சந்திரிகா குமாரதுங்க – நிறைவேற்று அதிகாரமிக்க இலங்கையின் 4வது ஜனாதிபதி

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கசந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Bandaranayake Kumaratunga) இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி

எஸ்.டபிள்யூ.ஆர்.டி .பண்டாரநாயக்க மற்றும் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் இரண்டாவது மகளாக 1945 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி பிறந்த திருமதி சந்திரிகா இலங்கையின் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாவார்.

2005 ஆம் ஆண்டு இறுதி வரை இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவியாக பணியாற்றிய அவர், இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாகவும் இருந்தார்.

1970 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் மற்றும் நில அமைச்சர் ஹெக்டர் கொப்பேகடுவ அவர்களால் நிறுவப்பட்ட நில சீர்திருத்த ஆணைக்குழுவில் இயக்குநராக பணியாற்றுமாறு அவரது தாயார் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 1972 முதல் 1976 வரை அவர் காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் பணியாற்றினார்.

1974 ஆம் ஆண்டில், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், 1976 முதல் 1979 வரை, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைவராக இருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறிய அவர், தனது கணவர் விஜய குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா மக்கள் கட்சியில் ஒரு செயற்பாட்டாளராக பணியாற்றினார்.

அவரது கணவரின் கொலைக்குப் பிறகு, அவர் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்து UNU-WIDE (ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம்-உலக பொருளாதார மேம்பாட்டு விசாரணை நிறுவனம்) இல் 1991 வரை பணியாற்றினார்.

1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மேல் மாகாண சபையின் முதலமைச்சரான அவர் ஆகஸ்ட் 9, 1994 பொதுத் தேர்தலில் 105 இடங்களை வென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இலங்கையின் 10 வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது பெண் பிரதமராக அவர் பதவியேற்றார்.

17 ஆண்டுகால ஐ.தே.க ஆட்சிக்கு முடிவுக்கு வந்த அதே ஆண்டு நவம்பர் 12ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

அவரது அரசியல் பயணம் சுமூகமாக அமையவில்லை. கட்சியில் மட்டுமல்லாமல், அரசியல் அரங்கிலும், உறவினர்களிடமிருந்தும் அதிக சவால்களை எதிர்கொண்டார். ஆனால் அவை எல்லாவற்றையும் பயமின்றி எதிர்கொண்டார்.

இவரது ஆட்சிக் காலத்தில் அக்கால இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சித்தார். முதலில் பேச்சுவார்த்தை மூலமும், இரண்டாவதாக இராணுவ ரீதியிலான முயற்சியின் மூலமும் புலிகளின் பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்க முயற்சித்தார்.

இதன் விளைவாக, 1999 டிசம்பர் 18 அன்று கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றின் போது எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் கொலை முயற்சித் தாக்குதலுக்கு இலக்கானார். இந்த தாக்குதலினால் அவரது வலது கண் முற்றிலும் குருடாகிவிட்டது.

அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் (டிசம்பர் 21) எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்து மீண்டும் வெற்றி பெற்றார்.

2001 டிசம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியால் தோற்கடிக்கப்பட்டு திருமதி குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது எதிர்க்கட்சி பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்றது.

பிப்ரவரி 2002 இல், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. விடுதலைப் புலிகளுக்கு அளவுக்கதிகமான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக நம்பி திருமதி குமாரதுங்க 2002 நவம்பர் 4 இல் பாராளுமன்றத்தை இடைநிறுத்தி கலைத்தார்.

2004 ஏப்ரல் 2 அன்று, ஜே.வி.பி.யின் ஆதரவுடன், மகிந்த ராஜபக்சவின் பிரதமரின் கீழ் ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தார்.

சுனாமியின் பின்னர் கிடைத்த வெளிநாட்டு உதவிகளை புனரமைப்பு வேலைகளின் போது விடுதலைப் புலி போராளிகளுடன் பகிர்ந்து கொள்ள அரசாங்கம் உடன்பட்டதை அடுத்து 2005ல் ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னனி) அரசாங்கத்திற்கான தனது ஆதரவை விலக்கிக்கொண்டது.

இதனால் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சி 2005 நவம்பரில் முடிவுக்கு வந்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானார். அவர் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்று 12 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கான முதல் காரணியாக கல்வியைக் கருதிய அவர் மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றத் தொடங்கியதிலிருந்து நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தார். புதிய நூற்றாண்டின் மூலதனம் அறிவு என்பதை அவர் அங்கீகரித்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

பாடசாலைகளில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாத்திரம் கல்வியை மேம்படுத்த முடியாது என நம்பிய அவர், “ஆசிரியர் சேவையை” உருவாக்குவதன் மூலம் ஆசிரியருக்கு ஒரு நல்ல சமூக சூழலை உருவாக்க பணியாற்றினார்.

நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியைக் கட்டாயமாக்க சட்டங்கள் இயற்றப்பட்டன. சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவினார்.

அத்துடன் எதிர்காலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் சகாப்தம் என்பதை உணர்ந்த அவர், தனி தொழில்நுட்ப அமைச்சகத்தை உருவாக்கி, அதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்கினார். ரஜரட்ட, வடமேற்கு, சப்ரகமுவ, தென்கிழக்கு மற்றும் ஊவா போன்ற புதிய பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டதுடன், பிள்ளைகளுக்கு பல்வேறுபட்ட தொழில்நுட்ப துறைகளைக் கற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இன்று எந்தவொரு பாடசாலைக் குழந்தைக்கும் இணையத்தைக் கையாளும் திறனை வழங்கிய முன்னோடிகளில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இலங்கை இரானுவத்திற்கு தேவையான அதி நவீன ஆயுதங்கள், இரானுவ தளபாடங்கள், மற்றும் போர் விமானங்களை கொள்வனவு செய்து இலங்கை இரானுவத்தை பலம் மிக்க இரானுவமாக மாற்றுவதற்கு அடித்தாளமிட்டார்.

குடும்ப உறவுகள் அல்ல, தன்னம்பிக்கை, தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவையே அரசியலில் வெற்றிப் பாதையைக் கடக்க வேண்டும் என்று இலங்கைப் பெண் தலைமுறையினருக்கு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டினார். தற்போது முழு நேரமாக அரசியலை விட்டு விலகி தனது குடும்பத்துடன் வாழ்க்கையை கழித்து வருகின்றார்.

Former President of Sri Lanka (1994 – 2005)
தகவல் – sarinigar


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy Policy


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!