போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த விதம்
1505 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அப்போதைய கோட்டை இராச்சியத்தை ஆண்ட எட்டாம் பராக்கிரமபாகு மன்னனை சந்திக்க அரச ஊழியர்கள் திடீரென அரண்மனைக்கு வந்தனர். அங்கு வந்த அவர்கள், விசித்திரமான ஒரு குழு கொலம்தோட்டையில் இறங்கியிருப்பதாக மன்னரிடம் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்கள் வௌ்ளை கற்களை சாப்பிட்டவாறு இரத்தம் குடித்துக் கொண்டிருப்பதையும் தாங்கள் கண்டதாக மேலும் தெரிவித்தனர். போர்த்துக்கேயர் கொழும்புக்கு வந்து இருப்பதை தான் அரச ஊழியர்கள் அவ்வாறு பார்த்தனர்.
போர்த்துக்கேயர்கள் ஏன் கிழக்கு தேசத்திற்கு வந்தார்கள்?
1453ல் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றினர். இதன் விளைவாக, ஐரோப்பாவில் கிறிஸ்தவ வர்த்தகர்களுக்கு தங்களின் பாரம்பரிய வர்த்தக வழிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது.
மேலும், துருக்கியர்கள் பொருட்களின் விலையை அதிகரித்தமை, வரி கட்டணங்களை அதிகரித்தமை, சரியான நேரத்தில் பொருட்களை வழங்காதது போன்ற காரணங்களால் ஐரோப்பிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள முடியவில்லை.
அந்த கால கட்டத்தில், கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்கு உணவுப் பொருட்களுக்கான வாசனை திரவியங்கள் செல்லப்பட்டன. ஆனால் துருக்கியர்கள் கோஸ்டான்டினோபிள் நகரைக் கைப்பற்றியதன் பிறகு, ஐரோப்பாவிற்கு வாசனை திரவியங்கள் கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டது.
இவ்வாறு ஐரோப்பாவிற்கான வாசனை திரவியப் பொருட்களின் வருகை நின்றவுடன், ஐரோப்பிய நாடுகளிலிருந்து மாலுமிகள் வாசனை திரவியப் பொருட்களைத் தேடிக் கொண்டு கிழக்கு தேச நாடுகளுக்கு வர வேண்டியிருந்தது.
அக்கால கட்டத்தில், கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வாசனைத் திரவியங்கள் மற்றும் பிற பொருட்களின் வர்த்தகத்தில் அராபியர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நேரத்தில், ஐரோப்பியர்கள் அரேபியர்களின் இந்த வர்த்தக ஏகாபத்தியத்தை கைப்பற்றுவதற்கு விரும்பினர்.
இந்த நோக்கத்திற்காக நாடுகளைப் பற்றி ஆராய்ந்த ஐரோப்பிய நாடுகளில் போர்துக்கள் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முக்கியமான இடத்தைப் பிடித்தனர். இவற்றில், போர்ச்சுக்கேயர்கள் இந்தியா உட்பட கிழக்கத்திய நாடுகளில் தங்கள் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.
போர்த்துக்கேயர்கள் நாடுகள் பற்றிய தமது ஆய்வு நடவடிக்கைகளை எவ்வாறு நடத்தினார்கள்?
அப்போதைய போர்த்துக்கேய இளவரசர் ஹென்றி நாடுகள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவை வழங்கினார். இவரது தலைமையின் கீழ், 15 ஆம் நூற்றாண்டில் ஒரு கடற்படை பயிற்சிக் கல்லூரியும் நிறுவப்பட்டது.
இதன் மூலம் கணிசமான எண்ணிக்கையிலான மக்களுக்கு கப்பல் போக்குவரத்து, வரைபட ஆய்வுகள், கப்பல் கட்டுதல் மற்றும் வானியல் போன்ற விடயங்களைப் பற்றி விரிவான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது. அன்று நாடுகளைப் பற்றி ஆராய்வதற்காக இளவரசர் ஹென்றி வழங்கிய ஆதரவு, போர்த்துக்கேய ஆய்வாளர்களுக்கு பல வெற்றிகளை அடைய உதவியது.
இதன் படி 1488 ஆம் ஆண்டில், பார்த்தலோமியோ டயஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்தனர். அங்கு புயலில் சிக்கிய மாலுமிகள் அந்த இடத்திற்கு புயல் முனை என்று பெயரிட்டனர்.
அந்த விஜயத்திற்குப் பிறகு போர்த்துக்களுக்கு திரும்பிய அந்த ஆராய்ச்சியாளர்கள் தாம் அடைந்த வெற்றியைப் பற்றி மன்னருக்குத் தெரிவித்தனர். இதனால் உற்சாகமடைந்த மன்னர் புயல் முனையை வாழ்த்து தெரிவிக்கும் இடமாக பெயரிட்டார்.
பார்த்தலோமியோ டயஸ் சென்ற பாதையில் பயனித்த வாஸ்கோடகாமா என்ற நாடுகாண் பயணி 1498 மே 20 அன்று இந்தியாவில் உள்ள கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.
“நாங்கள் கிறிஸ்தவர்களையும், வாசனைத் திரவியங்களையும் தேடி வந்தோம்” என்று வாஸ்கோடகாமா அன்று தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கேயர்கள் கிழக்கு தேசத்தின் வர்த்தக அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டனர்.
கிழக்கின் வர்த்தக அதிகாரத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக்கைகள்
மே 25, 1505 அன்று, அப்போதைய போர்த்துக்கேய ஆட்சியாளரான முதலாம் மானுவேலின் உத்தரவின் பேரில் கிழக்கின் வர்த்தக அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தா உட்பட குழு லிஸ்பனில் இருந்து கப்பல்களில் ஏறினர்.
அன்று போர்த்துக்கேய மாலுமிகள் 14 பெரிய மரக் கப்பல்களையும் நான்கு பாய்மரக் கப்பல்களையும் தமது பயணத்திற்காக பயன்படுத்தினர். இந்த பணிக்கு கட்டளையிட்ட முக்கிய கப்பல் சாவோ ரபேல் கப்பல் ஆகும். இவ்வாறு பயணத்தை ஆரம்பித்த அனைத்து கப்பல்களிலும் சுமார் 1,500 போர்த்துகீசிய வீரர்கள் இருந்தனர்.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களின் முக்கிய நோக்கம் கிழக்கு வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாக இருந்தது. அத்துடன் அவர்கள் போர்துக்கேயர்களுக்கு அதிக இலாபகரமான வாசனைத் திரவிய வர்த்தகத்தில் பெரும் கவனம் செலுத்தினர். கடற்படைக் கப்பல்களைத் நிறுத்துவதற்கு ஏற்ற துறைமுகங்களையும் புதிய நாடுகளையும் கண்டுபிடிப்பது இப்பயணத்தின் ஏனைய நோக்கங்களாகும்.
பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவும் மற்றவர்களும் முதலில் ஆப்பிரிக்க கடற்பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மொசாம்பிக்கில் ஒரு தளத்தை அமைத்தனர்.
தளம் நிறுவப்பட்ட பின்னர், போர்த்துக்கேய துருப்புக்கள் தற்போதைய கென்யா மற்றும் தான்சானியாவின் கடலோர மாகாணங்களில் தரையிறங்கி, அங்குள்ள மக்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தனர். ஆப்பிரிக்காவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை ஏற்றிக்கொண்டு போர்த்துக்கேய துருப்புகள் இந்தியாவை வந்தடைந்தனர்.
செப்டம்பர் 1505 இல், போர்த்துக்கேயர்கள் இந்தியாவின் கேரள கடற்கரையில் உள்ள கொச்சியில் தரையிறங்கி அங்கு ஒரு தளத்தை அமைத்தனர். பின்னர் போர்த்துக்கேய அரசாங்கம் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவை அதன் ஆட்சியாளராக நியமித்தது.
அப்போது கள்ளிக்கோட்டையின் ஆட்சியாளராக இருந்த சமோரின், போர்த்துக்கேயர்களை கொச்சியிலிருந்து விரட்டியடிப்பதற்காக போர் தொடுத்தார். இருப்பினும், இராணுவ வலிமையின் அடிப்படையில் முன்னணியில் இருந்த போர்த்துக்கேயப் படைகளால் சமோரின் இராணுவத்தை தோற்கடிக்க முடிந்தது.
ஆனால் கணிசமான எண்ணிக்கையிலான போர்த்துக்கேய வீரர்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் பல கப்பல்களும் அழிப்பட்டது. போர் நடைபெற்ற காலத்தில் கொச்சியில் ஒரு நிரந்தர தளத்தை நிறுவிய போர்த்துக்கேயர்கள், தொடர்ந்து இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைக் கைப்பற்ற திட்டமிட்டனர்.

இந்தியப் பெருங்கடலைச் சுற்றி இன்னும் பல வளமான தீவுகள் இருப்பதை போர்த்துக்கேயர்கள் அறிந்திருந்தனர். அத்தகைய தீவுகளைக் கண்டுபிடிப்பதே அவர்களின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
எனவே பிரான்சிஸ்கோ டி அல்மெய்தா தனது மகன் லாரன்சோ டி அல்மெய்தாவின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். அன்று புதிய தீவுகளை தேடிச் சென்ற லொரன்சோவும் அவரது படைகளும் கடுமையான புயலில் சிக்கி காலி துறைமுகத்திற்கு வந்தடைந்தனர்.
கம்போடியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட கருவாப்பட்டை மற்றும் யானை தந்தங்களுடன் சில கப்பல்கள் அந்த நேரத்தில் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து லொரென்சோவும் அவனது குழுவும் அங்கிருந்த முஸ்லிம் வணிகர்களை விரட்டியடித்து விட்டு துறைமுகத்தைச் சுற்றி வாழ்ந்த சில பூர்வீக மக்களை அழைத்து, அவர்களின் உதவியுடன், அங்குள்ள ஒரு பாறையில் போர்த்துக்கேய மன்னரின் சின்னத்தை பதிவு செய்தனர். இந்த பணியை மேற்கொண்ட போர்த்துக்கேய வீரரான ஙொன்சால் ஙொன்சாலவ்ஸ் தனது பெயரையும் சேர்த்து பதிவு செய்தார்.
அக்காலத்தில் இலங்கையை ஆண்ட மன்னன் கோட்டையில் இருப்பதை அறிந்த போர்த்துக்கேயர்கள் மன்னனைச் சந்திக்க கோட்டைக்குச் சென்றனர். பின்னர், கோட்டை மன்னனுடன் நட்பு பாராட்டிய போர்த்துக்கேயர்கள், இலங்கையின் கரையோர மாகாணங்களில் கோட்டைகளைக் கட்டினர்.
அதன் பின்னர் அந்த பகுதிகளில் காணப்பட்ட மதிப்புமிக்க வளங்களை போர்த்துக்கலுக்கு அனுப்பினர். இவ்வாறு 153 வருடங்களாக இலங்கையின் வளங்களை சுரண்டி கொள்ளையடித்து வந்த போர்த்துக்கேயர் 1658 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் படைகளின் தாக்குதல்களை அடுத்து இலங்கையை விட்டு வெளியேறினர்.
தகவல் – SARINIGAR