வசதியை பார்த்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம் – சதாரணமாக ஒவ்வொரு ஊரிலும் 35 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்கள் இருப்பார்கள்.
அதே போல் 30 வயதை கடந்தும் திருமணம் நடக்காமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் இருப்பார்கள்.
இதற்கு பெரும்பாலும் சொத்து செல்வமும், வரட்டு கௌரவமுமே காரணமாக இருக்கும்.
அதாவது மனமகனுக்கு அடிப்படை வீடு, சொத்து, தோட்டம் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை. அல்லது பட்டப்படுப்பு முடித்து அரச உத்தியோகம் பார்க்க வேண்டும்.
அல்லது பெரும் கம்பெனியில் உயர்ந்த வேலையில் இருக்க வேண்டும். குறைந்தது 60 – 80 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்க வேண்டும்.
பல இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கேற்ற தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல், சுயதொழில், வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்து கொள்ள பெண்கள் விரும்புவது இல்லை. பெண் வீட்டாரும் விரும்புவது இல்லை.
அத்துடன் வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும். 1990 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, செல்வம், உத்தியோகம், தகுதிகள் பார்த்து தான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தார்களேயானால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.
இங்கு தற்போது பிரச்சனை என்ன என்றால் அதிகமாகன எதிர்பார்ப்புகள் காரணமாக திருமணத்துக்கான வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான். சரி இதன் விளைவுகள் என்ன என்று பார்ப்போம்…
1970 ற்கு முன்பு வரை ஒவ்வொரு ஊரிலும் பலருக்கு 8-10 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகளை சர்வ சாதாரணமாக பெற்று வளர்த்துக் கொண்டார்கள்.
1990 க்கு பின் சுமார் 100 குடும்பங்களில் 80 குடும்பம்கள் இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொண்டார்கள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று நான்கு குழந்தைகள் உண்டு.
2000க்கு பின்னர் குடும்பத்திற்கு ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.
ஆனால், 2010க்கு பின்னர் ஒரு குழந்தையாவது வேண்டுமே இறைவா என்று போகாத இடம் இல்லை, பார்க்காத வைத்தியர் இல்லை. என்ற நிலையில் இருக்கின்றோம். இதற்கு அறிவியலில் ஆயிரம் காரணம் சொல்லலாம், எனினும் முதல் காரணம் ஆரோக்கியம்.
1960 வரை ஆணுக்கு 20 வயது, பெண்ணுக்கு 16 வயதில் திருமணம் நடக்கும் – உணவு: கம்பு, சோளம், ராகி.
1980க்கு மேல் ஆணுக்கு 22, பெண்ணுக்கு 18ல் திருமணம், – உணவு: அரிசி, மரவள்ளி, அரிச மா.
1990க்கு மேல் ஆணுக்கு 25, பெண்ணுக்கு 20ல் திருமணம், – உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.
2000க்கு மேல் ஆணுக்கு 30க்குள், பெண்ணுக்கு 25ல் திருமணம், – உணவு: துரித உணவுகள்.
2010க்கு மேல் – உணவு: மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகள், அதிகமான வெள்ளை சர்க்கரையின் பயன்பாடு. தரம் குறைந்த எண்ணெயால் தயாரிக்கப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்களினால் மனித இனம் நோய்கள் மற்றும் மலட்டுத் தன்மை தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 28 வயதுக்கு மேல் 35 வயதையும் தாண்டி விவாகம் ஆகாத பெண்கள் அதிகளவில் இருக்கின்றார்கள். அதே போல் ஆண்களும் 30 வயது முதல் 40-45 வயது வரை விவாகம் ஆகாமல் இருக்கின்றார்கள்.
திருமணவாதற்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் செல்வம், புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம். ஆரம்பத்தில் பணம், வசதி, அந்தஸ்த்து என வாழ்ந்து திருமணமானதன் பின்னர் சில வருடங்களில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.
எனவே, எதிர்க்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானிக்காமல், திறமையும், நல்லதையும் மட்டும் நினைத்து உள்ளங்கள் பிடித்திருந்தால் விவாகம் செய்து கொள்ளலாம்.
சற்று யோசித்துப் பாருங்கள். குடும்ப வாழ்க்கை என்பது எந்தளவு முக்கியம் அதற்கு பணம் அவசியம் தான். ஆனால், பணத்தால் மட்டும் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது.
அவசியமான கல்வியறிவு, நற்குணம், நல்லொழுக்கம், நல்ல சுறுசுறுப்பு, திறமை, உழைக்கும் மனப்பான்மை உள்ள ஆணா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள். வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
திருமணம் செய்து கொள்வதற்கு முன் இவை அனைத்தையும் பற்றி சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.