தேசப்பிதா D.S. சேனநாயக்க – இலங்கையின் முதலாவது பிரதமர்

தேசப்பிதா D.S. சேனநாயக்க - சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான D. S. சேனநாயக்க கம்பஹா மீரிகம போத்தலே கிராமத்தைச் சேர்ந்த முதலி டொன் ஸ்பேமர் சேனநாயக்க மற்றும் டொன கத்தரினா எலிசபத் பெரேரா குணசேகர சேனாநாயக்க ஆகியோருக்கு 1884 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி மீரிகமவில் பிறந்தார்.

இலங்கையின் தேசப்பிதா, தேசத் தந்தை என்று அழைக்கப்படும் D. S. சேனநாயக்க கல்கிசை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். நில அளவையாளர் அலுவலகத்தில் சிறிது காலம் எழுத்தராக பணியாற்றிய அவர் 1910 இல், எமில் மோடி துனுவில குமாரிஹாமியை மணந்தார். அவர்களுக்கு மூத்த பிள்ளையாக ஜூன் 19, 1911 இல் டட்லி ஷெல்டன் சேனநாயக்கா பிறந்தார்.

1912 ஆம் ஆண்டில் தனது குடும்ப சகோதரர்களுடன் இணைந்து அமத்யப இயக்கத்தைத் தொடங்கினார். 1915 இல் இலங்கையில் நடந்த சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் போது, ஆங்கில ஆட்சியாளர்களினால் D. S. சேனநாயக்க எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி 46 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

லங்கா தேசிய ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது

அமத்யப இயக்கம் பெற்ற உத்வேகத்தின் அடிப்படையில் வெள்ளை ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டத்தைத் புதிய பரினாமத்தில் தொடர பல தேசியத் தலைவர்கள் ஒன்றினைந்தனர். இதன் விளைவாக, 1918 இல், எஃப். ஆர். சேனநாயக்க, டி. எஸ். சேனநாயக்க சகோதரர்களின் தலைமையில் ஜேம்ஸ் பீரிஸ், பொன்னம்பலம் அருணாச்சலம், எச். ஏ. பி. சந்தர சாகர, ஈ. வி. இரத்தினம் போன்ற தலைவர்களின் பங்களிப்புடன் “லங்கா தேசிய ஒன்றியம்” ஆரம்பிக்கப்பட்டது.

சேனநாயக்க 1924 ஆம் ஆண்டில் நீர்கொழும்பிலிருந்து முதன்முதலில் சட்டவாக்கப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 1931 இல் மினுவாங்கொடை தொகுதியிலிருந்து அரசாங்க சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட D. S. சேனநாயக்க அதில் விவசாயம் மற்றும் காணி அமைச்சரானார்.

1936 ஆம் ஆண்டில் மினுவாங்கொடை தொகுதியிலிருந்து அரசாங்க சபைக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்ட அவர் அரசாங்க சபையில் விவசாயம் மற்றும் காணி அமைச்சரானார்.

1941 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது நிறுவப்பட்ட சிவில் பாதுகாப்புத் துறையின் இலங்கை போர் கவுன்சிலின் உறுப்பினராக சேனநாயக்க நியமிக்கப்பட்டதுடன் விவசாயம் மற்றும் காணி அமைச்சராகவும் பதவி வகித்தார்.

டிசம்பர் 1942 இல், இவர் மாநிலங்களவையின் தலைவராகவும், அமைச்சரவையின் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 1946 ஆம் ஆண்டில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கம்

தாராளவாத ஜனநாயக சித்தாந்தங்களை விரும்பும் அரசியல் சக்திகளுக்கு புதிய பாராளுமன்ற பயணத்தை மேற்கொள்ள மாற்று அரசியல் கட்சி தேவையாக இருந்தது. அந்த சமூக மற்றும் அரசியல் தேவையை பூர்த்தி செய்வதற்காக இலங்கை தேசிய சங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து 1947 இல் D. S. சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்.

இலங்கை தேசிய சங்கம், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் சிங்கள மகாசபை, மற்றும் முஸ்லிம் சங்கம் ஒன்றினைந்ததில் இந்தக் கட்சி உருவாகியது.

1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் திகதி இங்கிலாந்தின் காலனித்துவ பணியகம் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்த போது சுதந்திரப் போராட்டத்திற்காக D. S. சேனநாயக்க உட்பட ஏனையவர்கள் செய்த தியாகத்திற்கு பலன் கிடைத்தது.

1947ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் D. S. சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டது. ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்று அரசாங்கத்தை அமைத்தது. இலங்கையின் முதல் பிரதமராக டி. எஸ். பொறுப்பேற்றதுடன், நவம்பர் 21, 1947 இல், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் “இலங்கை சுதந்திரச் சட்டம்” ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 10, 1947 இல், இலங்கை சுதந்திரச் சட்டத்தை அங்கீகரித்து இங்கிலாந்து மன்னர் தனது முத்திரையை வைத்ததும் நாடு முழுவதும் சுதந்திர காற்று வீசியது. பெப்ரவரி 4, 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் விழா கொழும்பில் நடைபெற்றது. அன்று பிரித்தானிய கொடி இறக்கப்பட்டு பிரதமர் டி. எஸ் சேனாநாயகவினால் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது.

1947 இல் இலங்கையின் முதலாவது சுயாதீன பாராளுமன்றத்தில் மீரிகம ஆசனத்தை வென்று பிரதமரான அவர் இலங்கையின் மிகப்பெரிய நீண்டகால பல்நோக்கு அபிவிருத்தித் திட்டமாகக் கருதப்படும் கல்லோயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முன்னோடியாக காணப்பட்டார்.

1949 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் 1953 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. இது இங்கினியாகல நீர்த்தேக்கம், கல்லோயா நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படும் இந்த நீர்த்தேக்கம் சேனாநாயக்க சமுத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 250,000 மக்கள் இப்பகுதியில் குடியேற்றப்பட்டதுடன், ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயல் நிலங்கள் நீர்ப்பாசன வசதியினைப் பெற்றன.

இதனுடன் கல்லோயா தேசிய பூங்கா, சேனாநாயக்க கடல் சரணாலயம் மற்றும் கல்லோயா தென்மேற்கு சரணாலயம் ஆகியவை நிறுவப்பட்டன. இதன் காரணமாக நான்கு முறை இலங்கையின் பிரதமராக இருந்த அவரது மகன் டட்லி சேனநாயக்கவிற்கு தனது முதலாவது அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக பொறுப்புகள் வழங்கப்பட்டன,

முதல் பிரதமர் விடைபெறுகிறார்

இவர் சில காலமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் அவர் மிகவும் களைப்புடன் பிரயாணங்களை மேற்கொண்டு தனது கடமைகளைச் செய்தார். 1952 வாக்கில், நோயின் காரணமாக அவரது இதயம் கடுமையாக பலவீனமடைந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

மார்ச் 20, 1952 வியாழன் அன்று அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தினார். அன்றைய தினம் அமைச்சர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டதுடன் அவர் தனது அமைச்சரவையைச் சந்தித்த கடைசி நாளாகவும் அது காணப்பட்டது.

1952ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி காலி முகத்திடலில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த போது குதிரையில் இருந்து தவறி விழுந்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த அவர் மார்ச் 22ஆம் தேதி உயிரிழந்தார். ஆனால் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு எனவும் குதிரையில் இருந்து தவறி விழுந்தில் அவர் இறக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 29 அன்று, சுதந்திர சதுக்கத்தில் அவர் சுதந்திர இலங்கையின் சிங்கக் கொடியை ஏற்றிய இடத்திலேயே அவரது இறுதி கிரியைகள் நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு – Reezah Jesmin


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!