மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

தொடர்பாடல், உபதேசம்

ஒரு மனிதன் பாவியாகுவதற்கு, அவன் உணவளிக்க கடமைப்பட்டவருக்கு (மனைவிக்கு) உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.’ (நூல்: அபூதாவூது.)

ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவள் மணம் முடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு கணவனின் கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அப் பெண்ணின் கடமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நபிகள் () அவர்கள் கூறிய, “நல்ல பெண் யாரென்றால், கணவன் அவளைக் காணும் பொழுது அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் அதற்கு கீழ்படிந்து நடப்பாள். தனது விடயத்திலும்; தமது பொருள் விடயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத மாற்றமான போக்கை கடைப்பிடிக்க மாட்டாள்!’ என்ற நபிமொழிக்கு அமைய, ஒரு பெண் பணிந்து கண்னியமாக வாழ்ந்தால் தான் அவள் சிறந்த பெண்மணி என்ற நற்பெயரை பெற்றுக் கொள்ள முடியும்.

கண்ணியமிக்க கணவனை அவமதிக்கும் வகையிலும் தான் பெற்ற பிள்ளைகளை அநாதரவாக விட்டும் ஒரு பெண் வாயடித்துக் கொண்டும், வம்பளத்துக் கொண்டும், அடங்காப் பிடாரியாக சுற்றித் திரிந்தாள் என்றால்ஊர் சமூகம், இவளா? அவள் ராட்சசியாயிற்றே! வாயாடியாயிற்றே! பெண் உருவில் நடமாடும்ஆயிற்றே! என்றெல்லாம் (அவளது காதில் விழாதவாறு) பேசத் தலைப்படுவர்கள். இத்தகைய பெண்களை நபிகளார் () அவர்கள் கண்டித்து கடிந்துரைத்துள்ளார்கள்.

கணவனுக்கு மாறு செய்வதன் மூலமும் கண்டதற்கு எல்லாம் பிறரை சாபமிடுவதன் காரணமாகவும் அனேக பெண்கள் நரகம் புகுவதை நான் கண்டேன்என நபிகள் () அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆக, ஒரு கணவன் தமது மனைவியுடன் இன்பமாக வாழ்வதற்கு அப்பெண் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க சட்டமுறைகள், வழிபாட்டு வணக்க முறைகள் பற்றி இஸ்லாம் தௌிவாக சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி வாழ்வது இஸ்லாமிய பெண்ணின் கடமையாக இருக்கின்றது.

எனினும் ஒரு பெண்ணுக்கு இஸ்லாமிய மார்க்கம் கூறிய அளவு அறிவுரைகளை, அவளை திருமணம் செய்த கணவனுக்கு எடுத்துரைக்கவில்லையா? என்ற கேள்விக்கணை முஸ்லிம் பெண்கள் சமூகத்திலிருந்து எழுந்தவாறுள்ளது. இவ்வாறு இவர்கள் கேள்வி கேட்பதற்கான நியாயமான காரணங்களும் உள்ளன.

ஒரு பெண் இஸ்லாமிய மார்க்கத்தின் படி எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? ஒழுக்க விழுமியங்கள் பேண வேண்டும்? கணவரையும், பிள்ளைகளையும், உறவினர்களையும், அண்டை அயலாரையும் அவள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான உபதேசங்கள் நிறையவே உள்ளன.

அவை ஒவ்வொரு பிரதேசங்களிலும் பிரசங்கங்களில் உபதேசம் செய்யப்படுகின்றன. ஆனால், இது போன்ற அறிவுரைகள் கணவனுக்கும் அதிகம் இருந்தாலும் கணவனுக்கு செய்யும் உபதேசங்கள் அறிவுறைகள் குறைவாக உள்ளன.! அது ஏன்? என்ற கேள்வியை பெண்கள் கேட்கின்றனர்.

அதை தவிர, ஒரு சில குடும்பங்களில் சில கணவன்மார்களின் குடும்பப் பெண்கள் கடும் பிரச்சனைக்கும் தொல்லைக்கும் ஆளாகுவதுடன், அவனது கொடுமையான பிடியில் நரக வேதனையான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இன்னும் சில கணவன்கள் தமது பெண்களை அடிமைகளைப் போல் எண்ணி இழிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் தமது குடும்பப் பொறுப்பை நினைத்து சம்பாதிக்காமல் மாமனார் வீட்டில் சாப்பிட்டு, வாழ்ந்து மிடுக்குடன் பவனி வருகின்றனர்.

மற்றும் சிலர் திருமணம் முடித்த கையோடு மனைவியை அந்தரத்தில் விட்டு விட்டு தலைமறைவாகி விடுகின்றனர். இன்னும் சிலரிடம் சொல்ல முடியாத அளவு உடல்கூறு நோய்கள், கடும் பிணிகள், கெட்ட பழக்க வழக்கங்கள் இருப்பதால் பல பெண்கள் தமது சுகமான நிம்மதியான வாழ்வை இழக்கும் நிலை காணப்படுகின்றது.

இப்படி எத்துனையோ வகையான வெகு மோசமான குற்றங்கள், குறைகள், கெட்ட விடயங்கள் பல கணவன்களிடம் உண்டு. இதில், பலரின் அவதூறுகளையும் கிசுகிசுப்பு வதந்திகளையும் நம்பி அமைதியின் வடிவங்களாகத் திகழும் பெண்களை அணுஅணுவாக இம்சித்து கேவலப்படுத்தி சித்ரவதை செய்யும் கொடும்பாவிகளும் உண்டு.

அனைத்து ஊர்களிலும் இப்படிப்பட்ட அவஸ்தைகளால், துன்புறுத்தல்களால் மனமுடைந்து குமுறி அவதியுறும், அவஸ்தைப்படும் அபலைப் பெண்களின் ஈனஸ்வரங்கள் தான் சில சமயம் இது போன்ற கேள்விக்கணைகளாக மாறுகின்றது.

அதாவது, பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாமிய மார்க்கம் இது போன்ற கொடுமைக்கார, பொறுப்பற்ற கணவன்களுக்கு ஒன்றும் கூறவில்லையா? என்பது தான் அந்தக் கேள்விக்கணைகள்!

உண்மையில் இஸ்லாம் மார்க்கம் கணவன்மார்களுக்கும் நிறையவே அறிவுரைகளை கூறியுள்ளது. இதோ, ஒரு பெண்ணை ஓர் ஆண் கரம்பிடித்து விட்டால், அந்த நிமிடமே கணவனின் கடமைகள் என்ன என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நீங்கள் அப்பெண்களை சிறந்த முறையில் வாழச் செய்யுங்கள். இது சுருக்கமான அல்குர்ஆன் வசனமாகும். இதைத் தொடரந்து அல்லாஹ் () இவ்வாறு உபதேசிக்கின்றான்.

இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள்நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் (அவர்களில்தான் உங்களுக்கு) அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். அல்குர்ஆன் 4:19

பெண் இனத்தின் மீதே நல்ல அபிப்ராயத்தை உண்டாக்கும் வகையில் இவ்வசனங்களை அல்லாஹ் () கூறியுள்ளான். இனிய இல்லற வாழ்க்கை, இரணவிருத்தி, மன நிம்மதி போன்ற பாக்கியங்களை ஒருவன் மணமுடித்த பின் கரம்பிடித்த தன் மனைவியின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்அதை முறையாக கனிவாகப் பெறுவது கணவனின் கடமையாகும் என்பது இவ்வசனங்களின் நோக்கம்.

ஒரு மனிதன் பதவிகள், பட்டங்கள், சொத்து செல்வங்கள் பிள்ளைப்பேறுகள் மூலம் அடையாத அமைதியை நிம்மதியை தமது மனைவி மூலம் அடைய முடியும். தமது மனைவி மூலம் அவன் காணும் அன்பும் கனிவும், ஆதரவுமே முக்கியமானது, நீடித்தது நிலைக்கக் கூடியது, கலங்கலில்லாதது! என்பதை இதோ இன்னொரு வசனத்தில் அல்லாஹ் () தெளிவுபடுத்துகிறான்.

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 30:21)

இந்தளவு பெண்களின் பெருமையை அல்லாஹ் () கணவன்களுக்கு அறிவித்துள்ளான். ஒரு பெண்ணுக்கு உரிய கடமைகளை தனது திருமறையில் விபரித்துள்ளதுபோல், ஆணுக்கும் அவனது கடமைகளை தெளிவாக உபதேசித்துள்ளான்.

இஸ்லாமியப் பெண்களில் பலர் குர்ஆன், ஹதீஸ் உட்பட மார்கக் கல்வியை கற்பதிலும் மார்க்க நூல்களை படிப்பதிலும் அக்கறையின்றி இருப்பதால், கணவன் மீது தங்களுக்கு உள்ள உரிமைகளைப் பெற்றுக் கொள்ளத் தெரியாமல் இருக்கின்றார்கள்.

பெண் உரிமை நிலைநிறுத்தும் உபதேசங்கள் அல்குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகின்றன. குர்ஆனில் எங்கெல்லாம் பெண்களுக்கான உபதேசங்கள், அறிவுறைகள் இடம் பெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஆண்களுக்கும், உபதேசங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில எடுத்துக் காட்டுகளைப் கீழே பாருங்கள்.

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். – அல்குர்ஆன் 24:30
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; – ஆல்குர்ஆன் 4:32

இப்படி ஆண்களுக்கும் பெண் உரிமைகளை போதிக்கும் அறிவுறைகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் இஸ்லாமிய சட்ட அமைப்பிலும் நிறைவே காணப்படுகின்றன.

அதேபோல், பெண்கள் விடயத்தில் ஆண்களுக்கு சற்று அதிகமான அறிவுரைகள் காணப்படுகின்றது

அப்பெண்களுக்கு உரிமைகள் உள்ளன! கடமைகள் உள்ளது போல்!’ என்ற அல்குர்ஆன் வசனத்தை இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துக்காட்டுகின்றார்கள். இவ்வசனத்தில் பெண்களின் கடமைகளை சுட்டிக் காட்டும் சொல்லை விட அவர்களது உரிமைகளுக்கு குரல் எழுப்பும் சொல்லானது முதன்மை இடம் பெற்றுள்ளது.

பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக செவி சாய்த்துள்ளதற்கு இவ்வசனம் ஒன்றே பலமான சான்றாக காணப்படுகின்றது!

ஒரு கணவனினால், தனது மனைவிக்கு நியாயமான முறையில் வாழ்க்கையை கொடுக்க முடியவில்லை எனில் அப் பெண்னிற்கு அன்பான முறையில் விவாக விடுதலை அளித்து விடுவதே அவனது மனிதத் தன்மைக்கும் மனித நேயத்துக்கும் சிறந்த அடையாளமாகும்.

அண்டை வீட்டார்கள், தமது பணியாட்கள்ஏன் முஸ்லிம் அல்லாத ஏனைய மதத்தினர்கள்இன்னும் கூறுவதென்றால் ஏனைய உயிரினங்கள், புற்பூண்டுகளுக்கம் அத்துணை படைப்புகளின் உரிமைகளையும் போற்றச் சொல்லும் இஸ்லாமிய மார்க்கம்மஹர் கொடுத்து கண்ணியமான முறையில் ஒரு பெண்ணை கரம் பிடிக்கச் செய்யும் போதுஅவளது பெண் உரிமையை எந்தளவு மதிக்கின்றது என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணை ஆதரித்து பாதுகாக்கும் முறையை நபி () அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்:

நீங்கள் சாப்பிடும் பொழுது மனைவியையும் சாப்பிடச் செய்யுங்கள். உங்களுக்க ஆடை வாங்கும் போது மனைவிக்கும் வாங்குங்கள். அவளது முகத்தில் அடிக்காதீர்கள். அசிங்கமாக பேசாதீர்கள். வீட்டில் தவிர (பொது வெளியில்) அவளைக் கண்டிக்காதீர்கள்.’ (ஆதாரம்: அபூதாவூது)

இது போன்ற ஹதீஸ்கள் எல்லாம், ஒரு பெண்ணை இரக்கமில்லாமல் தண்டிப்பதையும், பாசம் மிக்க அவளது பெற்றோரிடமிருந்து அவளை அரக்கத்தனத்துடன் பிரித்து வைப்பதையும், அவளை அனாதையாக விட்டு விட்டு ஒதுங்கி தலைமறைவாகி விடுவதையும், தனது நோய்கள், பிணிகள் காரணமாக அவளுக்கு சிறந்த வாழ்கையை கொடுக்க முடியாத பொழுது, கண்ணியமான முறையில் விவாக விலக்களித்து அவளது மறுவாழ்வுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதையும் இஸ்லாம் பெரிதும் கண்டிக்கின்றன.

ஒரு மணிதர் அவரது மனைவி பிள்ளைளை நேர்மையுடன் பராமரிக்க கடமைபட்டவராக இருக்கின்றார். அது பற்றி அவர் மறுமை நாளில் விசாரிக்கப்படுவார்!’ (ஆதாரம்புகாரி)

என்ற ஹதீஸை சம்மந்தப்பட்ட கணவன்மார்கள் சிந்திக்க வேண்டும். தமது மனைவியை எந்தவொரு வகையில், நோவினை செய்தாலும், இம்சித்தாலும், தமக்கு விளையும் இறை முனிவுகள், தண்டனையிலிருந்து எந்த ஆணும் தப்பிக்க முடியாது.

நபி () அவர்கள் தமது வாழ்வில் சமுதாயத்துக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான உரை நிகழ்ச்சிகளில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு அவர்கள் நிகழ்த்திய அரபா பிரசங்கம் வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

இக்கால கட்டம் இஸ்லாம் முழுமை பெற்றிருந்த காலமாகும். அது பெருமானார் () அவர்கள் இறைவனைக் காணச்செல்வதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருந்த காலமாகும். இலட்சக்கணக்கான ஸஹாபாக்கள் கூடியிருந்த அந்த சபையில் அவர்களின் உரையின் அதிகமான விடயங்கள் பெண்ணினத்துக்கே பெருமை, கௌரவம் சேர்ப்பதாகவும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்தது.

மக்களே! பெண்களுடன் நியாயமான கனிவான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக்கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம். தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்குநியாயமான பல உரிமைகள் உண்டுஅதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவரஉணவும், உடையும் அளிக்கவேண்டும்.’ (ஆதாரம்புகாரி)

உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களின் மனைவியிடம் சிறந்தவர் ஆவார்! நான் எமது மனைவியரிடம் சிறந்தவராக இருக்கின்றேன்’. என்ற நபிகளார் () அவர்களின் கூற்றுக்கு அமையஒவ்வொரு ஆணும் தனது மணைவியின் உரிமைகளையும், கௌரவத்தையும், அந்தஸ்துகளையும் காப்பாற்றுவது புனித கடமையாகும்.

மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி,
முதல்வர், ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா, நீடூர்.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!