சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?

சண்டை , பெற்றோர்நிமிடத்துக்கு நூறு SMS கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பிறகு கீரியும் பாம்புமாகி சண்டையிடுவார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாக நடக்கும் இவர்களின் இல்லற வாழ்க்கை சில மாதங்கள் பல்லக்கில் ஓடும். அவ்வளவு தான்.

ஒரு நாள் யூ டர்ன் அடித்து திரும்புகின்ற வண்டி போல திடீரென திசை மாறி நிற்கும். ”மேட் போர் ஈச் அதர்” போல அசத்தலாக சில மாதம் ஓடிய இல்லற வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கின்றது?

இமயமலை உச்சியில் கட்டி வைக்கப்படும் எதிர்பார்ப்புக் கூடு கலைந்து விடுவது தான் பெரும்பாலான சிக்கல்களின் ஆரம்பம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் SMS களும், வாங்கிக் குவிக்கும் பரிசுப் பொருட்களும், சிரிப்பு, சீண்டலும் திருமணத்துக்குப் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகின்றது.

இது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஆரம்பப் புள்ளி. தான் இங்கு வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதற்றம் தம்பதியரிடையே எழுகின்றது. அந்த நினைப்பே காலப்போக்கில் எரிச்சல், விரக்தி, கோபம், மன அழுத்தம் என உருமாறி ஆளை விடுங்கடா சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகின்றது.

திருமணமாகி முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாக புரிந்துனர்வுடன் கடப்பதில் இருக்கின்றது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருட இல்லற வாழ்வை கடப்பது என்பது பலருக்கு சிம்ம சொப்பனம்! திருமணத்தின் முதல் ஏழு வருட கால கட்டத்தை ஆங்கிலத்தில் (Seven year itch) செவன் இயர் இட்ச் என அழைப்பார்கள். இல்லாத பொல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். விவகரத்துப் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் அதிகமாகக் காணப்படும்.

இந்த ஏழு வருட காலப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும், புரிந்துனர்வுடனும் கடந்தால் காத்திருக்கின்றது அமைதியான இல்லற வாழ்க்கை. இதற்குக் காரணம் என்ன என்பதை அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் (Ted Huston) என்பவர்ஆராய்ந்தார். இவர் மனித உறவுகள் பற்றி பல்வேறு ஆய்வு ஆராய்ச்சிகளை நடத்தியவர்.

ஏன் எதற்கா மக்கள் திருமணம் முடிந்த கையோடு விவகரத்தும் கேட்கின்றார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் இங்கு சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் விவகரத்து வாங்குபவர்கள் யார் தெரியுமா ?

திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாக சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள். ”தான் தாம் எல்லாம்” என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். விவகரத்தின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பும், புரிந்துணர்வும் இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பணம் பதவி , ஏனைய சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் அவர்.

திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விடயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகின்றது. குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே வீட்டிற்குள் எலியும், பூனையுமாக வாழ வேண்டும்.

அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரிய வேண்டும். இந்த சண்டை சச்சரவுகளினால் அதிகம் காயப்படுவதும் பாதிக்கப்படுவதும் அப்பாவா, அம்மாவா என்று பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும்.

‘அது யாதும் அறியா பச்சைக் குழந்தை தானே’ என்றோ, அல்லது அது வளர்ந்த பிள்ளை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர்கள் தப்புக் கணக்கு போடுகின்றார்கள். உண்மையில் சிறு குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் பிள்ளையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயமாக உண்டு.

குழந்தைகள் என்பது பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரினது சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றது. வீட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கின்றார்கள் ? சண்டை போடலாம் தப்பில்லை என்பதையா? அல்லது குடும்பம் வாழ்க்கை என்றால் சண்டை போட்டுத் தான் வாழ வேண்டும் என்பதையா ? எதுவாகவும் இருக்கலாம் ஆனால் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.

பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் அதனைப் பார்த்து பயப்படுகின்றன. அவர்களது ஆழ் மனதில் பாதுகாப்பற்ற ஓர் உணர்வு எழுகின்றது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன.

ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையின் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போதும் குழந்தைகள் நிலைமை கதிகலங்கி விடும்.

இதனால் குழந்தைகள் பல தவறான பாடங்களைக் கற்றுக் கொள்கின்றது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அல்லது ஏதாவது பெற்றுக் கொள்வதற்கு அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கின்றது. இதனால் அம்மாவைப் பற்றி அப்பாவிடமும், அப்பாவைப் பற்றி அம்மாவிடமும் கதைகள் ஒப்பிக்கின்றது.

அவர்களுடைய நோக்கம் இங்கு அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பும் அவர்களது கவனத்தை தாம் பக்கமும் பெறுவது மட்டுமே. அது சாதாரணமாக தமக்கு கிடைக்காத போது அந்த ஏக்கத்தில் ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றனர்.

பெற்றோர் தமது சண்டையில் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் இழுக்கவே கூடாது. பல பெற்றோர்கள் தங்கள் இல்லற சண்டையில் குழந்தைகளை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும்.

அம்மாவா அல்லது அப்பாவா என்று பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். அதை விடுத்து குழந்தைகளை பெற்றோர்களே இவ்வாறான இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.

பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவில் உள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடாத்திய ஓர் ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார்.

இவருடைய ஆய்வு முடிவானது சிந்திக்க வைக்கின்றது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ அல்லது விவாதங்களோ வருவது குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கின்றது. தீர்வற்ற முடிவில்லா சண்டைகள் குழந்தைகளை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ்.

மனம் சார்ந்த பாதிப்பு சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி போன்ற உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றது. அப்போதும் சில பெற்றோர்கள் சும்மா இருப்பது இல்லை.

‘குழந்தையை சரியாக கவனிக்காமல் உனக்கென்ன பெரிய வேலை” என அப்பா சத்தம் போடுவார். ”குழந்தையை பெத்தெடுப்பது தான் அம்மாவின் வேலை, வளர்ப்பது அப்பா வேலை” என அம்மா சத்தம் போடுவார். இறுதியில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மூண்டு விடும்.

சில குடும்பங்களில் ”நான் தான் அதை செய்வேன்” எனும் யுத்தம் பாதி நேரம் ஓடும். ”அதை நீ செய்ய வேண்டியது தானே” எனும் யுத்தம் மீதி நேரம் ஓடும். நாம் அதை செய்வோம் என ஒன்றுமை படாததால் ஏதுமறியா குழந்தையின் சிந்தனையும் இரண்டாக உடைந்து போகும்.

எனவே தம்பதியரின் இல்லற அன்யோன்யம் புரிந்துனர்வு குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கின்றார் கனடாவின் குழந்தைகள் நலத்துறை நிபுணர் கேரி டைரன்பில் (Gary Direnfeld).

தமது சண்டையில் சிதைந்து சின்னாப் பின்னமாகிப் போவது தமது செல்லக் குழந்தையின் வாழ்க்கை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். ”தான் செய்வது எல்லாம் சரி” யென வாதாடுவதும் நிறுவுவதும், அடுத்தவரை தரக் குறைவாக பேசுவதும், அவமானப்படுத்துவதும், திட்டுவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத் தான் பாதிக்கின்றது.

ஒருவேளை திருமணங்கள் விவகரத்தில் முடிந்து விட்டால் சொல்லவே தேவையில்லை. குழந்தையின் மனது, வாழ்க்கை எல்லாம் நொறுங்கி விடுகின்றது. பெற்றோர்கள் குழந்தையை வளர்ப்பதற்கு பொருளாதாரம் வசதி இருக்கின்றதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும், எதிர்பார்பும், தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.

உங்கள் நடவடிக்கைகள் செயற்பாடுகள் எல்லாம் கருத்து வேறுபாடுகள் முறன்பாடுகள் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாக இருக்க வேண்டும் ! ஒரு சண்டை முடிவில்லாமல் இருக்கவே கூடாது. நிதானமாக பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாக ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். உண்மையில் குழந்தைகளுக்கு அது வழிகாட்டும் என்கின்றார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs).

வீடுகளில் ஏன் இந்த சண்டைகள்…..!

‘எனக்கும் எங்க அப்பவுக்கும் பயங்கரமான சண்டை’, ‘என்னத சொன்னாலும் எங்க அம்மா புரிஞ்சிறதே இல்ல நல்லா கத்திட்டு வந்து விட்டேன்.” இந்த மாதிரியான விடயங்களை நாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது கேட்டிருப்போம்.

இது போன்ற சூழ்நிலையைகளையும் கடந்து வந்திருப்போம். இது பெரும்பாலும் வளர்ந்த பிள்ளைகள் உள்ள வீடுகளில் நடக்கும் ஒன்று. ஏன் இப்படி? இது பலமுறை என் முன்னே வந்து செல்லும் ஒரு கேள்வி .

பிள்ளைகள் பதின்ம வயது அடையும் போது அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்க்கும் இடையே இவ்வாறான கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்கும். அப்போது ஆரம்பிப்பது ஒரு வித வயது கோளாறினால் என்று சொல்லலாம். ஆனால் இந்தவித பிரச்சனைகள் அதற்கு பின்பும் வராமல் இல்லை.

கருத்து வேறுபாடுகள் முரன்பாடுகள் கண்டிப்பாக தலைமுறை இடைவெளி மற்றும் புரிந்துணர்வு இன்மை காரணமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஆனால் அதனை சம்பந்தப்பட்டவர்கள் நேருக்கு நேர் நிதானமாக பேசிக் கொண்டால் எப்படியும் தீர்த்துக் கொள்ளலாம். அவ்வாறின்றி தங்கள் கருத்திலேயே அவரவர்கள் விடாப்பிடியாக நின்று வாதிட்டுக் கொண்டிருந்தால் பிரச்சனை தீராமல் சண்டையில் தான் முடியும்.

பல இல்லங்களில் இது போன்ற சூழல் நீடிக்கின்றது. இதன் காரணமாக உறவு முறைகளில் ஒருவித விரிசல் ஏற்பட்டு விடும்.

ஒரு சில சந்தர்பங்களில் ”நான் சொன்னால் உங்க பிள்ளை கேட்கமாட்டான்(ள்), நீங்களே கூறிவிடுங்கள்” என பெற்றோரும், ”நான் எதையுமே என் அம்மாவிடம் தான் கூறுவேன்/ நான் எதையுமே அப்பாவிடம் தான் கூறுவேன், மற்றவரிடம் கூறினால் பிரச்சினையும் சண்டையும் தான் வரும்” என பிள்ளைகளும் ஒரு வட்டத்திற்குள் சிக்கி விடுகின்றார்கள்.

இப்போது காணப்படும் தனிக்குடித்தன முறையில் வீட்டில் இருப்பதே அதிகபட்சமாக நான்கு பேர் தான்; அதிலும் இப்படி குழுக்களாகி பிரிந்து போய்க் கொண்டேயிருந்தால் நாம் எங்கே செல்கிறோம் என்றே புரியவில்லை.

நாம் வாழும் குடும்ப சிறு வட்டத்திற்க்குள் இன்னுமொரு குறுகிய வட்டம். விசாலமாக இருக்க வேண்டிய மனம் ஏனோ குறுகிக் கொண்டே போகின்றது. இதன் விளைவு மிகவும் பாரதூரமானதாக இருக்கும்.

அனைவருக்குமே அடுத்தவரை குறை கூறுதது மிகவும் எளிது. ஆனால் இன்று குறை கூறும், சண்டையிடும் பிள்ளைகள் பிற்காலத்தில் தங்களுக்கும் ஒரு பிள்ளை பிறந்து அவர்கள் அந்த பெற்றோருடன் சண்டையிடும் போது தான் பெற்றோர்களினது வலி, கவலை என்னவென்று தெரியும்.

பிள்ளைகளாக தமது பெற்றோர் மீது பழி சுமத்தலாம், சண்டையிடலாம் ஏன் பேச்சு உறவையே முறித்துக் கொள்ளலாம். இளமை செருக்கினால் இதனை செய்கின்றார்கள்.

வாழ்க்கை என்பது ஒரு சக்கரம் என்பதை அவர்கள் இப்போது புரிந்து கொள்வதில்லை. தாமும் பெற்றோராகி தமது பிள்ளைகள் அவ்வாறு நடக்கும் சமயத்தில், தாங்கள் செய்த தவறை எண்ணி வருத்தப்படலாம்.

ஆனால் அதனை சரி செய்து மன்னிப்பு கேட்டு அன்பு பாராட்ட அவர்களது பெற்றோர்கள் அது வரை உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகமே.

வெகு வேகமாக காலம் ஓடிக் கொண்டிருக்கின்றது. வரட்டுப் பிடிவாதத்தினாலும், சுயநலத்தாலும் உறவுகளை இழப்பது என்பது வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை இழப்பது போன்றது. ஆறரிவு பெற்ற மனிதனாக பிறந்து விட்டு இவ்வாறான அறிவில்லா தவறை செய்வது முறையே கிடையாது.

இவ்வுலகில் நாம் யாருமே மரணமின்றி நிலையாக நிலைத்து வாழ்ந்து விடப் போவதில்லை. அனைவருமே சில காலங்கள் தான் வாழப் போகின்றோம்.

இருக்கும் போது அன்பு செலுத்தில் மகிழ்சியாக இருக்காமல் காலம் சென்ற பின் சொல்லி அழுவதில் என்ன பயன்? உயிரில்லா உடலோடு பேசி என்ன பயன்? இறந்து போனவர் திரும்பி வரப்போவதுமில்லை. வாழ்நாள் முழுவதும் அந்த வடு வேதனை மனதில் இருந்து கொண்டேயிருக்கும்.

அதுவும் பெற்றோர் – பிள்ளைகள் பிரிவு எனில் அதன் தாக்கமும் வலியும் சொல்லி புரிந்து கொள்ள முடியாது. சரியாக சிந்திக்காமல் தவறான முடிவு எடுத்துவிட்டு வாழ்க்கை முழுதும் வருந்தி வருத்தப்பட்டு என்ன பயன்?

கருத்து வேறுபாடுகள், வாத விவாதங்கள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை ஒரு போதும் இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கின்றோம் என்பதில் தான் இருக்கின்றது அவரவர் வாழ்வின் வெற்றியும் தோல்வியும்.

சண்டையே போடாமல் இருக்க முடியாது அதுவும் ஆபத்தானது தான், அடக்கி முடக்கி வைக்கப்படும் கோபமும் எதிர்ப்பும் நோய்களாக வந்து விடும். ஆனால் சண்டையைத் திறமையாகக் நிதானமாக கையாள வேண்டும்.

நம்மோடு இருப்பவர்களோடு மனம் விட்டு சந்தோசமாக பேசுவோம். எதையுமே ஒருவித நடுநிலையோடு சிந்திப்போம். நமது கருத்தில் நியாயம் இருப்பின் அதனை சரியான முறையில் நிதானமாக மற்றவர்களுக்கு புரிய வைப்போம்.

ஒரு விடயத்தை புரிய வைப்பதிலும், புரிந்து கொள்வதிலிலும் தான் வாழ்க்கையின் நிலையான உண்மையான மகிழ்ச்சி உள்ளது. விரோதம் கோபம் தவிர்த்து அன்பு பாராட்டுவதில் தான் வாழ்வின் உண்மையான அர்த்தம் அடங்கியுள்ளது.

இந்த உண்மையைத் இல்லற தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்கையில் சிக்கலே இல்லை. இந்த பூமியில் இருக்கும் வரை நம் வாழ்வை நல்லவிதமாக வாழ்வோம். வாழ்க்கை வாழ்வதற்கே.

இணையம்


Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!