முஸ்லிம்கள் சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பல்வேறு சவால்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும் நிலையில் உள்ளனர். வல்லரசுகள் முழு இஸ்லாமிய உலகையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளன.
இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான பல சவால்கள் காணப்படுகின்றன.
உயிர் படுகொலைகள், நாட்டின் வளங்களின் அழிவுகள், பெண்கள் மானபங்கப்படுத்தப்படல் என்பன அன்றாட நிகழ்வாக மாறிவிட்டன.
ஈராக், லிபியா, சிரியா, யெமன் என முஸ்லிம் நாடுகளில் சங்கிலித் தொடராக நடைபெறும் பயங்கர நிகழ்வுகள், நன்கு திட்டமிடப்பட்ட ஒர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் இவை அரங்கேற்றப்படுகின்றன என்பதை மிகத் தௌிவாக எடுத்துக்காட்டுகின்றன.
ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்கள் கட்டியெழுப்பிய கலாச்சாரமும் நாகரீகமும் கணப்பொழுதுகளில், அவற்றின் அடையாளமே தெரியாமல் அழிக்கப்படுகின்றன.
இந்த கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் சுமந்து அதன் பிரதிநிதிகளாவும், காவலர்களாகவும் விளங்கும் முஸ்லிம்களின் உயிர்கள் பலிகொள்ளப்படுகின்றன.
முஸ்லிம் உலகம் தகைமையும் ஆற்றலுமற்று, தலைமைத்துவத்தையும் இழந்து, தூரநோக்கற்று செயற்பட்டமையே இந்த நிலையை உருவாக்கியுள்ளது என்பதில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவ முடியாது.
ஒரு சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திவாய்ந்த தலைமைத்துவமே சமூகத்திற்கு சரியான வழிகாட்டுதலை வழங்கி அதன் முன்னேற்றப் பாதையில் வழிநடாத்த முடியும்.
முஸ்லிம் உலகம் அத்தகைய தலைமைத்துவத்தை என்றோ இழந்துவிட்டது. அதனை உயிர்ப்பிக்க மேற்கொள்ளப்பட்ட அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.
மக்களுக்கு அறிவை வழங்கி, வலுவூட்டி, அவர்களது சக்தியை நாட்டின் நல்வாழ்வுக்காக ஒன்று திரட்டும் முயற்சிகள் முஸ்லிம் உலகில் நடைபெறவில்லை.
மக்களின் குரல்வளைகளை நசுக்கி, அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, தமது அரச சிம்மாசனங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு செயல்படும் மன்னர்களும், தமது நலன்களை மட்டுமே நோக்காகக் கொண்ட சர்வதிகாரிகளுமே மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றனர்.
முஸ்லிம் உலகில் ஜனநாயகத்தை வேரூன்றச் செய்வதும், மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வதும், இஸ்லாமிய விழுமியங்கள் தூர்ந்து விடாமல் பாதுகாத்து வளரும் தலைமுறையினரில் வேரூன்றச் செய்வதும் மிக முக்கியமாகும்.
முஸ்லிம் உலகின் எழுச்சிக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான சவால்களை எதிர்கொள்வதற்கும் இது மிக அவசியமான செயல்பாடகும்.
கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி
இஸ்லாமிய சிந்தனை