மக்களின் வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுள்ள களனி கங்கையின் உண்மைகள் களனி கங்கை இலங்கையின் மிக நீளமான ஆறுகளுள் ஒன்றாகும்.
சிவனொளிபாத மலையின் உச்சியில் தொடங்கும் இந்தக் களனி நதி கொழும்பு நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது.
அகாடமி விருது வென்ற குவாய் நதியின் பாலம் (The Bridge on the River Kwai) என்ற திரைப்படம் கித்துல்கல பிரதேசத்திற்க்கு அருகில் களணி ஆற்றில் தயாரிக்கப்பட்டது.
145 கி.மீ நீளமுள்ள களனி கங்கை இலங்கையின் நான்காவது நீளமான நதியாகும்.
களணி ஆற்றுப் படுகை இலங்கையின் ஏழாவது பெரிய ஆற்றுப் படுகை ஆகும். இது 2321 சதுர கிலோமீட்டர்கள்.
ஸ்ரீ பாத தளம் மற்றும் ஹோர்டன் சமவெளியில் இருந்து உருவாகும் களணி கங்கை கொழும்பு நகரின் மட்டக்குளி பகுதியில் கடலில் விழுகிறது.
இலங்கையின் சனத்தொகையில் 25% க்கும் அதிகமானோர் களணி ஆற்றுக்கு அருகில் வாழ்கின்றனர்.3 மாகாணங்கள், 7 மாவட்டங்கள் மற்றும் 37 பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒரு பகுதி களணி ஆற்றின் மூலம் உணவளிக்கப்படுகிறது.
களணி ஆற்றின் ஆரம்ப ஊற்று சிவனொளிபாத மலைத்தொடரின் அப்கோட் பகுதியின் மலைச்சரிவுகளில் இருந்து உருவாகின்றன. இதிலிருந்து தொடங்கி, களணி கங்கை ஏனைய கிளை ஆறுகளிலிருந்து நீரை சேகரித்து ஒரு நீண்ட பயணத்தை ஆரம்பிக்கின்றது.
கித்துல்கலவை அடையும் வரை, இந்த நதி அதன் இளமையில் சுத்தமான நீரோட்டத்தை சுமந்து செல்கின்றது, மேலும் அவிசாவளைக்குப் பிறகு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்தவுடன் மாசுபடத் தொடங்குகிறது. சமீபத்தில், களனி ஆற்றின் மாசுபாடு இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
❖ களனி கங்கையின் தெப்பங்கள்
கடந்த காலங்களில் ஆற்றில் பொருட்களை கொண்டு செல்வதற்கு முதன்முதலில் தெப்பங்கள் பயன்படுத்தப்பட்டன. களனி ஆற்றின் பிரதான படகுத் துறைமுகமாக தொட்டலங்க படகுத்தரிப்பிடம் காணப்பட்டது. இப்போது அவ்விடத்தில் தொட்டலங பாலம் அமையப் பெற்றுள்ளது.
கரவனெல்ல, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் கடுவெல ஆகிய இடங்களில் இருந்து வரும் தெப்பங்களின் தங்குமிடமாக தொட்டலங்க படகுத்தரிப்பிடம் காணப்பட்டது.
ரப்பர், வெற்றிலை, மரக்கறி, தேங்காய், போன்ற பொருட்கள் மட்டுமன்றி ஏன் செங்கல் கூட தெப்பங்கள் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆற்றின் இருபுறமும் உள்ள மக்கள் களணி விகாரைக்கு தெப்பங்கள் மூலம் வருகை தருவது வழக்கமாக காணப்பட்டது.
அன்றைய காலங்களில் கிராமங்களில் இருந்து பாக்கு, கருங்கா, கொப்பரை, கிராம்பு போன்ற பலதரப்பட்ட பொருட்கள் தெப்பம் மூலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்தப் படகுகள் திரும்பி வந்தபோது, வெறுங்கையுடன் வரவில்லை.
கொழும்பில் இருந்து உள்ளூர் கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தேவையான பருப்பு, உருளைக்கிழங்கு, கடலை, அரிசி, மிளகாய் போன்றவை தெப்பம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இதனால், களணி ஆற்றின் கரையோரங்களில் பல படகுத்தரிப்பிடங்கள் காணப்பட்டன.
களனி கங்கை பற்றிய வரலாற்று உண்மைகள்நுகர்வுப் பொருட்களுக்கு மேலதிகமாக, கித்துல்கல, யட்டியந்தோட்டை, கரவனெல்ல பிரதேசங்களில் இருந்து மரக்குற்றிகளும் ஆற்றின் ஊடாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டன.
மரக்கட்டைகள், குற்றிகள் பெரிய தெப்பமாக அமைக்கப்பட்டு அதன் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
1980 கள் வரை, ஆற்றின் வழியாக மரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மரப் படகு ஒன்று இரண்டு நாட்களில் கொழும்பை வந்தடையும்.
படகில் காணப்படும் மரக்கட்டைகள் கொழும்பில் விற்கப்பட்டதன் பின்னர், படகுக்காரர்கள் பேருந்தில் தமது கிராமத்திற்கு திரும்பி வருவது வழக்கமாக காணப்பட்டது.
❖ களனி ஆற்றுப் படுகை 20 துணை ஆற்றுப் படுகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
01. கொலன்னாவ கால்வாய்
02. பல்லேவெல ஓயா/கிராண்ட் கால்வாய்
03. புஸ்வெலி ஓயா
04. வக் ஓயா/ களடுவாவ
05. கடஹத்த ஓயா
06. அம்பலன்பிட்டிய ஓயா
07. சீதாவக கங்கை
08. பணாகுர ஓயா
09. மாகல் கங்கை
10. மஸ்கெலியா ஓயா
11. கெஹெல்கமு கங்கை/காசல்ரீ
12. மேல் களனி ஆறு
13. மேல் மத்திய களனி ஆறு
14. கீழ் மத்திய களனி ஆறு
15. கீழ் களனி ஆறு
16. வெலிஹெல் ஓயா
17. ரிடிகஹ ஓயா
18. குருகொட ஓயா
19. பூகொட ஓயா
20. பியகம
❖ நீர்மின்சாரத்திற்காக களனி ஆறு
நீர் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நீர்த்தேக்கங்கள் மற்றும் பல தனித்துவமான நீர்த்தேக்கங்கள் களணி ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் நீர் மின் உற்பத்திக்கு களணி கங்கையே முதல் பங்களிப்பை வழங்கியது. இதில் பழைய லக்ஷபான நீர்த்தேக்கம் 1950 இல் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் களணி ஆற்றின் கிளை நதிகளான மஸ்கெலியா ஓயா மற்றும் கெஹல்கமு ஓயாவிற்கு அருகில் பொல்பிட்டிய, கனியன், விமலசுரேந்திர, நவ லக்ஷபான மற்றும் சமனல மின் உற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், எமது நாட்டில் நீர்மின்சாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் ஒரு நதி என்ற வகையில் களனி கங்கையும் முக்கியமானது.
❖ களனி ஆற்றுடன் தொடர்புடைய தனித்துவமான நீர்த்தேக்கங்கள்
- லபுகம நீர்த்தேக்கம்
- கலட்டுவாவ நீர்த்தேக்கம்
- மவுஸ்சாகலை நீர்த்தேக்கம்
- கனியன் நீர்த்தேக்கம்
- லக்ஷபான நீர்த்தேக்கம்
- காசல்ரீ நீர்த்தேக்கம்
- நார்டன்பிரிட்ஜ் நீர்த்தேக்கம்
❖ களனி ஆற்றுடன் தொடர்புடைய இலங்கையின் பல புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவைகளில் சிறப்பு வாய்ந்தவைகள்
01. அபெர்டீன் நீர்வீழ்ச்சி
02. லக்ஷபான நீர்வீழ்ச்சி
03. கார்ட்மோர் நீர்வீழ்ச்சி
04. ஓலு அருவி நீர்வீழ்ச்சி
05. மொரே நீர்வீழ்ச்சி
06. ரன்முது எல்லா நீர்வீழ்ச்சி
07. தபோரா நீர்வீழ்ச்சி
08. ரக்கனாவ நீர்வீழ்ச்சி
❖ களனி கங்கையின் மாசுபாடு
களனி கங்கை பற்றிய வரலாற்று உண்மைகள்அவிசாவளை நகரில் இருந்து கொழும்பு வரையான களணி ஆற்றின் நீர் மாசுபாடு மிக அதிகமாக காணப்படுகின்றது.
இதற்குக் காரணம், ஆற்றின் இருபுறமும் தொழிற்சாலைகள் மற்றும் வணிகத் தளங்கள் அதிகமாக இருப்பதுதான். அவிசாவளை கைத்தொழில் பேட்டையில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடைசியாக களனி ஆற்றிலேயே கலக்கின்றது.
கடந்த காலங்களில் அவிசாவளை, பேலியகொட போன்ற பிரதேச மக்கள் களணி ஆற்று நீர் பாவனையினால் உடல் பாதிப்புக்கு உள்ளான ஆய்வு தகவல்கள் பரவலாகப் பேசப்பட்டது.
வீடுகள், வணிக இடங்கள், கடைகள் போன்றவற்றுடன், தொழிற்சாலைகளும் களனி ஆற்றின் நீர் மாசுபாட்டிற்கு அதிகளவில் பங்களிப்பு செலுத்துகின்றன.
களணி ஆற்றுப்படுகையில் சுமார் 11700க்கும் மேற்பட்ட பாரிய தொழிற்சாலைகளும் 14200 நடுத்தர தொழிற்சாலைகளும் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபுகஸ்கந்த பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கும் பட்டிவில கால்வாயை ஒட்டிய சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் கறுப்பு கழிவு எண்ணெய் களணி ஆற்றில் கலக்கப்பட்டதினால், குடிநீரில் எண்ணெய்ச் சுவை இருப்பதாக சில வருடங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
பட்டிவில நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் இந்த கால்வாய் ஆற்றில் விழுகின்றது.
அம்பத்தலே நீரேற்று நிலையத்திற்கு அருகில் களணி ஆற்றில் உப்பு நீர் கலப்பதும் மற்றொரு சுற்றாடல் பிரச்சினையாக மாறியுள்ளது.
அதற்கு தீர்வாக, தண்ணீர் குறையும் போது தண்ணீர் தேங்கி வைக்கும் வகையிலான ஒரு தடுப்பணையை கட்ட நீர்ப்பாசன திணைக்களம், திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
கொழும்பை சுற்றியுள்ள நகர்ப்புற மற்றும் புறநகர் மக்களின் குடிநீர் மற்றும் ஏனைய நீர் தேவையை களணி கங்கை வழங்குகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹாவில் வாழும் 80 வீதமான மக்கள் குடிப்பதற்கு களணி ஆற்றில் இருந்து நீரைப் பெறுகின்றனர்.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம பட்டிவில நீர் சுத்திகரிப்பு நிலையம், மாபிம நீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றிலிருந்து இதற்கான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடுவெல, மாலம்பே, பத்தரமுல்ல, களணி, மாபிம, சபுகஸ்கந்த, கிரிபத்கொட, தொம்பே, தெல்கொட, வெலிவேரிய போன்ற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களுக்கு இவ்வாறு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு களணி கங்கை தென்கரை நீர் வழங்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக ஜாஎல, மஹர மற்றும் கட்டான ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த கால அரசாங்கங்களின் சுற்றுச்சூழல் அமைச்சகம் நதிகளை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க நதிகளை காப்பாற்றும் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியது. களணி கங்கையிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.
எனினும் இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நதிகளின் மாசுபாட்டை நிறுத்தி இயற்கையின் பசுமையை பாதுகாக்கும் இலக்குகள் எட்டப்பட்டுள்ளதா? என்ற கேள்வி காலா காலத்திற்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும் …..
By – SARINIGAR