மாணவர்களும் சமூக ஊடகங்களும் (Social Media)

Social Media

அறிவியல் வளர்ச்சியும், அதனடியாக தோன்றி வளர்ந்த தொழில்நுட்பமும் நவீன சமூகத்தில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழியமைத்துள்ளது. (Social Media)

தொடர்பு சாதனத் துறையில் இலத்திரனியல் ஊடகமானது ஏற்படுத்தியுள்ள தாக்கமானது மிகக் குறுகிய கணப் பொழுதுகளில் செய்திகள் பரிமாறப்படும் வசதியை ஏற்படுத்தி நாடுகள், தேசங்களின் பூகோள எல்லைகளை ஊடறுத்து முழு உலகையும் ஒரு பூகோள கிராமமாக மாற்றியுள்ளது.

ஊடகத்துறை வளர்ச்சியில் தோன்றிய மிக முக்கியமான ஒரு படிவமாக இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்கள் Social Media உள்ளன. இந்த ஊடகங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதை அரபுலகில் நிகழ்ந்த புரட்சி, ஆட்சி மாற்றம் என்பன தௌிவாக எடுத்துக் காட்டுகின்றன.

இந்த ஊடங்களைப் பொறுத்தளவில் Facebook முகப்புத்தகம் எனும் சமூக ஊடகம் இன்று பரவலாக வளர்ந்து வரும் மாணவ பரம்பரையினரதும், இளைஞர்களினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஊடகத்தில் சாதகமான பயன்பாடுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் Facebook என்னும் இந்த ஊடகம் இளைஞர்களால் குறிப்பாக மாணவர்களால் மிகத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு சமூகத்திலும், நாட்டிலும் மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

பல மணி நேரங்களை Facebook ல் கழிக்கும் இவர்களின் காலம், நேரம், அவதானம் முழுவதும் இந்த ஊடகத்தில் செலுத்தப்பட்டு அவர்களது கல்வி வாழ்வு மட்டுமன்றி, ஒழுக்க வாழ்வும் பாதிக்கப்படுகின்றது. சமூக (Social Media) வலையத்தளங்களுக்கு அடிமையாகுவதன் மூலம் வாழ்கையில் இழப்பவைகள் என்ன?

சமூகத்திலும் நாட்டிலும் இதன் துஷ்பிரயோகம் காரணமாக ஏற்படுகின்ற பயங்கரமான விளைவுகளை அண்மையில் நிகழ்ந்த இரு மாணவிகளின் தற்கொலைச் சம்பவங்கள் மிகத் தௌிவாக எடுத்துக் காட்டுகின்றன. வாழ்வின் மிகப் பெறுமதியான ஒரு கட்டத்தில் இவர்களது வாழ்வு துர்பாக்கியமான ஒரு முடிவை எதிர்கொண்டது.

இந்த ஊடகம் தடை செய்யப்பட வேண்டுமா என்பது இன்று நாடளாவிய ரீதியில் விவாதிக்கப்படுகின்றது. ஆனால் எந்த ஒரு ஊடகமாயினும் சரியே அதன் சாதகபாதகங்கள் குறித்து மக்கள் அறிவுறுத்தப்படும் போது உரிய பயனை வழங்கும் வகையில் அதன் பணிகளை நெறிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

இன்று மாணவ சமூகத்தின் ஒழுக்க வாழ்வு, நடத்தைப் பிறழ்வுகள் தொடர்பான பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காங்கு நடைபெறும் சில நிகழ்வுகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன.

எனவே முஸ்லிம் சமூகம் இது தொடர்பாக மிக விழிப்புடன் செயல்படல் அவசியமாகும்.

கல்வித்துறை சார்ந்தவர்கள், பெற்றோர்கள், சமூக நலனில் கரிசணையுள்ள அனைவரும் இப் பிரச்சினை குறித்து ஆழமாக சிந்தித்து மாணவர்களுக்கு இது தொடர்பாக அறிவூட்டவும் அவர்களை நெறிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவும் வேண்டி ஒரு காலகட்டம் உருவாகியுள்ளது.

எனவே இது தொடர்பாக சிந்தித்து செயல்படல் சமூக நலனில் ஆர்வமும், கரிசனையும் உள்ள அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.

கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி
இஸ்லாமிய சிந்தனை (ஜனவரி – மார்ச் 2014)


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!