நோன்பு நோற்பதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டவர்கள்

நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்
இஸ்லாத்தின் நான்காவது கடமையான நோன்பு நோற்பது என்பது கட்டாயக் கடமை என்றாலும் சிலருக்கு நோன்பு நோற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிவிலக்கானது நிரந்தரமான விதிவிலக்கு, தற்காலிகமான விதிவிலக்கு என இரு வகைகளாக உள்ளது.

தற்காலிகமான விதிவிலக்கைப் பெற்றவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பை விட்டதற்கு பகரமாக ஏனைய மாதங்களில் நோன்பு நோற்று விட வேண்டும்.

நிரந்தர விதிவிலக்குப் பெற்றவர்கள் பிற்பட்ட மாதங்களில் கூட அதை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. இவர்கள் ஒவ்வொரு நோன்பை விடுவதற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிப்பதே போதுமானதாகும்.  அவர்கள்,

  1. தள்ளாத வயதினர்,
  2. நோயாளிகள்,
  3. பயணிகள்.

01. தள்ளாத வயதினர்

இவர்கள் நிரந்தரமாக விதிவிலக்குப் பெற்றவர்கள். வயோதிபம் காரணமாக நோன்பு நோற்பதற்கு இயலாத நிலையில் உள்ளதால் எதிர் காலத்தில் கூட இவர்களால் நோன்பை களாச் செய்ய இயலாது. ஏனெனில் எதிர் காலத்தில் இன்னும் அதிக முதுமையில் இவர்கள் இருப்பார்கள்.

இவர்களுக்கு நோன்பை விட்டு விடலாம்.  எனினும் அதற்குரிய பரிகாரத்தைச் செய்ய வேண்டும்.

“நோன்பு நோற்பதற்கு சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம்” என்ற (2:184) வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (رضي الله عنه) அவர்கள் கூறும் போது, இது முழுமையாக மாற்றப்படவில்லை. நோன்பு நோற்கச் சக்தியற்ற வயோதிபர்கள் ஒரு நாள் நோன்புக்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.  (நூல்: புகாரி 4505)

இப்னு அப்பாஸ் (رضي الله عنه) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால் தான் அதன் முழு விளக்கத்தைப் பெற முடியும்.

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப கால-கட்டத்தில் குறிப்பிடப்பட்ட சலுகையுடன் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது.

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் தான் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு அதற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பது தான் அந்தச் சலுகை!

நல்ல திடகாத்திரமாக நோன்பு நோற்பதற்கு சக்தி பெற்றவர்கள் கூட நோன்புக்குப் பதிலாக ஏழைக்கு உணவளித்து வந்தனர்.

பின்னர், ரமழான் மாதத்தை அடைந்து கொள்பவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும் என்ற இறை வசனம் அருளப்பட்டதும் குறிப்பிட்ட அந்தச் சலுகை நீக்கப்பட்டு விட்டது.

சக்தி பெற்றவர்கள் கட்டாயம் நோன்பை நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன் மூலம் நடைமுறைக்கு வந்தது.

இதைத் தான் இப்னு அப்பாஸ் (رضي الله عنه) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்கள் சம்பந்தமாக மாற்றப்பட்டாலும், தள்ளாத வயோதிபர்களைப் பொறுத்த வரை அது மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ் (رضي الله عنه) கூறுகின்றார்கள்.

ஏழைக்கு உணவளிக்க வேண்டும் எனில் எதை உணவாக அளிப்பது? எந்த அளவுக்கு உணவளிப்பது? என்பது சம்பந்தமாக அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறை எதையும் செய்யவில்லை.

ஒவ்வொரு நாடுகளிலும், பகுதிகளிலும் உணவுப் பழக்கம் வெவ்வேறு விதம் என்பதால் இதை வரையறை செய்யாமல் விட்டிருப்பது தான் பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு பகுதியினரும் எதைத் தமது பிரதான உணவாக உட்கொள்கின்றனரோ அதை வழங்க வேண்டும் என்றபடியால் இது குறித்து விரிவாகப் பேசப்படவில்லை. இன்னும் சில பகுதிகளில் தினமும் மூன்று வேளை சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். சில பகுதிகளில் இரு வேளை சாப்பிடும் பழக்கம் இருக்கலாம். ஒரே ஒரு வேளை மட்டும் சாப்பிடும் பழக்கம் கொண்ட பகுதிகளும் இருக்கலாம்.

நமது நாட்டைப் பொறுத்த மட்டில் ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாக காணப்படுகின்றது. எனவே ஒரு நோன்பை விட்டதற்கு பகரமாக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான சிறந்த வழிமுறையாகும்.

ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு உணவு அளிப்பது என்பது வசதியுள்ளவர்களுக்கு தான் சாத்தியமாகும். அதற்கு சாத்தியமில்லாதவர்கள் சமூகத்தில் கணிசமான தொகையினர் உள்ளனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் (ﷻ) சிரமப்படுத்துவது இல்லை என்று அல்லாஹ்வே (ﷻ) கூறியுள்ளான். (பார்க்க: அல்-குர்ஆன் 6:152, 7:42, 23:62, 2:286, 65:7, 2:223)

ஒரு நபித்தோழர் வேண்டுமென்றே நோன்பை முறித்து விட்டு, நபிகள் (ﷺ) அவர்களிடம் வந்த போது, அவரிடம் பரிகாரம் செய்ய ஏதுமில்லை என்பதை அறிந்த நபி (ﷺ) அவர்கள் சலுகை வழங்கியுள்ளார்கள்.

மேற்கண்ட இறை வசனத்தின் அடிப்படையிலும், இந்த நபி வழியின் அடிப்படையிலும் நோன்பு நோற்கச் சக்தியில்லாதவர்கள், ஏழைக்கு உணவு அளிப்பதற்கும் சக்தி பெறவில்லை என்றால் அவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் அல்லாஹ்விடம் (ﷻ) குற்றவாளிகளாக ஆக மாட்டார்கள்.

அவர்கள் ஆரோக்கியமாக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து நோன்பைக் கடைப்பிடித்து வந்திருந்தால் தள்ளாத வயோதிப வயதில் நோன்பு நோற்காதிருந்தாலும் நோன்பு நோற்றதற்கான நன்மையை அல்லாஹ் (ﷻ) அவர்களுக்கு வழங்குவான்.

நாங்கள் நபி (ﷺ) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம். அப்போது நபி (ﷺ) அவர்கள், மதீனாவில் சிலர் உள்ளனர். உங்களின் கூலியில் அவர்களும் பங்காளிகளாக உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களை (யுத்தத்திற்கு வரவிடாமல்) தடுத்து விட்டது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (رضي الله عنه), நூல்: புகாரி 2839, 4423)

இறைவன், அடியார்கள் விடயத்தில் எவ்வளவு கருணையுடையவன் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது. வயோதிப முதுமை காரணமாகத் தான் நோன்பை விட்டு விட்டார்கள் என்றால் அவர்களது நல்ல எண்ணத்திற்கு அமைய அல்லாஹ் (ﷻ) கூலி வழங்குவான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முதுமை என்பதை வயது சம்பந்தப்பட்டதாக மட்டும் கருதக் கூடாது. சிலர் என்பது வயதிலும் திடகாத்திரமாக, சக்தியுடையவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அறுபது வயதிலேயே தளர்ந்து, சக்தியற்றவர்களாகி விடுவார்கள்.

வயோதிப முதுமையுடன் நோன்பு நோற்பதற்கு முடியாத சக்தியற்ற நிலையும் சேர்ந்தால் தான் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதே தவிர குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் குறித்த விதிவிலக்கு இருப்பதாக எண்ணி விடக் கூடாது.

02. நோயாளிகள்

நோயாளிகளைப் பொறுத்த வரையில் இரண்டு வகையினர் உள்ளனர். புற்று நோய் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு உள்ளானவர்களும் இருப்பார்கள்.

தீரக் கூடிய, குணமாகக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பு நோற்காமல், தனது நோய் குணமான பின் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.

நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:184)

நோயுற்றவர்கள் தங்களைத் தாங்களே வருத்தி கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் அல்லாஹ் (ﷻ) வழங்கிய சலுகையை ஏற்றுச் செயல்பட வேண்டும்.

நோன்பு நோற்பதால் மரணம் வரும் அல்லது இருக்கின்ற நோய் இன்னும் அதிகரிக்கும் என்ற நிலையில் நோன்பு நோற்றால் அவர்களது செயல் இறைவனிடம் நன்மையாகப் பதிவு செய்யப்படாது. அது அதிகப் பிரசங்கித் தனமாகத் தான் கருதப்படும்.

இது தான் உயர்ந்த சிறந்த நிலை என்றால் அதை அல்லாஹ்வோ (ﷻ) அவனது தூதர் நபி (ﷺ) அவர்களோ குறிப்பிட்டிருப்பார்கள்.

பிரயாணம் செய்வோர் வேறு மாதங்களிலும் நோன்​பை நோற்கலாம் என்று கூறியது போல் நோயாளிகள் விடயத்தில் அல்லாஹ்வும் (ﷻ), அவனது தூதர் நபி (ﷺ) அவர்களும் ஏதும் கூறவில்லை.

தீராத குணப்படுத்த முடியாத நோய்களுக்கு ஆளானவர்கள் இன்னொரு நாளில் நோன்பை நோற்க இயலாது. ஏனெனில் தீராத நோய் மேலும் அதிகப்பட்டிருக்கும்.

இவர்கள் தாம் விட்ட நோன்பிற்காக ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்கான நேரடியான ஆதாரம் ஏதுமில்லை.

எனினும் முதியவர்களின் நிலையுடன் இவர்களது நிலையும் ஒத்திருப்பதால் இவர்களும் ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

நேரடியான ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில் இதைக் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் தமது பேணுதலுக்காக, திருப்திக்காக இதை ஏற்றுச் செயல்படலாம்.

03. பயணிகள்

பிரயாணிகளுக்கு அல்லாஹ் (ﷻ) சலுகை வழங்கியுள்ளான்.

நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:184)

இந்தச் சலுகை தற்காலிகமானது தான். ஏனெனில் பிரயாணங்கள் என்பது சில நாட்களில் முடிந்து விடக் கூடிய ஒன்றாகும்.

பிரயாணிகளுக்குச் சலுகை வழங்கப்பட்டது சம்பந்தமாக விரிவான பல செய்திகள் உள்ளன. அவற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பிரயாணிகள் என்றால் ரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணித்துக் கொண்டிருப்பவர் மட்டும் தான் என்று நாம் புரிந்து கொள்ளக் கூடாது. இவர்களும் பயணிகள் தான் என்றாலும், இன்னும் பலரையும் பயணிகள் பட்டியலில் நபி (ﷺ) அவர்கள் சேர்த்துள்ளார்கள்.

ஒருவர் தனது சொந்த ஊரிலேயே இருக்கின்றார். அவர் நாளை காலை பத்து மணிக்கு வெளியூர் செல்வதாகத் தீர்மானிக்கின்றார். இவரும் பயணி என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்.

பண்டைய மிஸ்ர் எனும் நகரில் நான் அபூ புஸ்ரா என்ற நபித் தோழருடன் கப்பலில் ஏறினேன். அப்போது காலை உணவைக் கொண்டு வரச் செய்தார்கள்.

என்னையும் அருகில் வரச் சொன்னார்கள். அப்போது நான், நீங்கள் தற்பொழுது ஊருக்குள் தானே இருக்கின்றீர்கள்? (ஊரின் எல்லையைக் கடக்கவில்லையே) என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,

நபி (ﷺ) அவர்களின் வழிமுறையை நீங்கள் புறக்கணிக்கப் போகிறீரா? என்று திருப்பிக் கேட்டார்கள். (அறிவிப்பவர்: உபைத்-பின்-ஜப்ர், நூல்கள்: அஹ்மத் 25974, அபூதாவூத் 2059)

ஒருவர் ஊரின் எல்லையைத் தாண்டா விட்டாலும், அவர் பயணத்திற்கு தயாராகி விட்டாலே அவரும் பயணியாகி விடுகின்றார்.

பிரயாணிகளுக்கு உரிய சலுகையை அவரும் பெற்றுக் கொள்கின்றார் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

ஒருவருக்கு நோன்பு நோற்றவராக இருக்கும் போது பிரயாணம் செய்யும் நிலை ஏற்படுகின்றது. தான் நோற்ற நோன்பை முறித்து விட இவருக்கு அனுமதி உண்டு. இதனால் எந்தக் குற்றமும் ஏற்படாது.

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நபி (ﷺ) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களுடன் சென்ற மக்களும் நோன்பு நோற்றவர்களாக இருந்தார்கள்.

குராவுல் கமீம் என்ற இடத்தை அடைந்த போது, மக்களுக்கு நோன்பு  சிரமமாக உள்ளதால் உங்கள் முடிவைத் தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபி (ﷺ) அவர்களிடம் கூறப்பட்டது.

அஸர் தொழுகைக்குப் பின் நபி (ﷺ) அவர்கள் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டு வரச் செய்தார்கள். மக்கள் பார்க்கும் விதமாக அந்த தண்ணீரை அருந்தினார்கள். அதைப் பார்த்த சிலர் நோன்பை விட்டனர்.

வேறு சிலர் நோன்பைத் தொடர்ந்தனர். சிலர் மட்டும் நோன்பைத் தொடர்வது பற்றி நபி (ﷺ) அவர்களுக்குத் தெரிய வந்த போது, அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (رضي الله عنه), நூல்: முஸ்லிம் 1878)

ரமளான் நோன்பை நோற்ற பின்னர் பிரயாணம் ஒன்றை மேற்கொண்டால் அந்த நோன்பை முறித்து விடக் கூடாது என்று சில மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த ஹதீஸ் அவர்களின் கருத்துக்கு எதிராக நிற்கின்றது. இதனால் அவர்கள் இந்த ஹதீசுக்குப் புதுமையான ஒரு விளக்கம் கொடுத்து தங்கள் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

நபி (ﷺ) அவர்கள் பயணம் மேற்கொண்ட பின்னர் (பயணத்திலேயே) நோன்பு நோற்றிருப்பார்கள். பயணத்தில் நோற்ற நோன்பு என்பதால் தான் நோன்பை முறித்தார்கள்.

மதீனாவிலேயே நோற்ற நோன்பு என்றால் அதை நபி (ﷺ) அவர்கள்  முறித்திருக்க மாட்டார்கள் என்பது தான் அவர்களினது விளக்கம். இந்த விளக்கம் முற்றிலும் தவறானதாகும்.

குறிப்பிட்ட ஹதீஸின் ஆரம்பத்தைக் கவனித்தால் நபி (ﷺ) அவர்கள் நோன்பு வைத்தவர்களாகத் தான் மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இடை வழியில் நபி (ﷺ) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறுவதற்கு குறிப்பிட்ட ஹதீஸின் துவக்கம் இடம் தரவில்லை.

அத்துடன் மதீனாவுக்கு அருகில் உள்ள இடமாக குராவுல் கமீம் என்ற இடம் காணப்படுகின்றது. மதீனாவிலிருந்து புறப்பட்டு இரவில் தங்கி விட்டு, மறுநாள் அடையும் தொலை தூரத்தில் குராவுல் கமீம் என்ற இடம் அமைந்திருக்கவில்லை.

காலை வேளையில் புறப்பட்டு அஸர் நேரத்தில் வந்து சேர்ந்து விடக் கூடிய அளவுக்கு அருகில் தான் குராவுல் கமீம் என்ற இடம் உள்ளது. எனவே நபி (ﷺ) அவர்கள் நோன்பாளியாகத் தான் புறப்பட்டார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லால் அறிய முடியும்.

எனவே பயணத்தின் போது நோற்ற நோன்பாக இருந்தாலும், அல்லது தமது ஊரில் நோன்பு நோற்று விட்டுப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்தாலும் இரண்டு நோன்பையும் முறித்து விட பிரயாணிகளுக்கு அனுமதி இருக்கிறது என்பதே சரியான கருத்தாகும்.

பிரயாணத்தில் நோன்பை விட்டு விடுவது அனுமதிக்கப்பட்டதா? அல்லது கண்டிப்பாக விட்டு விட வேண்டுமா?

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில், நோன்பை முறிக்காத மக்களைப் பற்றி குற்றவாளிகள் என்று நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே பிரயாணத்தின் போது நோன்பைக் கட்டாயம் முறித்தாக வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். அவ்வாறு வாதம் புரிவதற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட அந்த ஹதீஸ் அமைந்திருப்பதும் உண்மை, எனினும் வேறு பல ஆதாரங்ளைக் காணும் போது அவ்வாறு கருத முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் பயணத்தின் போது நோன்பு நோற்கலாமா? என்று நபி (ﷺ) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர் (رضي الله عنه) கேட்டார். அதற்கு நபி (ﷺ) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டு விடு என விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா  (رضي الله عنها), நூல்: புகாரி 1943)

நான் அபூஸயீத் அல்-குத்ரீ (رضي الله عنه) அவர்களிடம் பயணத்தின் போது நோன்பு நோற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், நாங்கள் நோன்பு நோற்றவர்களாக மக்காவை நோக்கிப் புறப்பட்டு சென்றோம். ஒரு இடத்தில் இளைப்பாறினோம்.

அப்போது நபி (ﷺ) அவர்கள், நீங்கள் எதிரிகளை நெருங்கி விட்டீர்கள். எனவே நோன்பை விடுவதே உங்களின் உடலுக்குப் பலமாக இருக்கும் என்று கூறினார்கள். ( நோன்பை விட்டு விடுங்கள் என்று நபி (ﷺ) அவர்கள் கட்டளையாகக் கூறாததால்) நாம் இதைச் சலுகையாகக் கருதிக் கொண்டோம்.

எங்களில் சிலர் நோன்பு நோற்றோம். வேறு சிலர் நோன்பை விட்டு விட்டோம். பின்னர் மற்றோர் இடத்தில் இளைப்பாறினோம். அப்போது நபி (ﷺ) அவர்கள், விடிந்தால் நீங்கள் எதிரிகளைச் சந்திக்கவுள்ளீர்கள். நோன்பை விடுவதே உங்களின் உடலுக்குப் பலம் சேர்க்கும். எனவே நோன்பை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.

அங்கு அவர்கள் கட்டளையிட்டதால் இப்போது நாங்கள் அனைவருமே நோன்பை விட்டு விட்டோம். இதன் பிறகு (பல சந்தர்ப்பங்களில்) நபி (ﷺ) அவர்களுடன் நோன்பு நோற்றவர்களாகப் பயணம் செய்துள்ளோம் என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: கஸ்ஆ, நூல்: முஸ்லிம் 1888)

நோன்பை முறிக்காதவர்களைக் குற்றவாளிகள் என்று நபி (ﷺ) அவர்கள் எந்தப் பயணத்தின் போது கூறினார்களோ அதே பயணத்தின் தொடர்ச்சியைத் தான் அபூஸயீத் அல்குத்ரீ (رضي الله عنه) விளக்குகின்றார்கள். இதன் பிறகு பல பயணங்களின் போது நாங்கள் நோன்பு நோற்றுள்ளோம் என்று கூறுகிறார்கள்.

பயணத்தின் போது நோன்பு நோற்பதானது குற்றம் என்றால் இதன் பிறகு நபி (ﷺ) அவர்களுடன் மேற்கொண்ட பயணங்களின் போது நோன்பை நோற்றிருக்க மாட்டார்கள்.

மேலும் இந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே நபித் தோழர்களில் சிலர் நோன்பு நோற்றுள்ளனர் என்பதும் இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகின்றது. பயணத்தின் போது நோன்பை விடுவது என்பது சலுகை தானே தவிர அது கட்டாயமில்லை என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

Assalamu Alaikkum!
Subscribe to our Sarinigar site to get more useful articles like this soon.
Also like our Facebook Page and WhatsApp channel.
Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply