிய குறிக்கோளாக உள்ளது!

அடுத்து வரும் தேர்தல்களில் தமக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்களுக்காக, தற்பொழுது தமக்கு கிடைத்திருப்பதில் குறை வந்துவிடக்கூடாது, தமது நடவடிக்கைகளில் குறை நடந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இருக்கின்றதே தவிர அல்லோலப்படும் சமுதாயத்திற்கு ஏதேனும் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு இவர்களுக்கு இருக்கின்றதா?

வேறெந்த சமூகத்தினரைவிடவும் முஸ்லிம் சமூகத்தவர்கள்தான் ரமளான் மாதத்தில் கையேந்தும் செயலில் முன்னனியில் உள்ளனர். குறிப்பாக நோன்பு மாதம் என்று வந்துவிட்டால் அவர்களில் பலர் படைதிரண்டு வருவதைப் பார்க்கின்றோம்.

ஸகாத் – ஸதகா என்ற பெயரைச் சொல்லி கிடைக்கும் 10 – 20 சில்லரை காசுகளுக்காக காலை முதல் மாலை வரை அலைந்து திரியும் இவர்களிடையே சிலர் நோன்பு நோற்காதவர்களும் உள்ளனர், சிலர் கஞ்சா போன்ற போதைபொருளை பாவித்தவாறு நடப்பதையும் மறுக்க இயலாது.

நான் இங்கு குறிப்பிட வருவது என்னவென்றால் வறுமையை மணிமகுடமாகச் சுமந்து கொண்டு நடைபோடும் இவர்களைத் தேர்ந்தெடுத்து உணவளிக்கும் நடிவடிக்ககைள் இலங்கையில் அல்லது தமிழகத்தில் எங்காவது உள்ளதா? எங்காவது நடக்குமா?

சில தனிநபர்கள் தம்மால் இயன்றளவு நடத்துவதைப் பார்த்திருக்கின்றோம், ஆனால் சமுதாயத் தலைவர்கள், மக்களின் பிரதிநிதிகள், என்ற போர்வையில் நடமாடும் அடையாள விரும்பிகளான முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பெரும் பெரும் வியாபாரிகள், போன்றோர்களுக்கு விருந்தளிக்கவே நேரம் காலமின்றி இருக்கும் போது எப்படி ஏழை முஸ்லிம்களை கவனிக்க முடியும்.

இதில் ஏன் இந்த அரசியல் வாதிகளை வம்புக்கிழுக்க வேண்டும் என்று கேட்கலாம். காரணம் உண்டு, இன்றைய நிலையில் உள்ள முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகளின் கொள்கைகளால் ஒரு போதும் ஒரு மாவட்ட அளவில் கூட நல்லாட்சியைத் ஏற்படுத்தும் திறன் கிடையாது என்பது தான் யதார்தமான உண்மை.

பசியுடன் தன் முஸ்லிமான சகோதரர்கள் பல்லாயிரம் பேர் இருக்கும் போது அவர்களுக்காக செலவிட வேண்டிய பொருளாதாரத்தை, பணத்தை ஒரு சில காபிர் தலைவர்களை அழைத்து வந்து ஆடம்பரமாக விரயம் செய்வதற்கு இவர்களுக்கு எப்படி மனம் வருகின்றதோ தெரியவில்லை!

நாளை மறுமை நாளில் நாம் பெற்ற ஒவ்வொன்றையும் பற்றி கேள்விகள் கேட்கப்படும் என்ற பயம், இறையச்சம் இருந்தால் நம் உறவுகளை ஒதக்கி விட்டு சுயநல அரசியல் இலாபங்களுக்காக இணை வைப்பவர்களையும், நிராகரிப்பாளர்களையும் அழைத்து வந்து ஆடம்பரமாக நோன்பு திறக்கச் செய்து மகிழ்வித்தால் இறைவன் சும்மா விட்டு விடுவானா?

யாரேனும் ஒருவர் அணுவளவு நன்மை அல்லது தீமை செய்தாலும் அதற்கு உரிய பிரதிபலன் கிடைக்காமல் இருக்காது என்று இறைவன் கூறியுள்ளான். ஆனால் இவர்கள் செய்வது அணுவளவிலான தீமையா? அல்லது அணு குண்டுகள் ஏற்படுத்தும் அளவிலான தீமைகளா என்பதை உணராமல் செயலாற்றுவது என்னவென்று கூறுவது?

முஸ்லிம் எளியவர்ளுக்கு இவர்களால் வழங்க வேண்டிய தேவை இல்லை என்று விட்டுவிடுவோம். சும்மா இருந்துவிடலாம் தானே? ஏன் எதற்காக காபிர்களை அழைத்து தடல்புடலாக வழங்குகின்றார்கள்? அதுவும் விஷேட நோன்பு திறப்பு (இப்தார்) என்ற ஏமாற்றுப் பெயரில்…..

அரசியல் வாதிகளையும், பெரும் செல்வந்தர்களையும் அழைத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம், இவர்கள் இறைவனை ஏமாற்றுகின்றார்களா? அல்லது அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றுகின்றார்களா?

இதற்கு சிலர் ஏமாற்றுதலுக்கு மேல் ஏமாற்றாம் செய்யும் ஒரு பதிலையும் கூறுவார்கள், அதாவது நோன்பின் மாண்பை பற்றி அவர்களிடம் எடுத்து கூறுவதற்கு நாங்கள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகின்றோம் என்று கூறுவார்கள். அதை தமக்குத்தாமே அவர்கள் சொல்லி ஏமாந்து கொள்ளட்டும். இறைவன் என்றும் ஏமாறப் போவதில்லை!

இஃப்தார் வேடிக்கைகளில் சில….

இப்தார் கஞ்சியை, உணவை விழுங்க வரும் ஆண் அரசியல் வாதிகளின் தலையில் ஒரு ஸ்பெஷல் தொப்பி இருக்கும். இப்தார் விழுங்க வரும் பெண் அரசியல் வாதிகளின் தலையில் எந்த மறைவும் இருக்காது,

நோன்பாளிக்கு வழங்கி நன்மையை தேடிக் கொள்ள வேண்டிய இப்தாரை, நம் முன்னோர் யாரோ பசி, பட்டிணி என்றால் என்ன என்பதையே அறிந்திராத அரசியல்வாதிகளுக்கு அளிக்க நாளடைவில் அது முஸ்லிம்களே இல்லாமல் நடத்தும் அளவுக்கு மாறிவிட்டது.

முஸ்லிம்களை அடியோடு கருவறுக்கத்துடிக்கும் மாற்றுமத இனவாத அரசியல்வாதிகள் கூட இப்தார் விழுங்கியதுண்டு.

அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் இந்த கஞ்சியும், சமோஸாவும் வேறு பிரபலங்களுக்கு அவ்வளவாக கிடைப்பது இல்லை என்பதிலிருந்து இது வெறுமனே ஓட்டுக்காக மக்களையும், சீட்டுக்காக அவர்களையும் ஏமாற்றும் விளம்பர மோசடி நாடகம் என்பதை தௌிவாக விளங்கிக் கொள்ளலாம்.

இதற்கு இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. கிடைக்கப்போகும் தண்டனையை தான் தாங்க முடியுமா?

இம்மையின் அற்பமான பதவி மறுமையின் பாக்கியமிக்கப் பதவியை மறக்கடிக்கச் செய்கின்றது. ஒரு போதும் அந்த நிலைமையை நம் சமுதாயத்தவர்களுக்குத் கொடுக்காமல் இறைவன் பாதுகாக்க வேண்டும்.

இறைவன் யாருக்கு தன் பாக்கியங்களையும், நேர்வழியையும் நாடுகின்றானோ அவர்களைத் தவிர மற்றவர்களின் பக்கம் எவராலும் இறைவனின் அருட்கொடைகளை திருப்பி விட முடியாது.

சில மாற்று மத சகோதர்களும் கூட முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுக்கின்றனர்.

இப்தார் யாருக்குக் கொடுக்க வேண்டும். எப்போது கொடுக்க வேண்டும் என்ற மாற்று மத சகோதர்களிடம் உள்ள அடிப்படை அறிவு கூட நமது சமூகத்தில் பெயரலளவில் முஸ்லிம் தலைவர்கள் என்று நடமாடும் சுயனலவாதிகளுக்கு இல்லாமல் போனது வினோதமாக உள்ளது!

– அபூ நூறா –


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy Policyநோன்பு ஒரு விருந்தாளியல்ல….

Tumblr


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “தேவையா இவர்களின் ”இந்த” இப்தார்…….?

Leave a Reply

error: Content is protected !!