மஹ்ஷரில் மனிதனின் நிலை!👨🌐🌝 தொடர் 1 ஒவ்வொரு முஸ்லிமும் மறுமையைக் கண்டிப்பாக நம்பிக்கை கொள்ள வேண்டும். மறுமை வாழ்க்கை என்று நாம் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அதற்கு பல படித்தரங்கள் இருக்கின்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். மண்ணறை வாழ்க்கை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் எழுப்பப்படுதல், விசாரிக்கப்படுதல், கூலி வழங்கப்படுதல் என்று பல படித்தரங்கள் மறுமைக்கு இருக்கின்றன. ஒருநாள் ஒட்டுமொத்த உலகமும் அழிக்கப்பட்டு மனிதர்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்பட்டு மஹ்ஷர் எனும் வெட்டவெளி மைதானத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் தருணத்தில், மனிதர்கள் பல நிலைகளில் இருப்பார்கள். அப்போது அனைவருக்கும் பொதுவான நிலைகளும் இருக்கின்றன. அடுத்ததாக, நல்லவர்களும் கெட்டவர்களும் இம்மை வாழ்க்கையில் தாங்கள் பெற்றிருந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஏற்றவாறு சில வகையான தோற்றங்கள், நிலைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அந்நாளில் மக்கள் பல நிலைகளைப் பெற்று பல பிரிவுகளாகப் பிரிந்து இருப்பார்கள். இதைப் பின்வரும் செய்திகள் மூலம் அறியலாம்.