பிச்சை காசு வாங்கும் ஆணுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை
நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வுடன் கொடுத்து விடுங்கள் அதனிலிருந்து ஏதேனும் ஒன்றை விருப்பத்துடன் அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)
ஒவ்வொரு ஆணும் திருமணம் செய்யும் போது தன் மனைவிக்கு மஹர் எனும் திருமணக் கொடை வழங்க வேண்டும் என்று அல்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .
முஸ்லிம் சமூகத்தில் பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் சீதனம் எனும் வரதட்சணை பிச்சைகளைக் கேட்டு கொடுமைப்படுத்தி வரும் கேவலமான நிலையை நாம் பார்க்கிறோம்.
இந்த கேவலத்திற்கு சில ஊர் மக்களும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.
வரதட்சணை சீதனக் கொடுமையினால் வசதியில்லாத குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள், திருமணம் தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்வுகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமூக மக்களின் கல் நெஞ்சைக் கரைப்பதாக இல்லை.
தக்க வயதில் திருமணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், இதன் காரணமாக அந்தக் குடும்பமுமே அவமானத்தால் தலை குனிவதும் பல இடங்களில் வழக்கமாகிவிட்டது.
முழு சமுதாயத்துக்குமே இதனால் அவமானம் வந்தாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை.
பெண் குழந்தைகளை பெற்றெடுத்த காரணத்துக்காக ஊர் ஊராகப் சென்று, கண்ட நிண்டவர்களிடமெல்லாம் பிச்சை எடுத்துத் தான் வரதட்சனை தரப்படுகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் அந்தப் பிச்சை காசு வாங்குவதில் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை.
கிராமப் பகுதிகளில் பிறந்த பெண் குழந்தையின் வாய்க்குள் நெல்லைப் போட்டு கொலை செய்யும் செய்திகளும், நகர்ப்புறங்களில் கருவில் பெண் குழந்தை இருப்பதை ஸ்கேன் மூலம் அறிந்து கொண்டு கருவிலேயே சமாதி கட்டும் செய்திகளும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
இதற்கெல்லாம் காரணம் சீதனம் எனும் வரதட்சணைக் கொடுமை தான் என்பது நன்றாகத் தெரிந்தாலும் இந்தக் பாவத்திலிருந்து விலகிக் கொள்ள முஸ்லிம் சமுதாயம் மறுத்து வருகிறது.
குடும்ப வாழ்கையில் இருவரும் மகிழ்சியடையும் போது வாழ்க்கையில் இருவருக்கும் சமமான பங்கு இருக்கும் போது யாரும் யாருக்கும் சீதனம் கொடுக்கத் தேவையில்லை என்று பெண்கள் இயக்கங்கள், சமூக நிறுவனங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.
ஆனால் அல் குர்ஆனோ இந்த வரதட்சனையைக் ஒழித்துக் கட்டுவதில் உலகத்துகே முன்னணியில் நிற்கிறது.
இங்கு ஆண் பெண்ணுக்கும் கொடுக்கத் தேவையில்லை! பெண் ஆணுக்கும் கொடுக்கத் தேவையில்லை! என்று கூறாமல் ஆண்கள் மட்டும் பெண்களுக்கு வரதட்சனை கொடுக்க வேண்டும் எனக் கூறுகிறது. உலகில் எந்த மார்க்கமும் – இயக்கமும் – சட்டங்களும் கூறாத வித்தியாசமான கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது.
யாரும் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதைவிட, ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்மென்து தான் நியாயமானது, அறிவு பூர்வமானது, வரவேற்கத்தக்கது என்பதை சற்று சிந்திக்கும் போது புரிந்து கொள்ளலாம்.
திருமண வாழ்வில் இணையும் ஆணும் பெண்ணும் சமமாக இன்பம் அடைகிறார்கள் என்பது உண்மை என்றாலும் மணவாழ்வின் காரணமாக அதிகமான சுமைகள், கஷ்டங்கள் பெண்கள் மீது தான் உள்ளது. அவர்கள் விரும்பினாலும் அதனை விரும்பா விட்டாலும் அவர்கள் தான் அவற்றைச் சுமந்தாக வேண்டும்.
திருமணம் முடிந்தவுடன் ஆண்கள் தனது வீட்டில் தனது உறவினர்களுடன் வழக்கம் போலவே வாழ்ந்து வருவார்கள். ஆனால் பெண்கள் தனது பெற்றோர், உறவினர்கள், ஊர் என்று அனைத்தையும் தியாகம் செய்து வருகின்றனர்.
பிறந்த வீட்டை மறந்து விடுவதை சாதாரணமானதாகக் கருதி விட முடியாது. பெண்களின் இந்த தியாகத்துக்காக ஆண்கள் அவர்களுக்கு மஹர் கொடுப்பது தான் நியாயமானது.
பிறந்த வீட்டில் தனது வேலையைக் கூட செய்து பழகாதவள் புகுந்த வீட்டில் தன் கணவனுக்கு மாத்திரமின்றி கணவனின் குடும்பத்திற்காகவும் பணிவிடைகள் செய்கிறாள். தினமும் புகுந்த வீட்டுக்காக உழைக்கிறாள். ஆண்கள் பெண்களின் இந்த தியாகத்துக்காக கொடுப்பது தான் நியாயமானது.
இருவரும் இல்லறத்தில் ஈடுபட்டதால் பெண் கர்ப்பம் அடைந்து விட்டால் அதனால் அவளுக்கு ஏற்படும் சிரமம் சாதரணமானது அல்ல. எதையும் சாப்பிட முடியாது. ஆசைப்பட்டதை உண்டவுடன் வாந்தி வரும்! நாள் செல்லச் செல்ல இயல்பான அவளது எல்லா அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன.
இயல்பாக நடந்து செல்ல முடியாது. இயல்பாக தூங்க முடியாது. இப்படிப் பல மாதங்கள் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறாள்.
அப் பெண் அந்த கஷ்டமான நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த ஆண், தந்தையாகப் போவதற்கு எவ்வித கஷ்டத்தையும் அடைவதில்லை. இந்த தியாகத்துக்காகவே பெண்களுக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் கொடுக்கலாம்.
அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது மரணத்தின் வாசலைத் தட்டி-விட்டு மறு ஜென்மம் எடுக்கிறாள். செத்துப் பிழைக்கிறாள். இவ்வுலகில் இதற்கு நிகரான ஒரு வேதனையை உதாரணமாகக் கூட எடுத்துக் காட்ட முடியாது.
வாரிசைப் பெற்றுத் தருவதற்காக அவள் படுகிற கஷ்டத்திற்காக ஆண்கள் பெண்களுக்கு கொடுப்பது தான் நியாயமானதாகும். இந்த ஒரு கஷ்டத்துக்காக கோடி கோடியாக கூட கொடுக்கலாம்.
குழந்தையைப் பெற்றெடுத்த பின் இரண்டு வருடங்கள் தூக்கத்தை தியாகம் செய்து கண் விழித்து பாலூட்டி வளர்க்கிறாள். தனது உதிரத்தையே உணவாகக் கொடுத்து ஆணின் வாரிசை வளர்க்கிறாள்!
கழுவிக் குளிப்பாட்டி சீராட்டி அழகு பார்க்கிறாள்! ஒவ்வொரு கணமும் குழைந்தைக்காக தன்னையே அர்ப்பணித்து விடுகிறாள்! இதற்காகவும் ஆண்கள் தான் கொடுக்க வேண்டும்.
இப்படிச் சிந்த்தித்துப் பார்த்தால் இன்னும் பல காரணங்களைக் சொல்லிக் கொண்டே போகலாம். இதன் காரணமாகத் தான் பெண்களுக்குரிய மஹர் எனும் மணக்கொடையை ஆண்கள் மனமுவந்து வழங்கிட வேண்டும் என்று அல்குர்ஆன் கட்டளையிடுகிறது.
திருமணக் கொடை என்பது நூறோ இருநூறோ அல்லது ஆயிரமோ வழங்கி ஏமாற்றுவது அல்ல! நமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்றவாறு தாராளமாக வழங்குவதே மஹர் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஒரு குவியலையே கொடுத்தாலும் அதிலிருந்து திரும்பப் பெறாதீர்கள் (அல்குர்ஆன் 4:20) என்று கூறுவதன் மூலம் மஹர் என்னும் திருமணக்கொடைக்கு அளவு இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான்.
பெண்களுக்கு வரதட்சனைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெட்கமில்லாமல் பெண்களிடமே சென்று பிச்சை கேட்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை உணர வேண்டும்.
கொடுக்காமல் இருப்பது ஒரு குற்றம். வாங்கியது மற்றொரு குற்றம் என்று இரண்டு குற்றங்களுக்கான தண்டனையை சந்திக்கும் நிலை மறுமையில் ஏற்படும் என்பதையும் உணர்து கொள்ள வேண்டும்.
ஊர் மக்கள், மஸ்ஜித் நிர்வாகங்கள் வரதட்சனை பிச்சை வாங்கும் திருமணங்களை அடியோடு புறக்கணிக்கும் நிலையை உருவாக்கி அல்லாஹ்வின் கட்டளையை நிலை நாட்ட முன்வர வேண்டும்.
இளம் சமுதாயம் வரதட்சணை பிச்சையினால் ஏற்படும் சமூக அவலங்களை உணர்ந்து அந்த மூடப் பழக்கத்தை இல்லாதொழிக்க முன்வர வேண்டும்! எல்லாம் வல்ல இறைவன் இதற்கு அருள் புரியட்டும்!