கடந்த காலங்களில் போதைப்பொருள் என்றால் ஹெராயின், கோகைன் மற்றும் கன்ஜா போன்றவைகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். எனினும் இப்போது அவற்றைப் பற்றி நாம் அரிதாகவே கேள்விப்படுகிறோம்.
உலகில் எல்லா இடங்களிலும் இன்று ஐஸ் எனும் போதைப் பொருளைப் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. ஏன் இலங்கையில் கூட இன்று ஐஸ் எனும் போதைவஸ்து பெரும் பேச்சுப் பொருளாகவும், சமூக சீர்கேட்டின் உச்சமாகவும் காணப்படுகின்றது.
உண்மையில் இந்த ஐஸ் என்றால் என்ன…?
இங்கு ஐஸ் என்பது மக்கள் தங்கள் வாய்ப் பேச்சுக்காக பயன்படுத்தும் ஒரு வார்த்தையாகும். இது உண்மையில் மெத்தம்பேட்டமைன் அல்லது கிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வேதிப்பொருளாகும். இது கட்டி (க்யூப்ஸ்), பவுடர் மற்றும் மாத்திரை வடிவங்களில் வருகின்றது. இந்த க்யூப்ஸ் வடிவத்தில் காணப்படும் குறிப்பிட்ட வேதியல் பொருள் உண்மையில் ஐஸ் கட்டிகளைப் போலவே காணப்படும்.
குளிர்சாதன பெட்டியில் உள்ள ஐஸ் கட்டிகளை துண்டுகளாக உடைத்தால் எப்படி அந்த ஐஸ் கட்டிகள் இருக்குமோ அதே போல் இதுவும் அப்படித்தான் இருக்கும். அதனால் தான் இதற்கு ஐஸ் என்று பெயர் வந்தது.
ஐஸ் அடிப்பது என்றால் என்ன?
உடைந்த கண்ணாடி பல்பு அல்லது பீக்கருக்குள் ஐஸ் போதைப் பொருளை வைத்து அதை கீழே இருந்து சூடாக்கி, பின்னர் ஒரு குழாயின் உதவியுடன் வரும் புகையை உள்ளிழுப்பது தான் இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரபலமான ஒரு முறையாக உள்ளது.
(இவ்வாறு சற்று விளக்கமாக கூறியதற்கு காரணம் ஐஸ் போதைப் பொருளை அடிப்பது எப்படி என்று உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக அல்ல, தனது மகனின் படுக்கையறையில் காணப்பட்ட உடைந்த மின் விளக்கு எதற்கு என்று தெரியாத பல தாய்மார்கள் இருந்தனர். மேலும் தமது மகனின் மேசையில் எரிந்த காணப்பட்ட பீக்கரை அறிவியல் வகுப்பிற்குத் தேவைப்படும் பொருளாக இருக்கலாம் என்று நினைத்த தந்தையர்களும் இருந்தனர். அவர்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கூறினேன்.)
மற்ற நாடுகளில், ஐஸ் போதைப் பொருளை சூடாக்கி, கரைத்து, சிரிஞ்ச்களில் போட்டு ஊசி மூலம் உடம்பில் ஏற்றப்படும் முறைகளும் காணப்படுகின்றது.
ஐஸ் போதைப் பொருளை நீங்கள் எப்படிப் பயன்படுத்தினாலும் சரி… அதைப் புகைத்தாலும் சரி, குடித்தாலும் சரி, ஊசி போட்டாலும் சரி, விழுங்கினாலும் சரி… அது நம் மூளையை நேரடியாகப் பாதிக்கின்றது.
நமது மூளையின் ஒரு பகுதி இருக்கின்றது. அங்குதான் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கப்படுகின்றது. அந்தப் பகுதியில் உள்ள செல்கள் மூலம் தான் டோபமைன் (dopamine) எனும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகின்றது.
சுருக்கமாகச் சொன்னால், அந்த ஹார்மோனின் சுரப்பால் நாம் மகிழ்ச்சி, மனநிறைவு போன்றவற்றை உணர்கிறோம். இந்த ஹார்மோன் நம்மை மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறது.
நமக்குப் பிடித்த ஒரு பாடலைக் கேட்டதும், நம்மால் செய்ய முடியாத ஒரு வேலையைச் செய்து முடித்ததும், அல்லது ஒரு சுவையான உணவைச் சாப்பிட்டதும், நம்மால உணரப்படும் ஒரு திறுப்திகரமான மகிழ்ச்சியான உணர்வுக்கு காரணம் இந்த ஹார்மோன் தான்.
ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தியவுடன் அது மூளையின் இந்தப் பகுதிக்குச் சென்று டோபமைனை உற்பத்தி செய்யும் பகுதியைத் தூண்டுகிறது. அதே நேரத்தில், நமது மூளை அதிக அளவு டோபமைனை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. சில சமயம் அது ஒரு கணத்தில் வாழ்நாளில் உற்பத்தி செய்யாத அளவு டோபமைனை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றது.
பொதுவாக, நம் மூளையில் 100% டோபமைன் உள்ளது என்று வைத்துக் கொண்டால், நாம் ஒரு சுவையான உணவை உண்ணும் போது, அது இன்னும் 50% அதிகரித்து, நாம் ஒரு விதமான இன்ப உணர்வை உணர்கிறோம். நமக்கு இன்பத்தை அளிக்கும் வேறு ஏதாவது செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம், நமது டோபமைன் மேலும் 100% அதிகரிக்கிறது.
நமக்கு மகிழ்ச்சியைத் தரும் அந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றுவதற்கு காரணம் குறித்த ஹார்மோன் உற்பத்தியாகும்.
ஆனால், ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தியவுடன், இந்த 100% மகிழ்ச்சி தற்காலிகமாக சுமார 1000% ஆக அதிகரிக்கின்றதாம், அதாவது பத்து மடங்கு… எனவே, இதன் மூலம் நம்ப முடியாத அளவு மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் வேடிக்கையை நாம் உணரத் தொடங்குகிறோம்.
நினைவில் கொள்ளுங்கள், ஐஸ் போதைப் பொருள் எனக் கூறப்பட்டாலும் ஐஸ் பாவனையாளர்கள் போதையாவதில்லை.. கண்கள் சிவப்பதில்லை… மயக்கம் வருவதில்லை… தள்ளாடுவதில்லை… சிந்தனை திறன் காணப்படுவதில்லை..
அடிமையாகுவது ஏன்
ஒரு விதமான புத்துணர்வுடன் மகிழ்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. மணிக் கணக்கில் நாட் கணக்கில் தூங்காமல் எதையும் செய்யலாம்.. நாட்கள் மிகுந்த சிலிர்ப்பில் கழிகின்றன.. நல்ல உணவைச் சாப்பிடுவதால் வரும் சிலிர்ப்பு, உணவை சாப்பிடாமலே கிடைப்பதால் பசி தாகம் கூட ஏற்படுவதில்லை.. சூப்பர்மேன் சக்திகளைப் பெற்றதைப் போல் ஓர் உணர்வு..
தூங்காமல் அல்லது சாப்பிடாமல் எந்த வேலையையும் செய்யலாம் என்ற ஒரு தற்காலிக உணர்வும் ஏற்படும். அதனால் தான் இதற்கு சீக்கிரம் அடிமையாகிறார்கள்… இதனால் தான் பல நீண்ட தூர பேருந்து ஓட்டுநர்கள் இதைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.. அவர்களுக்கு சோர்வு, தூக்கம், பசி அல்லது எதுவும் விளங்காது…
சுவையான உணவை உண்பது, அழகான காட்சியைப் பார்ப்பது, உங்களுக்குப் பிடித்த ஒன்றைச் செய்வது, காதல் செய்வது, பிடித்த விளையாட்டை விளையாடுவது போன்ற மகிழ்ச்சிகரமான விஷயங்கள் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும் இந்த டோபமைனை உடனடியாக அதிக அளவில் உருவாக்குவதால் ஆரம்ப கட்டத்திலேயே ஐஸ் போதைக்கு மக்கள் மிக விரைவாக அடிமையாகிறார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கும்..
இது சில நாட்கள் தொடர்து நடக்கும்… ஐஸ் போதை வஸ்து வருகிறது… இது மூளை செல்களைத் தூண்டுகிறது. அது மீண்டும் மீண்டும் அதிக அளவு டோபமைனை உற்பத்தி செய்கிறது… ஐஸை எடுத்துக் கொள்பவர் மகிழ்ச்சியின் உச்சத்தை உணர்கிறார்…
சில நாட்களுக்குப் பிறகு, மூளையின் செல்கள் சோர்வடைகின்றன… ஏனென்றால் மூளையின் டோபமைன் உற்பத்தி மிக மிக அதிகமாக உள்ளது… மூளையின் செல்களால் இனி இயற்கையாகவே டோபமைனை உற்பத்தி செய்ய முடியாது போகும். அதாவது மூளை ஐஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும். அது வரும்போது மட்டுமே, அது டோபமைனை உற்பத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றது.
சுருக்கமாகச் சொன்னால், ஐஸ் இல்லாமல் டோபமைன் உற்பத்தியாகாது.. மகிழ்ச்சி தொலைந்து போகிறது.. இப்போது தான் மிகவும் ஆபத்தான பகுதி… மக்கள் பேய்களைப் போல மாறத் தொடங்குகிறார்கள்.. அவர்கள் தேவையற்ற பயத்தை, விரக்தியை, சோர்வை, மன உளைச்சளை உணரத் தொடங்குவார்கள்.
இப்போது அந்த நபருக்கு இது ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்தியதால் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்.. அவருக்கு ஐஸ் போதைப் பொருள் தேவையில்லை.. அதை விட்டு விடவும் முடிவெடுப்பார்.. ஆனால் அவருக்கு டோபமைன் வேண்டும்.. இங்கு கவலைக்குறிய விடயம் இப்போது அவரது மூளை ஐஸ் இல்லாமல் டோபமைனை உற்பத்தி செய்யாது.
டோபமைனுக்காக அந்த நபர் ஐஸ் போதைப் பொருளை கேட்டு கெஞ்சும் நிலை ஏற்படும். இது ஒரு பேரழிவு என்று தெரிந்த பின்னரும் அதிலிருந்து மீண்டு வர முடியாது. அவனால் பின்வாங்க முடியாது. அவன் பின்வாங்கினாலும், டோபமைன் இல்லாமல் அவனால் வாழ முடியாது..
உடல் வலி, சோர்வு, பயம், விரக்தியை அவன் உணர்கிறான்.. அதற்கான பதில் இன்னும் ஐஸ் போதைப் பொருளை நாடுவது தான்… அவன் பள்ளத்திலிருந்து பாதாளத்திற்கே விழுகின்றான்.
கிரிஸ்டல் மெத் இப்படித் தான்… தப்பிக்க விரும்பினாலும்… ஒருபோதும் தப்பிக்க முடியாது… என்ன தியானம், மெடிடேஷன் செய்தாலும், தப்பிக்க முடியாது.. ஐஸ் போதைப் பொருளால் தான் அழிக்கப்படுவதை அந்த நபரே புரிந்துகொண்டாலும் அவரால் தப்பிக்க முடியாது…
எனவே, ஒருவர் ஐஸ் போதைப் பொருளை முதன் முதலில் பயன்படுத்தும் நாள் தான், அந்த நபர் தனது வாழ்வை முடித்துக் கொள்ளும் நாளாகும்.
ஐஸ் தயாரிக்க பயன்படுத்தப்படுவது என்ன …
ஆச்சரியப்பட வேண்டாம்.. ஐஸ் தயாரிக்கப் பயன்படும் எதுவும் இயற்கையானது அல்ல. இது மரம், தாவரங்களிலிருந்து கிடைக்கும் ஒன்றல்ல. அனைத்தும் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் இரசாயன பொருட்கள்..
Pseudoephedrine – சூடோஎபிட்ரின்
சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அதை குணப்படுத்த கொடுக்கப்படும் மருந்து.. அதிக பக்க விளைவுகள் இருப்பதால், இது மிக மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்து என்று கூறப்படுகிறது. ஆனால் ஐஸ் தயாரிக்கும் போது, அவர்கள் இதை மூட்டை கணக்குகளில் சேர்ப்பார்கள்.
Acetone – அசிடோன்
நகப் பூச்சு நீக்கிகள் (Nail polish removers) பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது தான் இந்த அசிட்டோன். வண்ணப்பூச்சுகளின் (Paints) அடர்த்தியைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனம்.
Ammonia – அமோனியா
இது உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள்.
Hydrochloric acid – ஹைட்ரோகுளோரிக் அமிலம்
இது ஒரு கிளீனர். இவை கழிப்பறைகளை சுத்தம் செய்யப் பயன்படுகின்றன. நீக்க முடியாத கறைகளை நீக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.. லைசோல், ஹார்பிக்கில் இருப்பது இதுதான்.
Lythium – லித்தியம்
பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருள்.
Red phosphorus – சிவப்பு பாஸ்பரஸ்
இவற்றிலிருந்து பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை வெடிபொருட்கள். அதனால் தான் சில நேரங்களில் ஐஸ் போதை பொருள் தொழிற்சாலைகள் தீப்பிடித்து வெடித்ததாக செய்திகள் வௌி வருகின்றன.
Toluene – டோலுயீன்
பொதுவாக தொழில்துறை கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இது வண்ணப்பூச்சுகள், பசைகள் மற்றும் துப்புரவுப் பொருட்கள் போன்ற பல பொருட்களில் காணப்படும் ஒரு பொதுவான கரைப்பான். டோலுயீன் அதிக அளவு வெளிப்பாடு சுவாசப் பிரச்சனைகள், நரம்பியல் அறிகுறிகள் மற்றும் உறுப்பு சேதம் உள்ளிட்ட உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும்.
Sulfuric acid – பேட்டரி அமிலம்
மிகவும் சக்திவாய்ந்த மற்றும் முக்கியமான ஒரு கனிம அமிலமாகும், இது உரம் தயாரித்தல், கனிமப் பிரித்தெடுத்தல், பெட்ரோலியம் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற, அடர்த்தியான திரவமான இது, தானியங்கி வாகனங்களுக்கான கார பேட்டரிகளில் (சல்பூரிக் அமிலம்) பயன்படுத்தப்படுகிறது.
இவைகள் தான் ஐஸ் போதைப் பொருளில் காணப்படுகின்றது. இதனால் தான் இதனை அரக்கனின் படைப்பு எனக் கூறுகின்றனர். கிரிஸ்டல் என்ற பெயரை வைத்ததும் அதை மிகவும் தூய்மையாகவும் தெளிவாகவும் தோன்றச் செய்தாலும்… இது உண்மையில் கிரிஸ்டல் மெத் அல்ல, crystal death கிரிஸ்டல் மரணம், தௌிவான மரணமாகும்.
ஐஸ் போதைப் பொருள் நம் மனதை சிதைக்கும் மற்றொரு வழியும் உள்ளது. எமக்கு கவலை ஏற்பட வேண்டிய சூழலில் சந்தோஷம் ஏற்படவும், சந்தோஷத்தை உணரப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் கவலையையும், பயப்பட வேண்டிய அபாயகரமான நேரங்களில் தைரியத்தையும் உண்டாக்கி நமது மனதை கலங்கடிக்கும் திறனும் இந்த கிரிஸ்டல் மெத்திற்கு உண்டு.
ஐஸ் போதைப் பொருள் பயன்படுத்துபவரின் அதிகபட்ச ஆயுட்காலம் 10 ஆண்டுகள் தான். பற்கள், எலும்புகள் சீக்கிரமாக சிதைந்து போக ஆரம்பிக்கின்றன.
20/25 வயதுடைய ஒருவர் 50/55 வயதுடையவர் போல் தோற்றமளிப்பார். முழு உலகும் தனக்கு எதிராக நிற்பது போல் உணர்வார். எந்த காரணமும் இல்லாமல் சோகமாக நிலையை உணரத் தொடங்குவார். சமூகம் தன்னை ஒதுக்கி வைக்கப்பட்டதாக உணரத் தொடங்குவார்.
சமூகத்திடம் பழிவாங்கத் தோன்றும். மற்ற மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கத் தோன்றும். இறுதியில் தனது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிக் கொள்ளும் மனநிலை தோன்றும். இது தான் இந்த கிரிஸ்டல் மெத்தின் சோகம்…
இனி மூளையில் டோபமைன் உற்பத்தியாகாது. ஐஸ் அடித்தால் தான் அது உற்பத்தியாகும். வலியை போக்க வேறு வழியில்லை. அதனால் தன் கடைசி மூச்சு வரை ஐஸ் போதை பொருளை வேண்டி நிற்பார்கள். இது தான் ஐஸ் போதை பொருளின் கதை.
மிகவும் அபாயகரமான, ஆபத்தான விடயம் என்னவென்றால், இன்று இந்த சமூகத்தில் ஹெராயினை விட ஐஸ் போதை பொருள் மிகவும் சாதாரணமாக, பரவலாக காணப்படுவது தான்.
ஆம், உங்கள் பிள்ளை, சகோதரன், சகோதரி, காதலன், காதலி என யாராக இருந்தாலும், யாராலும் அடையக்கூடிய எல்லைக்குள் இந்த ஐஸ் அரக்கன் வந்து விட்டது. முன்னர் வௌி நாடுகளிலிருந்து சிரமப்பட்டு கொண்டு வரப்பட்ட ஐஸ் போதை பொருள் இன்று உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு வந்துள்ளது.
இழை அகற்றப்பட்ட ஒரு பல்ப். எரிந்த அடிப்பகுதியுடன் ஒரு ஸ்பூன். தீயால எரிந்த ஒரு பீக்கரை நீங்கள் எங்கேனும் பார்த்தால், உங்கள் எல்லைக்குள் ஐஸ் போதை பொருளால் பாதிக்கப்பட்டவர் இருக்கிறார்.
கவனமாக இருங்கள்… எச்சரிக்கையாக இருங்கள்….
ஆக்கம் – SARINIGAR.com