விவாகரத்தும் கற்கத் தவறிய இல்லற வாழ்க்கையும்

விவாகரத்தும்
எங்கு பார்த்தாலும் எனது வாழ்க்கையில் நிம்மதியில்லை, எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்ற கருத்தோங்கியுள்ள ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இல்லற வாழ்வை பொருத்தமட்டில் குறிப்பாக ‘மனைவிக்கு கணவனைப் பிடிக்கவில்லை. கணவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை. அதனால் விவகரத்து (தலாக்) நடந்து விட்டது’ என்ற செய்திகள் சர்வ சாதாரணமாகிப் போய்விட்டது.
நீதிமன்றங்களில் தோறும் விசாரணைக்கு வரும் வழக்குகளில் “விவாகரத்து வழக்குகள்” தான் அதிக இடத்தைப் பிடித்து வருகின்றன. ஏன் இந்த அவல நிலை என்பதை சற்று ஆராய வேண்டிய விடயமாக காணப்படுகின்றது.
திருமணமான புதுத் தம்பதியர்களை கவனித்துப் பார்த்தால்! மனைவிக்காக கணவனும், கணவனுக்காக மனைவியும் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். சிறுது காலம் காடந்ததும் தான் இப்படிப்பட்டவர்கள் ஒருவரை மற்றவர் வெறுத்து ஒதுக்கி விவாகரத்து வேண்டி நிற்கும் அளவிற்கு மாறிவிடுகிறார்கள்.

இதற்கு என்ன காரணம்?

திருமண பந்தத்தில் இணையும் தம்பதியர் அனுபவரீதியாக கூட்டுக் குடும்பத்தைப் பற்றி தெறியாதவர்கள். பெரும்பாலும் அவர்கள் தமது பெற்றோர்களிடம் அதிக சுதந்திரங்களையும், உரிமைகளையும் பெற்றவர்களாகவே வளர்ந்து விடுகிறார்கள்.
சிலர் பிறந்தவீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து விடுவதையும் பார்க்கலாம். இப்படியாக வளரும் பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுப்பதும் அடுத்தவருடன் ஒத்துப்போவதும அவ்வளவு எளிதில் வருவதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே காணப்படுகின்றன.
​பெரும்பாலான விவாகரத்துகளுக்கு வலுவான தகுந்த காரணங்கள் இருக்கின்றதா என்பதை ஆராயும் போது அங்கு அதிர்ச்சியான சில அற்பமான காரணங்களே காணப்படுகின்றன.
சில வேளைகளில் கணவன் மற்றும் மனைவியின் பெற்றோர்களே விவாகரத்துக்கு மிக பிரதான காரணகர்த்தாவாக இருக்கின்றனர். சிறு, சிறு பிரச்சனைகளைக் கூட பெரும் பிரச்சனையாக மாற்றி விவாகரத்துக்கு கொண்டு செல்கின்றனர்.
தீர்வு காண முடியாத பிரச்சினைகளாயினும் ஏதாவது தீர்வு காண முயற்சி செய்தும், தீர்வுகள் எதுவுமே கிடைக்காத நிலையில் கையிலெடுக்க வேண்டிய கடைசி தீர்வே விவாகரத்தாக இருக்க, சிலருக்கு அற்பத் தனமான சில்லறைப் பிரச்சினைக்கெல்லாம், விவகரத்தே ஒரு தீர்வாக மாறிவிட்டது.
விவாகரத்துகள் சர்வ சாதாரணமான விடயமாக போனமைக்கு பலவித காரணங்கள் சமூகத்தில் காணப்பட்டாலும், முக்கியக் காரணமாக “எதிர்பார்ப்புகள்” என்ற விடயம் முக்கிய காரணியாக காணப்படுகின்றது.

காரணிகள்:-

01)  மனைவியிடம் கணவனுக்கும், கணவனிடம் மனைவிக்கும் எதிர் பார்ப்புகள் இருப்பதில் தவரில்லை. ஆனால் அது அவரவர் தகுதிக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளாக அமைய வேண்டும்.
இன்றைய பல தம்பதிகள் “படங்களிலும், கதைகளிலும், புத்தகங்களிலும் தான் பார்த்ததை அல்லது படித்ததைப் போன்ற துனைத் தான் தனக்கு கிடைத்திருக்க வேண்டும்” என்று எதிர்பார்பதினால், இன்பங்களின் இனிமையிழந்து, அன்பின் அருமையைத் மறந்து, அழகானதை அசிங்கமாகப் பார்த்து வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
02) கணவன் தன் மனைவியின் எதிர்பார்ப்புகளை, தேவைகளைப் புரிந்து கொள்ளமாட்டார். அதே போல் மனைவி தன் கணவனுடைய ஆசைகளைத் தேவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்.
ஆனால் மனைவி தன்னைப் புரிந்து கொள்வதேயில்லை என்று கணவனும், கணவன் தன்னைப் புரிந்து கொள்வதேயில்லை என்று மனைவியும் தமது வாழ்வில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகள் வளருகின்றன.
03) கணவன் மற்றும் மனைவி திருமணம் ஆவதற்கு முன்பு, பிறந்ததிலிருந்து வளர்ந்து வாழ்ந்த சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் வெவ்வேறான ஆசைகள், தேவைகள் இருக்கும்.
ஆனால் எனது ஆசைக்கும், தேவைக்கும் ஏற்ற போல் நீ மாற வேண்டும் என்று கணவனோ அல்லது மனைவியோ ஒருவரை ஒருவர் எதிர்பார்ப்பார்கள், கட்டாயப்படுத்துவார்கள். தனது ஆசைகளை, தேவைகளைப் பிறர் மீது திணிப்பார்கள்.
ஆனால் தான் மாற வேண்டும் என்பதை உணர்ந்து புரிந்து பார்க்க மாட்டார்கள். (உதாரணமாக-: கனவன் கோபக் காரணாக இருப்பார். அங்கு தன்னை மாற்றிக் கொள்ளாமல் “அது எனது பழக்கம்” என்று திமிராக பேசுவார். மனைவி நாள் முழுதும் தூங்கியே காலத்தை கழிப்பவராக இருப்பார். தன்னை மாற்றிக் கொள்ளாமல் “இது எனது தாய் வீட்டுப் பழக்கம்” என்று மடமை பேசுவாள்.)
04) கணவன் தன் மனைவியையும், மனைவி தன் கணவனையும் அடக்கி ஆழ வேண்டும் என நினைத்து தாம் திருமணம் ஆன நாளில் இருந்து ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த ஆரம்பிப்பார்கள்.
இதனால் தனது சுதந்திரம் பறிபோகிறது என்ற எண்ணம் வளர்ந்து விடும். தன் துனையின் தன்மை எப்படியோ அதை அப்படியே ஏற்றுகொள்ளாமல், தனக்கு ஏற்ற விதத்திற்கு மாற்ற போராடுகிறார்கள்.
இப்படியான வாழ்கை போராட்டங்கள் தான் கடைசி வரை அமைதியை இழந்த போராடங்களாகவே மாறி விடுகின்றன. இங்குதான் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் பேசும் கதவும் திறக்கப் படுகிறது. ‘”சரி தான்! இது இப்படித்தான் இருக்கும்’” என நினைத்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்கின்றவர்கள் தமது வாழ்க்கையை அமைதியாக வாழ்கிறார்கள்.
“இல்லை! இப்படித் தான் இருக்க வேண்டும்” என்று பிடிவாதமாக அடம் பிடிப்பவர்கள் நடை பிணமாய் வாழ்கிறார்கள்.
இவர்கள் தான் ஐயோ என்ன வாழ்க்கைடா இது? இவளப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டேனே என்று ஆண்களும் இவரைப் போய் தலையில் கட்டி வைத்து விட்டார்களே என்று பெண்களும் புலம்புகிறார்கள்,
வீட்டுக்கு வந்தால் சற்று நிம்மதியாக இருக்க முடியவில்லை, தாய் – தந்தை கட்டி வைத்து விட்டார்கள் அவர்களுக்காகப் பொறுத்துப் பார்க்கிறேன் இல்லையென்றால் நல்ல வேளை செய்வேன், குழந்தைகளுக்காகச் ஒன்றாக வாழ்கிறேன் இல்லை என்றால்.. என்று புலம்பித் திரிவார்கள்.
இவைகள் வாழ்கை என்றால் என்ன என்பதை அறியாத புரிந்து கொள்ளாத அறிவிலிகளின் அறிகுறிகள்.
05) புரிந்து நடந்து கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்ளாமையும் மற்றொரு காரணமாகும். ஒருவரின் மனதுக்குப் பிடித்த ஒரு விடயம், அடுத்தவருக்கு தரக் குறைவாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ தெரியலாம்.
ஆனால் அவர்களுக்கு அது பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து, புரிந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒருவருக்குப் பிடித்த ஒரு விடயத்தை மற்றவர் இகழக் கூடாது.
06) கணவனும், மனைவியும் நேர் எதிரான சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படியான விடயங்களில் ஒருவர் மற்றவரின் மனதை அறிந்து, இருவருமாக சேர்ந்து கலந்துரையாடி இருவருக்கும் பொதுவானதொரு கொள்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக,

* கணவன் மிகவும் கஞ்சத்தனம் உடையவராக இருப்பார். ஆனால் மனைவி தாராளமாக கணக்கில்லாமல் செலவு செய்வார்.
* மிகவும் சுத்தமாக அழகாக வீடு இருக்க வேண்டும் என்று கணவன் நினைப்பார். ஆனால் மனைவி வீட்டைச் சுத்தம் செய்யமாள் இருப்பார்.
* ஒருவர் குழந்தைகளை மிகவும் செல்லமாக, அடிக்கக்காமல் திட்டாமல் வளர்க்க வேண்டும் என்பார். மற்றவர் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்க கூடாது அடித்து, கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்.
* ஒருவர் வௌியே எங்கும் போகாமல் வீட்டில் அமைதியாக இருக்க விரும்புவார். மற்றவரோ வெளியே சென்று சுற்றி வருவதில் ஆர்வமுடையவராக இருப்பார்.
* தனது மாமனார் வீட்டில் தனக்கான மரியாதையை தரவில்லை என்று கணவனுக்கு மனக் குறை இருக்கும். அதனால் மனைவியை அவளுடைய பிறந்த வீட்டுக்குப் போக கணவன் அனுமதிக்க மாட்டார். ஆனால் தனது குடும்பத்தைப் பார்க்க மனைவிக்கு அதிக விருப்பம் இருக்கும்.
இப்படியான பல தரப்பட்ட நேர் எதிரான சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் பல குடும்பங்களில் காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி சண்டையும் சச்சரவுகளும் ஏற்படுகின்றன. பின்னர் அவை வெறுப்பாக வளர்ந்து விவாகரத்து வரைக்கும் இட்டுச் செல்கின்றன.
இல்லற வாழ்கை என்றால் என்ன, எப்படியானது என்பதை முதலில் தெளிவாக அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். திருமணம் என்பது வாழ்கையின் இன்னும் ஒரு படி நிலை.
அந்த படி நிலையில் பொறுமையும், பொறுப்புணர்வும், புரிந்துணர்வும், விட்டுக் கொடுப்பும் இன்றியமையாதவையாக காணப்படுகின்றது. இவ்வாறான சிந்தனைகள், பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இருவரும் தமது துனையின் விருப்பங்கள், அபிப்பிராயங்கள், ரசனைகள், எதிர்பார்ப்புகளை புரிந்து நடக்க வேண்டும்.
முதலில் பெண்ணின் இயல்பும் ஆணின் இயல்பும் வெவ்வேறானது என்பதை இருவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கணவன் தனது மனைவியை ஆணின் சிந்தனை வட்டத்திட்குள் வைத்தும், மனைவி தனது கணவனை பெண்ணின் சிந்தனை வட்டத்திட்குள் வைத்தும் சிந்திக்கக் கூடாது.
சில ஆண்களுக்கு பெண்ணின் உடல் அமைப்பு பெரிய விடயமாகத் தோன்றும். பல பெண்களுக்கோ ஆணின் அன்பு மட்டும் தான் பெரிதாகத் தோன்றும். இந்த இயல்புகளை இருவரும் அறிந்து புரிந்து கொண்டு நடந்தாலே நிறையப் பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.
தன் கருத்தைப் அடுத்தவர் மீது திணிக்க ஒரு போதும் முயற்சிக்கக் கூடாது. துனையின் தேவையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் அடிக்கடி அன்பாகப் கதைத்துக் கொள்ள வேண்டும்.
காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும், சில ஆண்டுகளுக்குள்ளேயே தலாக் கேட்கும் அளவுக்கு வந்து விடுகிறார்கள். இதற்குக் காரணம், காதலிக்கும் போது இருவருக்கும் இடையில் ஈர்ப்பும், அன்பும் மட்டும் தான் இருக்கும். புரிதல் என்பது இருக்காது. திருமண வாழ்க்கைக்குப் புரிதல் தான் மிக அவசியம்.
இவற்றை இல்லற வாழ்க்கையில் பிரச்சினைகளில் உள்ளவர்களிடம் சொன்னால் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் தம்மை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
இதற்குக் காரணம், விருப்பம், வெறுப்பு, தீர்மானம் எடுத்தல் எல்லாவற்றிலும் நான்தான் சரி என்று அவர்களுடைய அடி மனதில் பதிந்து போய் உள்ளதுதான். இவர்களுடைய அடி மனதில் பதிந்து போயிருக்கும சிந்தனைகளை மாற்றினால் மட்டுமே இவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
வாழ்க்கை எனும் சவால் மிக்க பயணத்தை முடித்துக் கொள்ளுதல் பெரிய விடயமல்ல, நம்மைச் சோதனைகள், பிரச்சினைகள் சூழ்ந்து வரும் போதும் அடக்கமாய் அமைதியாய் நின்று நிதானமாக பயணத்தை தொடர்வதே மிகப் பெரிய வெற்றியாகும்.

Leave a Reply