உங்கள் மனைவியின் அன்பை வெல்வது எப்படி…?

மனைவிஉங்கள் மனைவியின் அன்பை வெல்வது எப்படி…?
(குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்)
Ø அழகிய வரவேற்பு

○வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போதோ, வெளியூர் பயணங்கலிருந்தோ அல்லது வீட்டுக்கு எங்கிருந்து வந்தாலும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.

○மலர்ந்த புன் முகத்துடன் ஸலாம் கூறியவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் கூறுவது நபி மொழி மட்டுமல்ல அது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் ஆகும்.

○ அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா” செய்யலாம்.

○வெளியில் நடந்த நல்ல செய்திகளைத் முதலில் தெரிவித்து விட்டு ஏனைய செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக ஒத்தி வையுங்கள்.

Ø இனிப்பான வார்த்தைகளும் சிறப்பான கனிவும்
• நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.

• உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும் பொழுது செவி தாழ்த்துங்கள்.

• தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

• மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

Ø நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்

❂ மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.

❂ நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

❂ உங்களின் சந்தோஷ அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும் பொழுது மீட்டிப் பாருங்களேன். (முதலிரவு மற்றும் சுற்றுலாவின் பொழுது ஏற்பட்ட…)

Ø விளையாட்டும் கவன ஈர்ப்பும்
• நகைச் சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

• ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொது அறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.

• இஸ்லாம் மார்க்கம் அனுமதித்த விடயங்களை (விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சிகள் போன்றவைகளை ) பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள்.

• இஸ்லாம் அனுமதிக்காத ‘பொழுதுபோக்கு” விஷயங்களை (சினிமா போன்றவற்றை) மறுத்து விடுங்கள்.

Ø வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி

• வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணை புரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியாகவோ களைப்படைந்தோ இருந்தால்.

• கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும் பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப்படுத்துங்கள்.

Ø மனைவியின் ஆலோசனை

• குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங்கள். ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான பிரச்சினைக்கு சிறந்த ஆலோசனையை வழங்கியது அவர்களது மனைவி தான்.

• அவளிடம் கலந்துரையாட, ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் நிலையில் அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள். (பிள்ளைகளின் படிப்பு, திருமண விடயங்கள் போன்றவை)

• மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.

• மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளி விட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.

• ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.

Ø பிறரை காணச் செல்லும் பொழுது

• மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமைவைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் தமது உறவினர்களைப் பார்க்க செல்வதில் இறைவனிடம் நன்மை இருக்கின்றது என்பதை நினைவுப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் அநாவசியமான, வீண் பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதை கண்டியுங்கள்).

•அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.

• அவளுக்கு சங்கடம் தரக் கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

Ø உங்களின் வெளியூர் பயணத்தின் பொழுது

• மனைவிக்கு தேவையான நல்ல அறிவுரைகளை கூறிவிட்டு அழகான முறையில் விடை பெறுங்கள்.

• உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.

• நீங்கள் வீட்டில் இல்லாத பொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவசியமான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்ளலாம்.

• குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்துச் செல்லுங்கள்.

• நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின் பொழுது தான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும்உணர்வு உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).

• முடிந்த வரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.

• வீட்டுக்கு திரும்பி வரும் வேளையில் அவளுக்கு பிடித்த பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.

• எதிர்பாராத நேரங்களிலோ அல்லது இரவு நேரங்களிலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).

• பிரச்சினைகள், கஸ்டம் எதுவும் இல்லை என்றால் மனைவியையும் தன் உடன் அழைத்துச் செல்லலாம்.

Ø பொருளாதார உதவி

❖கணவன் என்பவன் தனது குடும்பத்தினது பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் நபராக இருக்க வேண்டும் மாறாக கஞ்சத்தனம் பார்கக் கூடாது. (அதே போல் வீண் விரயமும் செய்யக் கூடாது)

❖மனைவிக்கு கொடுக்கும் உணவு, உடை முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள் வரை அனைத்திற்கும் இறைவனிடம் நன்மை உண்டு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

❖ அவசிய தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பது தான் சிறந்தது.

Ø அழகும் நறுமணமும்

• நபி வழியின் படி அக்குள் முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.

• எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.

• அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளுங்கள்.

Ø தாம்பத்யம்

• மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுப்பது கணவனின் கடமை. (உடல் நலக் குறைவோ அல்லது உங்களின் மனைவியின் அனுமதியோ இருந்தால் தவிர).

• பிஸ்மில்லாஹ் (இறைவனின் திரு நாமத்தால்) என்று சொல்லி ஆதாரபூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கை விட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.

• அதற்கெனவே உள்ள முன் பக்கத்தின் வழியாக மட்டும் (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).

• காதல் வார்த்தைகளுடன் முன் விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.

• அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.

• அமைதிக்குப் பிறகு நகைச் சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.

• மாதவிடாய் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவ துஹராம் (தடுக்கப்பட்டது).

• பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்ச சுபாவத்தை நீக்குவதில் எல்லை கடந்து விடாதீர்கள்.

• அவளின் நோய், வலிகள் மற்றும் களைப்படைந்த விடயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

Ø இரகசியங்களைப் பாதுகாத்தல்

• படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப்பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்.

Ø இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில்உதவியாக இருப்பது
• தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப் பகுதியில் எழுப்புங்கள்.

• உங்களுக்குத் தெரிந்த திருக் குர்ஆன் அறிவைஅவளுக்கும் போதியுங்கள்.

• காலை மற்றும் மாலை நேரங்களில் ஓதக் கூடிய திக்ர் (இறை நினைவுகளை) அவளுக்கு போதியுங்கள். (நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்)

• இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வ மூட்டுங்கள்.

• ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்கு (பணம் மற்றும் உடல்) வசதி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

Ø மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்தல்

• மனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள்.

• உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்பு கொடுங்கள். அப்படி வரும் பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

• அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

• பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

• உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும் பொழுது) கொடுத்தது போல் கொடுத்து அன்பு பாராட்டுங்கள்.

Ø இஸ்லாமியப் பயிற்சி

• கீழே கூறப்பட்டுள்ளவற்றை அறிந்து கொள்வதற்கு உங்களால் முடிந்தளவு உதவிகளை செய்வது:

– இஸ்லாத்தின் அடிப்படை
– அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்
– படித்தல் மற்றும் எழுதுதல்
– இஸ்லாமிய மார்கக் கல்வி மற்றும் அதன் நுணுக்கமான விடயங்களைப் படிப்பதற்காக ஆர்வமூட்டுவது
– பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்
– வீட்டின் உள்ள நூலகத்திற்காக பயனுள்ள புத்தகங்கள் மற்றும் சீடிக்களை வாங்குவது.

Ø மேன்மையான அக்கறை

» வெளியில் போகும் பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.

» மஹரம் இல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளது சிறிய மற்றும் பெரிய தந்தையின் மகன்களாக இருந்தாலும் சின்னம்மாவின் பெரியம்மாவின் மகன்களாக இருந்தாலும் உங்களது தம்பியாக இருந்தாலும் தவறு தான்).

» அதிகப்படியான அக்கறையைத் தவிர்ந்து கொள்வது. உதாரணமாக:

» அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வமாக இல்லாமல் வாய் தவறிக் கூட பேசியிருக்கலாம்.

» அவசர விஷயத்திற்காக அருகாமையில் உள்ள இடங்களுக்குப் போவதை தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)

» தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதை கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக் கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)

Ø பொறுமையும் சாந்தமும்

❖ மண வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள்வருவது சாதாரண விஷயம் தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல ஒவ்வொரு வீட்டிலும் இவைகள் ஒவ்வொரு உருவத்தில் உலா வருகின்றன). அதிகளவான கடினமான பொறுப்புகளை கொடுப்பது, அநாவசியமான பிரச்சினைகளை பெரிதாக்குவது, போன்றவை தான் திருமண பந்தத்தை முறித்து விடுகின்றது.

❖ இறைவன் விதித்த வரம்புகளை மீறும் போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையை தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், விர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.

❖உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.

Ø தவறுகளை திருத்துதல்

•• முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.

••• அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிபடுத்துக் கொள்ளுங்கள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டை விட்டு வெளியில் சென்று விடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.

••• அந்த முறையிலும் திருந்தாவிட்டால், இறுதி முயற்சியாக அவளுக்கு காயம் ஏற்படாதவாறு மென்மையாக அடிக்கலாம் (அதுவும் அவள் தகுதியுடையவளாக இருந்தால் மட்டும்).

– மனைவியை அடிப்பது என்பது நபி வழியில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய விடயமாகும். நபியவர்கள் ஒரு போதும் தமது மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் கணவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

– மனைவி (எந்த காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டை விட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது கணவனுக்கு எங்கே சென்றிருந்தாள் என்பதை சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியை பயன்படுத்தலாம்.

– குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டது போல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தா விட்டால் தான் இந்த அடிக்கும் அனுமதியை கணவ ர்பயன்படுத்தலாம்.

– காயம் உண்டாகுமளவிற்கு முகத்திலோ அல்லது மென்மையான பகுதிகளிலோ அடிப்பது கூடாது.

– செருப்பை எடுத்து அடிப்பது, பிள்ளைகள், ஏனையவர்கள் முன்னிலையில் அடிப்பது , திட்டுவது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடவே கூடாது.

Ø மன்னிப்பும் கண்டிப்பும்

• பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.

•• உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.

•• தவறு செய்யக் கூடிய சந்தர்ப்பங்களில் உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை, குணங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் (உங்களது கோபம் குறைந்து விடும்).

••• எல்லா மனிதர்களும் தவறு செய்யக் கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ( களைப்பு, மனச்சோர்வு, மாதவிடாய் மற்றும் வேறு ஏதேனும் பிரச்சினைகளினால், மன உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்)

•••• சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியை கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியை கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்படுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்து விடுவார்கள் தவிர எந்த விமர்சனமும் செய்யமாட்டார்கள்.

••••• தவறுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்கு முன் வேறு வழியில் நயமாக சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.

•••••• அவமரியாதை செய்யக் கூடிய வகையில் திட்டுவதை தவிர்ந்துக் கொள்ளுங்கள்.

••••••• பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும் வரை பொருத்திருங்கள்.

•••••••• உங்களை சுய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவற்காக கோபம் அடங்கும் வரை சற்று பொறுமையாக இருங்கள். எதற்கெடுத்தாலும் கோபம் வருவதை கட்டுபடுத்திக் கொள்ளுங்கள்.


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy PolicyX

Leave a Reply

error: Content is protected !!