TIN வரி அடையாள எண் பெறுவது எப்படி?

TIN வரி அடையாள எண் பெறுவது எப்படி?
ஜனவரி 01, 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில், 18 வயதுக்குட்பட்ட அனைத்து நபர்களும் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN – Taxpayer Identification Number ) பெற வேண்டும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தது.

இதில் வரி செலுத்துபருக்கான அடையாள எண்ணைப் பெற்றுக் கொள்வது மட்டுமே செயற்படுத்தப்படும் எனவும், (TIN) எண்ணைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வரி செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

TIN என்பது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைக் குறிக்கிறது. அதாவது வரி சம்பந்தமாக ஒரு எண்ணை பெற்றுக் கொள்வது மட்டுமே ஆகும்.

18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்து இந்த வரி எண்ணைப் பெற வேண்டும். அவ்வளவு தான்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் தரவுகள் இங்கு பெறப்படுகின்றன. தரவுகளைப் பெற்ற பிறகு, உள்நாட்டு வருவாய்த் துறை பின்னர் சில சில நடவடிக்கைகளை எடுக்கலாம்.

எனவே TIN (வரி செலுத்துவோர் அடையாள எண்) வரி அடையாள எண் அல்லது வரிக் கோப்பு எண் என்பது நாம் 18 வயதை அடையும் போது பெற்றுக் கொள்ள வேண்டிய அரசாங்கப் பதிவு எண்ணாகும். இது உங்களுக்கு 16 வயதாகும்போது NIC எண் (தேசிய அடையாள அட்டை) எண்ணைப் பெறுவது போன்றதாகும்.

• NIC உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த உதவுகின்றது போல் எதிர்காலத்தில் பின்வரும் விஷயங்களுக்கு TIN கட்டாயமாகும்.

  1. வங்கியில் நடப்பு கணக்கு (Current Account) ஒன்றைத் திறக்கும் போது
  2. ஒரு கட்டிடத்திற்கான வரைபை அங்கீகரிக்கப்படும் போது
  3. வாகனம் வாங்கும் போது மற்றும் வாகன உரிமம் பெறும் போது
  4. நிலம் வாங்கும்போது
  5. வியாபாரம் ஒன்றை அங்கீகரிப்ப்படும் போது.

• TIN எண்னைப் பெற்றுக் கொண்டால் வரி கட்ட வேண்டுமா? 

இது தற்பொழுது அனைவரிடமும் காணப்படும் மிகப்பெரிய கேள்வி ஆகும். TIN பெறும் அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை.

உங்கள் மாத வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அதாவது உங்கள் வருமானம் வருடத்திற்கு 1.2 மில்லியனுக்கும் அதிகமாக இருந்தால் அல்லது வருடத்திற்கு 12 லட்சத்திற்கு மேல் இருந்தால், TIN ஐப் பெறும் போது நீங்கள் தனிப்பட்ட வருமான வரியில் பதிவு செய்ய வேண்டும். அப்படி வருமானம் இல்லாதவர்கள் வரி கட்ட வேண்டியதில்லை.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வரி சம்பந்தமாக உங்களுக்கென்று ஒரு எண்ணைப் பெறுவதுதான். இதில் நீங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நீங்கள் வரி செலுத்த வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.

தற்போதைய சட்டத்தின்படி, மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது. இந்த எண்னைப் பெறுவதன் மூலம் வரி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.

• இங்கு வருமானம் என்பது,

  1. சம்பள வருமானம்
  2. முதலீடுகள் மூலம் பெறப்படும் வருமானம்
  3. வணிகத்தில் இருந்து பெறப்படும் வருமானம்
  4. ஏனைய வருமானம்
  • இந்த வருமானங்களில் இருந்து குறையும் (கழிவு) தொகையைப் பார்த்தால்,
    உங்கள் முதலீடுகளில் இருந்து கிடைக்கும் வட்டி வருமானத்தில் இருந்து வங்கியால் பிடித்தம் செய்யப்பட்ட வரி (WHT) With Holding Tax,
  • தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தனிநபர் வருமான வரி (APIT) Advance Personal Income Tax ,
  • வீட்டின் Solar Panel Sya ஆகியவற்றின் தொகை நீங்கள் செலுத்த வேண்டிய வரி தொகையிலிருந்து கழிக்கப்படும்.

தனிநபர் வருமான வரி பற்றி நான் முன்பே கூறியது போல், ஒரு வருடத்திற்குள் சம்பாதித்த முதல் 12 இலட்சத்துக்கு வரி விலக்கு உண்டு, அதைத் தாண்டிய வருமானத்திற்கு வரி செலுத்தப்பட வேண்டும்.

  • முதல் 500,000 – 6%
  • இரண்டாவது 500,000 – 12%
  • மூன்றாவது 500,000 – 18%
  • நான்காவது 500,000 – 24%
  • ஐந்தாவது 500,000 – 30%
  • மீதமுள்ள தொகைக்கு 36%

எப்படியிருந்தாலும், இங்கே பலரும் குழப்பமடையும் விடயம் ஒன்று உள்ளது. அதனால் தான் தேவையில்லாமல் இதைப் பார்த்து பயப்படுகிறார்கள். இங்கு அப்படி ஏதும் இல்லை. எனவே குழப்பமடைய அவசியமில்லை.

இங்கு நடப்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு வரிப் பதிவு எண் தருவதே தவிர, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதல்ல. உங்களின் வரித் தொகையை சட்டப்படி குறைக்க வேண்டுமெனின், வரி ஆலோசகரின் உதவியைப் பெறலாம்.

• இப்போது TIN க்கு பதிவு செய்வது எப்படி என்று பார்க்கலாம்

TIN க்கான பதிவு www.ird.gov.lk இணையதளத்தில் ஆன்லைனில் செய்யலாம். இல்லையெனில், அருகிலுள்ள உள்ளூர் வருமான வரி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

TIN ஐ எப்படிப் பெறுவது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன், நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், TIN சான்றிதழைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது நபரிடமிருந்தோ நீங்கள் சேவையைப் பெறவில்லையென்றால், உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தைத் தவிர எந்தவொரு தரப்பினருக்கும் உங்களின் தனிப்பட்ட முக்கியமான தகவல்களை வழங்க வேண்டாம்.

TIN எண்ணை (தனிப்பட்ட முறையில்) பெறுவதற்கு முன், பின்வரும் ஆவணங்களின் தெளிவான ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைத் தயார் செய்யது கொள்ள வேண்டும்.

01. தேசிய அடையாள அட்டை / செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் / வயது வந்தோர் அடையாள அட்டை.

02. உங்களின் நிரந்தர முகவரி தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் இருந்து வேறுபட்டிருந்தால், தொடர்புடைய முகவரியை உறுதிப்படுத்த உங்கள் பெயரில் வழங்கப்பட்ட நீர் அல்லது மின்சார கட்டணம் / நிலையான தொலைபேசி கட்டணம் / கிராம ஊழியர் சான்றிதழ்.

03. நீங்கள் பதிவுசெய்யப்பட்ட தனி வியாபார, வணிக உரிமையாளராக இருந்தால், தொடர்புடைய வணிக பதிவு சான்றிதழ்.

Ø படிமுறை 01

TIN சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் முதலில் உள்நாட்டு வருவாய் துறையின் ePortal ஐ அணுக வேண்டும், அதை எந்த நேரத்திலும் அணுகலாம். 👇

TIN Registration

(Registration eService – RAMIS (ird.gov.lk)

TIN வரி அடையாள எண் பெறுவது எப்படி?

 

Ø படிமுறை 02

குறிப்பிட்ட இணையத்தள பக்கத்தில், ‘Registration Type’ (பதிவு வகை) குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ‘INDIVIDUAL LOCAL’ (தனிப்பட்ட உள்ளூர்) என்பதைத் தேர்ந்தெடுத்து, பெறப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்) மொழிகளில் உங்களுக்கு வசதியான ஒரு மொழியில் சரியாக நிரப்பவும்.

  1. அருகிலுள்ள பிராந்திய அலுவலகம் ‘Nearest regional office’ பகுதியை நிரப்ப வேண்டாம்.
  2. Contact Number பிரிவில், உங்கள் மொபைல் எண்ணையும் சரியான மின்னஞ்சல் முகவரியையும் உள்ளிடவும்
  3. விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது வங்கி தகவலை ‘BANK INFORMATION’ கட்டாயமாக வழங்க வேண்டும் என குறிப்பிடாததால், அந்த பகுதியை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
  4. நீங்கள் திருமணமானவராக இருந்தால், ‘FAMILY INFORMATION’ குடும்பத் தகவலின் கீழ் விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
  5. நீங்கள் தனிப்பட்ட வணிக உரிமையாளராக இருந்தால், ‘INDIVIDUAL BUSINESS’ தனிப்பட்ட வணிகத்தின் கீழ் உங்கள் வணிக விவரங்களை சரியாக உள்ளிடவும்.

Ø படிமுறை 03

துணை ஆவணங்கள் ‘Supporting Documents’ பிரிவில் உங்கள் தேசிய அடையாள அட்டை உட்பட ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து பதிவேற்றவும்.

பதிவின் நோக்கம் ‘Purpose of registration’ என்ற பிரிவில் Tax Purpose என்பதை தேர்ந்தெடுக்கவும்.

பின்னர், குறித்த பக்கத்தில் கீழே உள்ள ‘அடுத்து’ ‘Next’ button பொத்தானைக் click செய்யவும்.

 

Ø படிமுறை 04

நீங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இப்போது காண்பீர்கள்.

நீங்கள வழங்கிய தகவல்கள் மாற்றப்பட வேண்டிய அவசியமில்லை எனில், DECLARATION பிரிவை பூர்த்தி செய்து அதன் அருகில் காட்டப்பட்டுள்ள சரிபார்ப்புக் குறியீட்டை ‘✓’ உள்ளிட்டு ‘submit’ சமர்ப்பிக்கவும் .

உங்களது TIN சான்றிதழைப் பெறும் வரை நீங்கள் பெறும் Acknowledgement ஐ சேமிக்கவும்.

உங்களின் TIN சான்றிதழ் மற்றும் PIN இலக்கம் ஐந்து வேலை நாட்களுக்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

TIN (வரி அடையாள எண்) பெறுவது எப்படி?

* TIN சான்றிதழைப் பெறுவதன் மூலம் நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. உங்கள் வருமானம் வரி செலுத்த வேண்டிய மட்டத்திற்கு உட்பட்டதாக இருந்தால் மட்டுமே நீங்கள் வரி செலுத்த, வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

TIN எண்னை பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படுமா? அபராத தொகை எவ்வளவு செலவாகும்? என்பதைப் பற்றி தற்போதைக்கு உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. ஜனவரி 31 காலக்கெடுவுக்குப் பிறகு அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே அது சரியாகச் சொல்ல முடியும்.

எனவே, இந்த விடயத்தில் ஏதோ அவதானம் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

 

By – SARINIGAR

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!