மஸ்ஜித் தலைமை பொறுப்பு பற்றி வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை வழங்கும் அதே வேளை அந்த தலைமையித்தில் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான நபி (ﷺ) அவர்களின் வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.
பதவிகள், பொறுப்புகள் என்பது அமானிதமாகும். அமானிதத்தை உரிய முறையில் நேர்மையாக பேணி மக்களின் நம்பிக்கையைப் பெறுவதோடு இறைவனின் அருளையும் பெற வேண்டும்.
இன்று பொறுப்புகள், பதவிகள், அதிகாரத்தின் மீதான மோகமும் ஆசையும், பெருகிப் போயிருப்பதையும் அதை அடைவதற்காக எதனையும் செய்வதற்கும், எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்வதற்கும் தயாராக இருப்பதையும் பரவலாக காண முடிகின்றது.
பெரும்பாலான மக்கள் தாம் வகிக்கும் பொறுப்புகளை, பதவிகளை ஒரு அலங்காரமாக, அந்தஸ்தாகக் கருதிக் கொண்டு தங்களை தாமே ஏமாற்றிக் கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிட்ட பதவியால் தமக்கும் கிடைக்கும் புகழ், அதிகாரம், செல்வாக்கு ஆகிய காரணங்களுக்காகவே பொறுப்புகளைப் பெறுவதற்கு ஆசைப்படுகின்றனர்.
இஸ்லாம் பொறுப்பு என்பது ஓர் அமானிதம் என்றும் அதை சரியான முறையில் நீதியாக, நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
பொறுப்புகளுக்கு, பதவிகளுக்கு வருபவர்கள் சில விடயங்களை பற்றி கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.
- இது இறைவன் தந்த அருட்கொடை.
- அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமநிலையில், நடு நிலையாக இருக்க வேண்டும்.
- பொறுப்பு என்பது மறுமை வாழ்வையும், சுவனத்தையும் தீர்மானிக்கும் மகத்தான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
- பொறுப்புகளை கேட்டுப் பெறுவது மற்றும் பொறுப்புகளைப் பெறுவதற்காக போட்டி போடுவதன் ஆபத்தை தெறிந்து பயப்பட வேண்டும்.
- பொறுப்புகள் குறித்து நிச்சியமாக அல்லாஹ்விடம் விசாரணை கட்டாயம் உண்டு என்பதை நினைவில கொள்ள வேண்டும்.
♣ மகில் இப்னு யஸார் (رضى الله عنه) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகரத்தின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் அவர்கள் சென்றார். அவரிடம் மகில் (رضى الله عنه) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ﷺ) அவர்கள், “ஓர் அடியானுக்குக் மக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காப்பதற்கு தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் நுகர மாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள். ( நூல்: புகாரி )
♣நீங்கள் அதிகாரத்தை, பதவியை அடைய பேராசைப் படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக நீங்கள் வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தரும் சுகங்)களிலேயே பதவி (ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்கவைப்ப (தன் துன்பத்) திலேயே பதவி (ப் பாலை நிறுத்துவது) தான் மோசமானது” என நபி(ﷺ) அவர்கள் கூறினார்கள். ( நூல்: புகாரி )
♣ அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) ஒரு பொறுப்பில் அமர்த்தக் கூடாதா?’’ என்று நான் கேட்டேன். நபி (ﷺ) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகின்றாரோ அவரைத் தவிர (ஏனையவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்’’ என்று கூறினார்கள். ( நூல்: புகாரி )
♣அல்லாஹ்வின் தூதர் நபி (ﷺ) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், மக்களை சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், மக்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ( நூல்: முஸ்லிம் )
♣உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்கள் பொறுப்பில் உள்ளவர் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் தமது பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார். குடும்பத்தலைவர் தமது குடும்பத்தார்க்கு அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவார். குடும்பத் தலைவியும் பொறுப்பாளரே! அவர் தமது பொறுப்பில் உள்ள தமது கணவரின் வீட்டார் குறித்தும் தமது பிள்ளைகளுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் கேள்வி கேட்கப்படுவார். எஜமானர் பொறுப்பாளரே! அவர், தமக்குக் கீழே பணிபுரியும் பணியாட்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவார்!” என்று (ﷺ) அவர்கள் கூறினார்கள்.
எனவே மஸ்ஜித் நிர்வாகம் எனும் மகத்தான பொறுப்பை பெறும் தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்புகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம் :
01. தக்வா
தலைவரிடம் இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பின் கீழ் உள்ள மக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு அமைய இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம், எண்னம் உள்ளவராகவும் தன் கடமைக்குரிய செயல்களுக்கான கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் இருக்க வேண்டும்.
02. அறிவு
வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாமிய வழிகாட்டல் எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலத்திற்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராக இருத்தல் வேண்டும்.
மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகள், நடைமுறைகள் பற்றியும் விரிவான அறிவு கொண்டவராக இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் (رضي الله عنه) அவர்கள் குறிப்பிடுகையில் “இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்று ஜாஹிலிய்யாவை பற்றி அறியாத ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.
03. உறுதி கொண்ட நெஞ்சம்
“அல்லாஹ்விற்கு (ﷻ) மிக விருப்பமான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக அதனை செய்வதாகும்” (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கு அமைய தான் எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு (ﷻ) உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள், தடைகள் வந்தாலும் அதை செய்து முடிக்கக் கூடிய திறன், தைரியம் உடையவராக மஸ்ஜித் தலைமை இருத்தல் அவசியம்.
எத்தனை எதிர்ப்புகள் தடைகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் தைரியம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
04. நிலைமைகளை கணிக்கும் திறன்
தனது பலம், பலவீனம், நிலைமைகள் பற்றி இஸ்லாமிய தலைமை அறிந்து, தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராக மஸ்ஜித் நிர்வாகிகள் இருக்க வேண்டும்.
பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போல் தெரியாவிட்டாலும் தொலை நோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை, இலக்கைக் கொண்டு மஸ்ஜித் நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.
05. நீதி செலுத்துதல்
மஸ்ஜித் தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், நட்பு, செல்வாக்கு, அதிகாரங்களுக்கு பணியாமல் சரியான முறையில் நேர்மையாக நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும்.
“மக்களில் ஒரு கூட்டத்தினர் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (அல்குர்ஆன் 5:8)
06. பொறுமை, வீரம், திடவுறுதி
இம்மூன்று பண்புகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும்.
இஸ்லாமிய மார்க்கமானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பணி என்பதால் பல்வேறு குறுக்கீடுகள், இடையூருகள் வரும்.
தடங்கல்களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் நிதானமாக பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக மஸ்ஜித் தலைமை இருத்தல் அவசியம்.
07. பொது அறிவு திறன்
இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் (ﷺ) அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புறிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலைகளைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புறிந்து கொண்டு, வேலைகளை, பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
தமது எண்ணங்களையம், கொள்கைகளையும், திட்டங்களையும் மக்கள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு “சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்” எனும் இறை வசனத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராக மஸ்ஜித் நிர்வாகிகள் இருத்தல் வேண்டும்.
08. சேவை மனப்பான்மை
“சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி) எனும் நபி மொழிக்கு அமைய சேவை மனப்பான்மை கொண்டவராக தலைவர் திகழ்தல் வேண்டும்.
09. ஷூரா
தன்னிச்சையாக முடிவுகளை எடுக்காமல் இறையச்சமும் கல்வி அறிவும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக மஸ்ஜித் தலைவர் இருத்தல் வேண்டும்.
“இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வொறு காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்” (ஷூரா 38)
“அனைத்து காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக” (ஆல இம்ரான்- 159)
– Mohideen Kadhar –
சரிநிகர்.com