முஸ்லிம்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?

முஸ்லிம்கள் வீட்டில் நாய் வளர்க்கலாமா?நாய் வளர்க்கப்படும் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி மாறுபடும். செல்லப் பிராணிகளை வளர்க்கும் நோக்கத்துடன் இஸ்லாத்தில் நாய் வளர்க்க அனுமதி இல்லை.

“எந்த வீட்டில் நாயோ அல்லது உருவப்படமோ உள்ளதோ அங்கு மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூ தல்ஹா(ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மேலும், “நாய் வளர்ப்பவர்கள் தினமும் இரண்டு கீரத் அளவு (இரு மடங்கு உகது மலையளவு) தனது நன்மைகளை இழக்கின்றார்.” என்று நபி (ﷺ) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) | நூல்:புகாரி)

மேற்படி இரு ஹதீஸ் அறிவுப்புகளின் மூலம் இஸ்லாத்தில் நாய் வளர்ப்பதற்கு அனுமதி கிடையாது என்பதை நேரடியாக விளங்கிக் கொள்ளலாம்.

எனினும் இத்தடையானது விவசாயம், பாதுகாப்பு நடவடிக்கைகள், வேட்டையாடுதல் போன்ற காரணங்களுக்காக நாய் வளர்ப்பதை இஸ்லாம் தடை செய்யாது என்பதை கீழ்கண்ட அறிவிப்பின் வாயிலாக அறிய முடியும்.

“கால்நடை பாதுகாப்பு, விவசாயம் மற்றும் வேட்டையாடுதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் நாய் வளர்க்கலாம்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) | நூல்கள்: முஅத்தா,திர்மீதி, நஸயீ.)

எனவே மேலே கூறப்பட்ட காரணங்ளைத் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டில் நாய் வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி கிடையாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

கனடா நாட்டில் ஒன்டாரியோவிலிருக்கும் டொரன்டோ இஸ்லாமியக் கல்விக் கழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞரும் விரிவுரையாளருமான ஷேக் அஹமது குட்டி அவர்கள் மேற்படி ஹதீஸ்களை ஆராய்ந்து பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

கீழ்க்கண்ட காரணங்களுக்காக மட்டுமே நாய்கள் வளர்க்கப்படலாம்:

1. வேட்டைக்குப் பயன்படுத்துதல். (இன்றைய கால கட்டத்தில் இது நடைமுறையில் வராது. மேலும் பொழுது போக்கிற்காக வேட்டையாடுதலை இஸ்லாம் தடை செய்ள்ளது)

2. வழிகாட்டியாக நாய்களைப் பயன்படுத்துதல்.

3. காவல் துறையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் வெடி குண்டுகள், போதைப் பொருட்களைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்துதல்.

4. சொத்துகளைப் பாதுகாக்கும் நோக்கில் காவலுக்காகப் பயன்படுத்துதல்.

5. கால்நடைகளை ஓரிடத்தில் ஒன்றுதிரட்ட நாய்களைப் பயன்படுத்துதல்

மேற் கூறிய காரணங்ளைத் தவிர வெறுமனே செல்லப் பிராணியாக மட்டும் நாய்களை வளர்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது.

(الله أعلم – அல்லாஹ் நன்கு அறிந்தவன்)


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!