இஸ்லாமிய குடும்பத்தில் ஆண்களின் பங்கு

ஆண்
”உங்களுக்கு, அவர்கள் ஆடையாகவும்-அவர்களுக்கு, நீங்கள் ஆடையாகவும் இருக்கின்றீர்கள்” (அல்-குர்ஆன் – 2:187)
என்று இறைவன் ஆண்களை நோக்கி கூறுகிறான். மானத்தை காக்கும் ஆடையாக ஒருவருக்குகொருவர் இருக்கும் படி கூறும் இறைவனின் வாக்கு ஆண் பெண்ணுக்கும், பெண் ஆணுக்கும் பாதுகாவலர் என்பதை அழகாக எடுத்துக் காட்டுகின்றது.

சமுதாயத்தின் தொடக்கப் பள்ளியான குடும்பத்தில் ஆண்களின் வகிபாகம் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம். ”குடும்பம்” என்பது கணவன், மனைவி இரு சாராரையும் பின்னிப் பிணைந்த ஒன்றின் பெயராகும்.

பெண்னின் துணையின்றி ஆணுக்கு மட்டுமோ ஆணின் துணையின்றி பெணுக்கு மட்டுமோ சீராக நடத்த முடியாத ஒன்றின் பெயரே ”குடும்பம்” என்று சொன்னாலும் அது மிகையாகாது.

ஏனெனில் இருவரும் குடும்பம் என்ற கூட்டமைப்பிற்குள் ஒருவரை விட்டும் மற்றொருவரை பிரித்துப் பார்க்க முடியாத கலவையாவர். எனினும், இந்த இல்லற உறவில், ஒவ்வொருவருக்கும் அவரவருக்கேற்ற கடமைகளையும், உரிமைகளையும் இஸ்லாம் அளித்துள்ளது.

ஒரு குடும்பத்தை நிர்வாகிப்பது அதனை வழி நடாத்திச் செல்லும் பொறுப்பை ஆணின் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை. ”ஆண்கள், பெண்களின் நிர்வாகிகளாவார்” என்ற இறை வசனம் எடுத்துக் காட்டுகின்றது.

எனினும் நிர்வாகப் பொறுப்பை வகிக்கும் ஆண் தனக்கு எல்லாவித அதிகாரங்களும் உண்டு என நினைத்து கொடுங்கோல் நிர்வாகியாக மாறி விடக்கூடாது.

இதனையே நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“உங்களில் சிறந்தவர், யார் உங்களது மனைவியின் அன்பைப் பெற்று அவர்களிடம் தாம் நல்லவர் என்ற பெயரைப் பெறுகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் | ஆதாரம்: அபூதாவூது 2054)

உலக மக்கள் அனைவருக்கும் ஒப்பற்ற வழி காட்டியாகவும். அழகிய முன்மாதிரியாகவும் விளங்கும் நபி (ஸல்) அவர்கள் தன் குடும்ப வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும் போது.

”எனது மனைவியர்களிடம் நான் நல்லவர்” என்ற பெயரைப் பெற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறி தன்னையே இதற்கும் முதல் உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

மேலும், “குடும்ப உறவை முறித்து வாழ்பவன் சுவனம் செல்ல மாட்டான்” (புகாரி: 5984) என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் நூற்களான புகாரி, முஸ்லீம் அறிவிக்கின்றன.

தனது மனைவியினது ஒழக்க மேம்பாட்டில் ஒரு ஆணினது உண்மையான பங்கு மகத்தானது என்பதை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாம்,

தங்கள் மனைவியிடம் தான் விரும்பாத ஒன்றைக் கண்டால், பிற மக்களுக்கு மத்தியில் அதைச் சுட்டிக் காட்டுதல் ஒரு கணவனின் அத்துமீறல் என்று கண்டிக்கும் வகையில், மனைவியை பழிக்க வேண்டாம் என்றும் குறைகளைக் கண்டால் அதை வீட்டிலேயே அழகிய முறையில் சரி செய்து கொள்ள வேண்டும் என அறிவுருத்தியுள்ளது.

மனைவியிடம் தான் விரும்பாத வெறுக்கும் குணங்களைக் கண்டு கவலைப்படும் கணவனுக்கு, மனைவியிடம் காணப்படும் நல்ல பண்புகளை எண்ணி மனநிறைவு அடைந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகின்றது.

அல்லாஹ்வின் தூதரே! தனது மனைவி ஒரு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்று நபித் தோழர் வினவியபோது

”நீங்கள் உணவு உண்ணும் போது அவர்களையும் உண்ணச் செய்ய வேண்டும். உங்களுக்கு புத்தாடைகளை வாங்கும் போது மனைவியையும் எண்ணிப் பார்த்து அவர்களுக்கும் புத்தாடை அணியச் செய்ய வேண்டும். அவர்களின் முகத்தில் அடிப்பதும், பழிப்பதும் கூடாது. வெறுப்பை காட்டி கண்டிப்பது எல்லாம் வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும்”. என்று விளக்கம் அளித்தார்கள்.

தனது மனைவி தன் கண்களுக்கு அழகாக காட்சி தர வேண்டும் என்று விரும்பும் கணவனைப் பார்த்து உங்களுக்கு இருக்கும் அதே உணர்வும், அழகை அனுபவிக்கும் தன்மை பெண்ணுக்கு உண்டு என்று கூறிய நபியவர்கள் பரட்டைத் தலையுடன் இருந்த ஒருவரை எண்ணெய் வைத்து சிகை அலங்காரம் செய்து கொள்ளச் செய்தார்கள்.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கை நடத்தும் ஒருவர் தனது மனைவிக்கும், பெற்றோர், சகோதர, சகோதரிகள் ஆகியோருக்கு மத்தியில் ஏதேனும் பிணக்கு ஏற்பட்டால் அப்போது பக்கச் சார்பின்றி நீதியான முறையில் நேர்மையாக நிலமையை சமாளிக்க வேண்டும் என்ற கருத்தை இறை வசனம் எடுத்துக் காட்டுகின்றது.

இறை நம்பிக்கையாளர்களில் நிறைவானோர் பற்றிக் குறிப்பிட்ட நபியவர்கள் அழகிய நற்குணமும், அனைவரிடமும் இனிமையாக நடந்து கொள்ளும் ஆண் மகனே நம்பிக்கையாளர்களில் நிறையுடையோன் என குறிப்பிட்டார்கள்.

”அதிக தருமம் கொடுப்பதை விட ஒரு மனிதர் தனது பிள்ளைக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது சிறந்ததாகும்.” நபிமொழி.

தனது பிள்ளைக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பது ஒரு தந்தையின் கடமையாகும், கல்வியைக் கொடுப்பது, சொத்துகளை கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது தந்தைகள் சமுதாயத்திற்குச் செய்யும் அரிய தொண்டாகும்.

சமுதாயக் காவலர்களாக இறைவனின் பிரதி நிதிகளாக படைக்கப்பட்ட ஆண்கள் தமது கடமை பொறுப்புணர்ந்து செயல்பட்டால் தத்தமது குடும்பங்கள் ஒரு மார்க்க பூஞ்சோலையாகும். சமுதாயம் முன்னேறும். இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்!


Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!