கன்னொருவைப் போர் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், போர்த்துகலின் அரியணையைக் கைப்பற்றிய மன்னர் முதலாம் மானுவேல், கிபி 1505 இல் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவை இந்தியாவின் போர்த்துக்கேய இணையரசராக நியமித்து, கிழக்காசியாவில் ஒரு போர்த்துகேய அரசாங்கத்தை அமைத்தார்.
அதே ஆண்டில், கேரளாவின் கண்ணூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள், தங்கள் அதிகாரத்தை பலப்படுத்தியதுடன் செயின்ட் ஏஞ்சலோ கோட்டையைக் கட்டினார்ககள்.
போர்த்துக்கேயர்கள் கிழக்கிற்கு வந்த மூன்று முக்கிய நோக்கங்களில் ஒன்றான வாசனைத் திரவியங்களை தேடுவதில் அவர்களின் கவனம் குவிந்திருந்தது.
மேலும் போர்த்துக்கேயர்கள் இணையரசர் பிரான்சிஸ்கோ டி அல்மெய்தாவின் மகன் லோரென்சோ டி அல்மெதா உட்பட ஒரு கப்பற்படை கி.பி 1505 இல் கருவா வாசனைத் திரவியப் பொருட்களை தேடி வந்ததன் விளைவாக காலி துறைமுகத்தை வந்தடைந்தனர். – போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த விதம்
இவ்வாறு போர்த்துக்கேயர்கள் இலங்கை மண்ணில் தரையிறங்கியபோது, பல இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட இலங்கையை முழுமையாகக் கட்டுப்படுத்த விரும்பினர்.
எனினும் 1619 ஆம் ஆண்டு வரை அவர்களால் கோட்டை, சீதாவக, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இராச்சியங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மூன்று தடவைகள், மலையக இராச்சியத்தைக் கைப்பற்ற போர்த்துக்கேயர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.
இதனால் மலையக செங்கடகல நகரம் தொடரந்தும் இலங்கைக மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. இவ்வாறு இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக்கேயர்களுக்கு கடுகன்னாவ வழியாக மலையகத்திற்கு வர முடியாமற் போனதாலும், செங்கடகல நகரம் மகாவலி ஆற்றால் சூழப்பட்டிருந்ததாலும் மலையக இராச்சியத்தை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்று நம்பப்படுகிறது.
1635 ஆம் ஆண்டில், மன்னர் செனரத் தனது மகன் இளவரசர் மகா அஸ்தானிடம் மலையக இராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு இறந்தார்.
இரண்டாம் இராஜசிங்கனாக முடிசூட்டப்பட்ட இளவரசர் அஸ்தானா, தனது ஆட்சி நிர்வாக வசதிக்காக மாத்தளை மற்றும் ஊவா வெள்ளஸ்ஸ பகுதிகளை தனது உறவினர்களான விஜயபால மற்றும் குமாரசிங்க ஆகியோருக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
இரண்டாம் இராஜசிங்க மன்னர் கி.பி 1630 இல் தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் ரெந்தென்வெல போரில் போர்த்துக்கேயரை தோற்கடித்து இருந்தார்.
போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிய கடற்படை வலிமையுடன் கூடிய ஒரு சக்திவாய்ந்த நாட்டின் உதவியை எதிர்பார்த்திருந்த இரண்டாம் ராஜசிங்க மன்னருக்கு கி.பி 1638 இல் ஒல்லாந்தருடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிந்தது.
இதனை அறிந்த கொழும்பில் இருந்த போர்த்துக்கேய ஜெனரலாக பதவி வகித்த டியாகோ டி மேலோ டி கிராஸ்ட்ரோ மலையக இராச்சியத்தை கைப்பற்றும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று கருதினார்.
கன்னொருவைகன்னொருவைப் போருக்கு களம் அமைத்த போர்த்துக்கேயர்
டச்சுக்காரர்களுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக் கொண்ட இரண்டாம் இராஜசிங்க மன்னர் மீது போர்த்துகீசியர்கள் அதிக ஆர்வம் காட்டாததுடன் ஆரம்பத்திலிருந்தே கேப்டன் ஜெனரல் டியாகோ டி மெலோ டி கிராஸ்ட்ரோ மலையக இராச்சியத்தை நோக்கி ஒரு ஆக்கிரமிப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.
அதன்படி, போர்துக்கேய ஜெனரலின் உத்தரவின் பேரில், 600 உள்நாட்டு வணிகர்கள் கொண்ட ஒரு குழுவை போர்த்துகீசியர்கள் கைப்பற்றியதுடன் அவர் செனரத் மன்னருடன் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினார்.
இந்த நேரத்தில்தான் போர்துக்கேய ஜெனரல் மலைக இராஜ்யத்தைத் தாக்க ஒரு இராணுவத்தை ஏற்பாடு செய்யத் தொடங்கினார். போர்த்துக்கேய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரைக் கொண்ட போர்த்துக்கேய இராணுவம், இலங்கையின் சிங்கள மன்னனுக்கு தமது அதிகாரத்தைக் காட்டும் நோக்கத்துடன் மலையக இராச்சியத்தின் புறநகர்ப் பகுதியான அட்டாபிட்டியவில் முகாமிடத் தொடங்கியது.
இதற்கு முகம் கொடுப்பதற்காக சிங்கள மன்னர் தனது ஒன்றுவிட்ட சகோதரர்களின் உதவியுடன் மாத்தளை மற்றும் ஊவா வெல்லஸ்ஸவில் படைகளைத் திரட்டி போருக்குத் தயாரானார்.
இச் சந்தர்ப்பத்தில், வணிகத்திற்காக மலையகத்திற்கு வந்து மன்னரின் மனதை வென்ற போர்த்துக்கேய வணிகரான அன்டோனியோ மக்காடோவுக்கு இரண்டாம் இராஜசிங்க மன்னர் ஒரு யானையைப் பரிசளித்தார். எனினும் போரை எதிர்பார்துக் கொண்டிருந்த ஜெனரல் டியாகோ டி மெலோ டி கிராஸ்ட்ரோ அந்த வணிகரிடமிருந்த யானையை கைப்பற்றிக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து இரண்டாம் இராஜசிங்க மன்னர் குறித்த போர்த்துக்கேய வணிகருக்கு மற்றுமொரு யானையை அன்பளிப்பாக வழங்கினார், எனினும் அதனையும் போர்துக்கேய ஜெனரல் கைப்பற்றிக் கொண்டதை அறிந்து கொண்ட இரண்டாம் ராஜசிங்க மன்னர் கடும் கோபமடைந்தார்.
உக்கிரமான போருக்கு சிங்கள மன்னனின் ஆயத்தம்
போர்துக்கேய ஜெனரல் மீது கடும் கோபம் கொண்ட இரண்டாம் இராஜசிங்க மன்னன், போர்துக்கேய ஜெனரலை பழிவாங்கும் நோக்கில் மலையகத்திற்கு விற்பனைக்கு அனுப்பியிருந்த இரண்டு குதிரைகளையும் கைப்பற்றிக் கொண்டதுடன் யானைகளை கைமாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்து கப்டன் ஜெனரலுக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியிருந்தனர்.
இருப்பினும், இதைப் பொருட்படுத்தாமல், போர்துக்கேய ஜெனரல் கி.பி 19 மார்ச் 1638 அன்று மணிக்கடவர கிராமத்தில் கூடுமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டதுடன் மலாக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு படையுடன் அவரும் அதே நாளில் மணிக்கடவராவை அடைந்தார்.
நிலைமையை அறிந்து கொண்ட இரண்டாம் இராஜசிங்க மன்னன் போர்த்துக்கேய மதகுரு மூலம் போர்த்துக்கேய ஜெனரலுக்கு சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து செய்தி அனுப்பியிருந்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த, “சிறிய கருப்பு இனத்தவன் இப்போது பயப்படுகிறான். நாம் அவனை காதால் பிடித்து இழுத்து வர வேண்டும்.” என கூறியிருந்தார்.
இதனால் கோபமடைந்த இரண்டாம் இராஜசிங்க மன்னன் தனது படைகள் அனைத்தையும் நகரத்திற்கு வரவழைத்ததுடன் நகரவாசிகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் மற்ற கிராமங்களுக்கு அனுப்பி வைத்து போருக்கு தயாரானார்.
போர்த்துக்கேய படையின் அளவுக்கு மலையக இராணுவம் பலம் வாய்ந்ததாக இருக்கவில்லை, இதனால் நேரடியாக போர்த்துக்கேய படையை எதிர்கொள்ளாமல் செங்கடகல நகரைத் தாக்கி விட்டு வெறுங்கையுடன் திரும்பி வரும் போர்த்துக்கேய படையை தாக்கும் நோக்கத்துடன் கன்னொருவை மலையில் மலையக படை முகாமிட்டு காத்திருந்தனர்.
கன்னொருவைப் போர்
1638 மார்ச் 27 ஆம் திகதி காலையில் அட்டப்பிட்டியவிலிருந்து செங்கடகல நகருக்கு வந்த போர்த்துக்கேயர் வெறிச்சோடிய நகரைக் கண்டனர். மன்னனின் அரண்மனை, கோயில்கள் உட்பட முழு நகரையும் எரித்த போர்த்துக்கேயர்கள் வெறுங்கையுடன் மீண்டும் கொழும்பை நோக்கி புறப்பட்டு இரவில் கன்ணொருவையை வந்தடைந்தனர்.
கன்னொருவையில் சிங்கள இராணுவம் பெரிய மரங்களை வெட்டி, போர்த்துக்கேயர்கள் மகாவலி ஆற்றைக் கடக்க முடியாதபடி அவர்களை வழிமறித்ததுடன் மாத்தளையில் இருந்து வந்த படையினர் போர்த்துக்கேயர் மீண்டும் செங்கடகல செல்ல முடியாதபடி தப்பிச் செல்லும் அனைத்து வழிகளையும் அடைத்துள்ளனர்.
அதன்படி, போர்த்துக்கேய இராணுவத்தில் முன்னணியில் இருந்த வீரர்களை காட்டில் மறைந்திருந்த மலையக போராளிகள் தாக்கினர்.
மேலும் அதிகப்படியான களைப்பு மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக, போர்த்துக்கேய படை மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்க் கொண்டிருந்தனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இரண்டாம் ராஜசிங்க மன்னன் இடைவிடாமல் தாக்கியதில் பிடிபட்ட போர்த்துக்கேயர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 28, 1638 க்குள், பெரும்பாலான போர்த்துகீசியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பல கூலிப்படையினர் போர்த்துகீசிய இராணுவத்தை விட்டு வெளியேறி இரண்டாம் இராஜசிங்க மன்னருடன் இணைந்து கொண்டனர்.
இதன் விளைவாக, போர்த்துக்கேய ஜெனரல் டியாகோ டி மெலோ டி கிராஸ்ட்ரோ போர் நிறுத்தத்திற்கு அனுமதி கோரினார்.
ஆனால் அதற்கு மன்னர் இரண்டாம் இராஜசிங்க பதிலளிக்காததுடன் போர்த்துகேய படையை தொடர்ந்து தாக்கி அவர்களை கன்னொருவை மலை உச்சிக்கு வரை விரட்டித்தனர்.
இதுவரை சுமார் 4,000 போர்த்துக்கேய வீரர்கள் கொல்லப்பட்டு கேப்டன் ஜெனரல் டியாகோ டி மெலோ டி கிராஸ்ட்ரோவும் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்ட போது போர்துக்கேய படையில் ஒரு சில போர்த்துக்கேய துருப்புக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
போர்த்துக்கேய ஜெனரலின் மரணத்துடன் போரை நிறுத்த உத்தரவிட்ட இரண்டாம் இராஜசிங்க மன்னர், எஞ்சியிருந்த போர்த்துக்கேய வீரர்களை கைது செய்ததுடன் ஜெனரலின் உடலைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினார். எனினும் பின்னர் சிங்கள படையினர் ஜெனரலின் வாளை கண்டுபிடித்து இரண்டாம் ராஜசிங்க மன்னனிடம் ஒப்படைத்தனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கன்னொருவை யுத்தத்திற்கு பின்னர்
கன்னொருவை போரில் வெற்றி பெற்ற இரண்டாம் இராஜசிங்க மன்னன் தனது தங்க கிரீடத்தையும் உலோகத்தால் செய்யப்பட்ட வாளையும் தொடன்வல விகாரைக்கு வழங்கினார்.
அத்துடன் சிங்கள இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்ட படையினருக்கு கிராமிய காணிகளை அன்பளிப்பாக வழங்கியதுடன், போரை வழிநடாத்திய தளபதிகளை உயர் பதவிகளுக்கு நியமித்தார்.
கன்னொருவை போரில் தோற்கடிக்கப்பட்ட போர்த்துக்கேயர்கள் மீண்டும் மலையக இராஜ்சியத்தைக் கைப்பற்ற முயற்சிக்கவில்லை, மேலும் இது செங்கடகல இராச்சியத்தால் வழிநடத்தப்பட்ட கடைசி போராகவும் கருதப்படுகிறது.
இது போர்த்துக்கேயருக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடந்த கடைசிப் போராகவும் இருந்தது.
பின்னர், 1658 ஆம் ஆண்டில் இரண்டாம் இராஜசிங்க மன்னர் ஒல்லாந்தருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவாக போர்த்துக்கேயர் இலங்கையை முழுமையாக விட்டு வெளியேறினர், மேலும் சிங்கள மன்னரால் கப்டன் ஜெனரல் டியாகோ டி மெலோ டி கிராஸ்ட்ராட்ரோவின் வாளை டச்சுக்காரர்களின் அட்மிரல் ஆடம் வெஸ்ட்வால்ட்டுக்கு வழங்கப்பட்டது.
தகவல் – SARINIGAR.com