நல்ல மனைவி என்பவள்…

பெண், மனைவி(அன்பையும் விசுவாசத்தையும் கற்பித்த ஒரு நல்ல மனைவி யினது உண்மைச் சம்பவம்)

சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மரணத்தருவாயில் தனது மூத்த மகனை அழைத்து,

“மகனே! நான் இன்னொரு திருமணமும் முடித்துள்ளேன். அந்த மனைவி பிலிபைன்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறாள். இது தான் அவளது முகவரி. அவள் விடயத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். அல்லாஹ்விடம் என் பொறுப்புகள் நீங்க வேண்டும்.” என்று தனது மனதிலுள்ளதைத் தெரிவித்து விட்டு வபாத்தாகிவிட்டார்.

சில நாட்களுக்குப் பின்னர் சொத்துப் பங்கீடு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் முதலில் தந்தையின் பிலிபைன்ஸ் மனைவியை அழைத்து வரவேண்டிய அவசியமிருந்தது.

அந்தப் பெண்னை அழைத்து வருவதற்காக மூத்த மகன் பிலிபைன்ஸ் பயணமானார். மிகவும் கஷ்டத்தின் பின் அந்தப் பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்து கதவைத் தட்டினார். அந்த வீடு சாதாரண வீட்டையும் விட ஏழ்மையுடன் மோசமாக இருந்தது. அங்கு மார்க்க அடையாளங்களுடன் பெண்ணொருவர் வந்து கதவைத் திறந்தார்.

இருவரும் அறிமுகமாகிக் கொண்டதன் பின்னர் தான் வந்திருக்கும் விடயத்தை தெரிவித்தார் மகன். அதன்பின் அந்தப் பெண் சவுதி அரேபியாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருவரும் ரியாதை வந்தடைந்தனர்.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் பிரகாரம் சொத்தும் பங்கீடு செய்யப்பட்டது. அந்தப் பெண்ணுக்குரிய பங்காக சுமார் எட்டு லட்சம் ரியால்கள் கொடுக்கப்பட்டன.

மக்கா சென்று உம்ராவை நிறைவேற்ற வேண்டுமென்று அந்தப் பெண் மூத்த மகனிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் . மகனும் உம்ராவுக்காக அழைத்துச் சென்றார். அதன் பிறகு அந்தப் பெண் ஜித்தாவில் இருந்து தனது தாய் நாட்டிற்கு புறப்பட்டார் .

சுமார் நான்கு ஐந்து வருடங்கள் கடந்திருக்கும். தன் தாயின் அந்தஸ்தில் உள்ள அப்பெண்ணைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்ட மூத்த மகன் மீண்டும் பிலிபைன்ஸுக்கு சென்றார்.

குறித்த வீட்டை சென்றடைந்தவருக்கு அங்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த வீடு உள்ளேயும் வெளியேயும் எந்த மாற்றமும் இன்றி முன்னர் இருந்தது போல் அப்படியே இருந்தது. சொல்லப் போனால் இருந்ததை விட மோசமாக மாறியிருந்தது.

“உங்களுக்குக் சொத்துப் பங்கீட்டில கிடைத்த பணம் எங்கே? அப் பணத்தைக் கொண்டு இந்த வீட்டை கொஞ்சமாவது திருத்தியிருக்கலாமே!” என்று அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்த மகன் அப்பெண்ணிடம் கேட்டே விட்டார்.

அதற்கு அப்பெண் பதிலேதும் கூறவில்லை. மாறாக தன் மகனை அழைத்துக் கொண்டு ஓர் இடத்துக்குச் சென்றார். அங்கே அல்-குர்ஆன் மனனம், மார்க்க வகுப்புகள் நடாத்தப்படும் அலங்கரிக்கப்பட்ட இஸ்லாமிய நிலையமொன்று கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

“மேலுள்ள பெயர் பலகையைப் பார்” என்றாள் அப்பெண். அதில் அவரது தந்தையின் பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

“எனக்கு கிடைத்த பணத்தில் உன் தந்தையின் பெயரில் இதனை உருவாக்கி அவருக்காக ‘ஸதகா ஜாரியா’ வாக நன்கொடை செய்துள்ளேன்.” என்றார் அப்பெண்.

இக்காட்சியைக் கண்ட மகனால் அழுகையை அடக்க முடியவில்லை. தன் தந்தை மீதான அப்பெண்ணின் உண்மையான பாசத்தை பார்த்து மெய்சிலிர்த்து நின்றார்.

மகன் என்ற வகையில் அப்பெண்ணுக்கு முன்னால் தான் தோற்று விட்டதை உணர்ந்து அழுதார்.

மகனால் மேலும் அங்கிருக்க முடியவில்லை. உடனடியாக நாட்டுக்குத் திரும்பி தன் சகோதரர்கள் அனைவரையும் அழைத்து தான் பிலிபைன்ஸில் கண்ட காட்சிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தார்.

அவனது சகோதரர்கள் அனைவரும் இனநை்து சுமார் ஐந்து மில்லியன் ரியால்களை தமக்கு மத்தியில் சேர்த்தனர். அதை தம் தந்தையின் பெயரில் பல நல்ல நன்மையான விடயங்களை செய்வதற்கு உறுதி பூண்டனர்.

அது பாசத்தையும் விசுவாசத்தையும் கற்பித்த ஒரு நல்ல மனைவி. உலகை விட மறுமையை நேசித்த உண்மையான மனைவி.

கணவன் மனைவி உறவானது மிகவும் புனிதமானது. அந்த உறவில் உண்மை, விசுவாசம், அன்பு இருக்க வேண்டும். அதை நாம் களங்கம் செய்யக் கூடாது.

மனைவியினது உரிமைகளை கணவன் வழங்க வேண்டும். கணவனுக்குரிய கடமைகளை மனைவி செய்ய வேண்டும். கணவன் – மனைவி எதிர்பார்ப்புகள் பரஸ்பரம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இல்லற வாழ்கை இனிக்க இருவரும் சில உணர்வுகளையும், கஷ்டங்களையும் தியாகம் செய்ய வேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும்.

அப்போது தான் இல்லற வாழ்வின் சுவடுகள் மரணத்திற்குப் பின்னரும் ஒளிரும்.

தன் பெற்றோர் மரணித்த பின்னும் பிள்ளைகள் மறந்து விடக்கூடாது. எம்மை கருவில் சுமந்த தாய்க்கும் நெஞ்சில் சுமந்த தந்தைக்கும் நாம் எதைச் செய்தாலும் ஈடாகாது.


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy Policyx

Leave a Reply

error: Content is protected !!