என் அன்பான மருமகனுக்கு உங்களது மரியாதைக்குரிய மாமனார் எழுதிக்கொள்வது.
நீங்கள் எனது மகளை மனைவியாக பொருப்பேற்று பத்து மணி நேரங்கள் கடந்துவிட்டன. இத்தனை வருடங்கள் எனது மனதிலும் தோளிலும் சுமந்த எனது பாசமிகு மகளை உங்களின் பொறுப்பில் இனி ஒப்படைத்து விட்டேன்.
ஒரு தந்தை என்ற வகையில் எனது கடமையை நான் சரியாக நிறைவேற்றியுள்ளேன் என நான் நம்புகிறேன். இனி ஒரு கணவன் என்ற முறையில் உங்கள் கடமையைச் சரியாக செய்வீர்கள் என மனமாற எதிர்பார்க்கிறேன்.
இப்பொழுது நேரம் இரவு பதினொரு மணி. நாளை விடியற் காலையிலேயே நானும் உங்கள் மாமியாரும் எனது இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவோம். ஏனென்றால் இனிமேல் இது உங்களின் வீடு, எங்கள் வீடல்ல. பல்லான்டு காலம் பரம்பரையாக வாழ்ந்த வீட்டை விட்டு இடைநடுவே போக நேர்ந்ததை நினைத்து பெட்டி படுக்கைகளைக் கட்டிய கயிறெல்லாம் உங்கள் மாமியாரின் கண்ணீராலேயே கழுவப்படுகின்றது.
நானும் உங்கள் மாமியாரும் இன்னும் சில மணி நேரங்கள்தான் இந்த வீட்டில் இருப்போம். மனது நிம்மதியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது. இனம் புரியாத ஏதோ ஒன்று மனதைப் பிசைந்து எடுக்கிறது. என்ன செய்வது, சொல்வதென்று புரியாமல் நான் எழுத ஆரம்பிக்கின்றேன்.
சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வை சிந்த மிகவும் கஷ்டத்துடன் நான் கட்டிய இந்த இரண்டு அடுக்கு மாடி வீட்டின் பிரமாண்டமான படுக்கையறையில் பஞ்சு மெத்தையில் நீங்கள் சொகுசாக தூங்கிக் கொண்டிருக்க அதே வீட்டில் யாருமற்ற ஒரு மூலையில் பழைய பாயில் கிழிந்து விட்ட தலையணையில் என்னைத் தூங்க வைத்துள்ள இந்த சமூகத்தின் நீதியை நினைத்து நான் சிரித்துக் கொள்கிறேன்.
தன் உழைப்பால் கட்டிய வீட்டிற்கே விருந்தாளியாகப் போன நிலைமையை எண்ணி வெட்கப்படுகிறேன். தான் பல கனவுகளுடன் கட்டிய சொர்க்கத்தில் தனக்கே வாழமுடியாத நிலமையை உருவாக்கித் தந்த இந்த சமூகத்தை எண்ணி நான் சிரித்துக் கொள்கிறேன்.
அன்பிற்குரிய மருமகனுக்கு!
இந்த இல்லத்தின் ஒவ்வொரு கல்லுக்குப் பின்னாலும் ஒரு கனவு, கதை, வேதனையும், கலந்துள்ளதை உங்களுக்கு புரியாது. புரிந்து கொள்வதற்கான அவசியமும் தேவையையும் கூட உங்களுக்கு இருக்காது. உங்களுக்கு வெயில் படாமல் இருப்பதற்கு கட்டப்பட்டுள்ள இந்த கூரைக்குப் பின்னால் நான் வெயிலில் நின்று வியர்கை சிந்தி வெட்டிய வேளாண்மை இருக்கிறது.
நீங்கள் கெத்தாக நடக்கும் இந்த “டைல்ஸ்” தரைக்குப் பின்னால் எனது மனைவிக்கு நான் ஆசை ஆசையாய் செய்து கொடுத்த நகைகள் இருக்கிறது. நீங்கள் படுத்துக் கிடக்கும் அந்தத் தேக்க மரக்கட்டிலுக்குப் பின்னால் நான் எனது மகனுக்கென்று வாங்கிய காணியை விற்ற கதையுள்ளது. நீங்கள் சௌகரியமாக செல்லும் கழிப்பறைக்குப் பின்னால் என் கையில் மிச்சம் மீதியிருந்த சேமிப்பெல்லாம் கரைந்து கிடக்கிறது.
உங்களுக்கு சாப்பிட, குடிக்க புதிய குளிர் சாதனப் பெட்டி, பார்துக் கிடக்க கலர் டீவி, துணிமனிகளை கழுவ வோஷின் மெஷின். போண்ற வீட்டின் அடிப்படை பொருட்கள் அனைத்திற்குப் பின்னால் இந்த ஏழையின் கடன் இருக்கிறது. மனிதாபிமானம் என்பது கொஞ்சம் கூட இந்த சமூக்தில் கிடையாத?
முதுமையின் காரணமாக பலவீனமும், தனிமையின் காரணமாக மறதியும் என்னை இயலாதவனாய் ஆக்குகின்றன. ஒரு மூலையில் முழங்கால் வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் மாமியாரோடும், உட்கார்ந்தால் எழும்பி நிற்கக முடியாத இடுப்பு வலியோடும் எமது காலங்கள் மெதுவாக கடக்கின்றன.
எனக்கு இன்னும் அதிக நாட்கள் கிடையாது என்பதை எனது உடம்பு எனக்கு அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாளை ஒரு நோய் நொடி வந்தாலும் கடன் பட்டுக் காலத்தை ஓட்டும் நிலைக்கு விழுந்து விட்டேன்.
என்னால் நடந்த தவறு என்ன என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒரு பெண்ணைப் பெற்றெடுத்ததா? எனது பாசமிகு மகள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கனவு கண்டதா? படித்தவர் ஒருவருக்கு மகளைப் பாதுகாப்பாகக் கொடுக்க வேண்டும் என எண்ணியதா? மகிழ்சியாக வாழ்வதற்கு அடுக்கு மாடிகளும் சுகபோகங்களும் எதற்கு மருமகனே? ஒரு ஓலைக் குடிசை போதாதா?
நாளை மாமா உங்களுக்கு ஏதாவது கடன்கிடன் இருக்கிறதா என்று அன்புடன் கேட்பீர்கள்? எனது கணவர் எவ்வளவு கருணையுள்ளவர் என்று எனது மகளும் உங்கள் மீது மயங்கி விடுவாள். கண்ணத்தில் அறைந்து விட்டு வலிக்கிறதா? தடவிவிடவா? என விசாரிப்பது போல் தான் இது உள்ளது.
இதற்கு நீங்கள் அறையாமலே இருந்திருக்கலாமே. இந்த துயரத்தில் நான் விழுவேன் என்று அறிந்த பின்னும் நீங்கள் என்னைத் அதில தள்ளி விட்டு, பின்னர் உதவிக் கரம் நீட்டி காப்பாற்ற நினைப்பது எந்த வகையிலான தந்திரம்.
இவ்வளவு அதிருப்திகள் இருந்தும் உங்களைத் ஏன் தேர்ந்தெடுத்தேன் தெரியுமா? மாப்பிள்ளை ஏலத்தில் மலிவாக கிடைத்தது நீங்கள் மாட்டும்தான்.
அப்துல் காதரின் மகன் நான்கு மாடி வீடும் ஐந்து கோடிப்பணமும் கேட்டார். சத்தாரின் மகன் கூரைக்கும் டைல்ஸ் போடச் சொன்னார் . எங்களது குடும்பம் கௌரவமான குடும்பமாம் புது மொடல் கார் ஒன்றும் வேண்டும் என்றார் கபூர் நானாவின் பேரன். வெளிநாட்டு படிப்பாம் சொகுசு வாகனமும் இருந்தால் நல்லம் என்றார் நஜீமின் தம்பி.
சவூதியில் பெரிய கம்பனியில் வேலையாம் கை நிறைய சம்பளமாம் காணி பத்து ஏக்கராவது வேண்டும் என்றார் ஜப்பாரின் கடைசி மகன்.
கணனி இன்ஜினியராம், பெரிய சம்பளமாம், நகரத்திற்கு நடுவில் ஒரு வீடு வேண்டும் என்றார் ஸரூக் ஹாஜியாரின் மூத்த மகன். மார்க்கமுள்ள பைனாம் வீடும் தளபாடப் பொருட்கள் மட்டும் போதுமாம் என்று நீங்கள் வந்தீர்கள். பார்த வகையில் லாபமாக வருகிறது உடனடியாக வாங்கி விடுங்கள் என்றார் உங்கள் மாமியார். உங்கள் வீட்டாரிடமும் விலை பேசி உங்களை வாங்கிவிட்டேன்.
ஆனாலும் மருமகனே, இது போன்ற வியாபாரத்தில் எனக்கு விருப்பமே இல்லை. வந்த இடத்தில் வாழ்ந்தவற்களை விரட்டியடித்து ஓரத்தில் வைத்து விட்டு சொகுசாக தூங்கும் உங்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வேறுபாடு காணவில்லை.
அடிமை உள்வீட்டுக்குள், எஜமான் அரச மரத்தடியில். இந்த வார்தை எனக்குச் சரிவராது. உங்களை யார் விரட்டினார்கள்? நீங்களாகப் போவதற்கு தீர்மானித்து விட்டு என்னை ஏன் குறை கூறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள். எனது நியாயம் என்னோடு இருக்கட்டும்.
நான் வெளியே சென்று விட்டு வியர்வையோடு வீட்டுக்கு வருவேன். எனது சாய்மணைக் கதிரையில் நீங்கள் சாய்ந்து அமர்ந்து கொண்டிருப்பீர்கள். என்னைக் கண்டவுடன் எழுந்தும் எழும்பாமலும் “இருக்கப் போகிறீர்களா?” என்று கேட்பீர்கள். நானும் “இல்லை இல்லை நீங்கள் இருங்கள்” என்று சொல்லப் போவது உங்களுக்கும் தெரியும். அந்த நிலைமை எனக்கு வேண்டாம்.
உங்களைத் தேடி யாராவது வந்தவுடன் உள்ளே என்னைத் பார்க வந்தவர்களை எழுப்பிக்கொண்டு மருமகனுக்கு நான் வாங்கிய ‘குஷன் செடியை’ உங்கள் நண்பருக்குக் கொடுத்துவிட்டு வெளியில் பிளாஸ்டிக் கதிரை போட்டு பேசிக்கொள்ளும் கேவலமான நிலமை எனக்கு வேண்டாம்.
சொந்த வீட்டிலேயே சற்று உரத்து பேசினாலும் மருமகன் இருக்கிறார். மருமகனுக்கு தொல்லையாக இருக்கும், மெதுவாகச் பேசுங்கள் என்ற உங்கள் மாமியாரின் அதட்டலின் அசிங்கம் எனக்கு வேண்டாம்.
நான் வாங்கிய டீவியில் செய்தி பார்த்துக் கொண்டிக்கும் போது ”அவருக்கு கிரிக்கெட் மச் பார்க்க வேண்டுமாம்” என்று எனது மகளை தூது அனுப்புவீர்கள். மருமகனுக்கு டீவியின் உரிமையையும் கொடுக்க உடனே எழுந்து செல்ல வேண்டிய ஏமாற்றம் எனக்கு வேண்டாம்.
60 வயதான என்னால் 30 வயதான உங்களிடம் தோற்றுப் போவதற்கு எனது சுய கௌரவம் இடம் தரவில்லை. ஒரு மகளைப் பெற்றெடுத்த பாவத்திற்காக எனது வீட்டில் நான் அடிமையாய் வாழ்வதை விட ஒரு வாடகை குடிசையில் தலை நிமிர்ந்து வாழ்ந்து விட்டுப் போகிறேன்.
வாழ்க்கையில் தன் சொந்தக் காலில், சொந்த உழைப்பில் வாழப் பழகிக் கொள்ளுங்கள். அடுத்தவர்களிடம் சுரண்டி, மிரட்டி வாழ வேண்டாம். ஒற்றைப் பெண்ணைப் பெற்று ஓரளவு வசதியுள்ள நானே இன்று ஓட்டாண்டியாகிவிட்டேன் என்றால் நாலைந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற ஏழைக் குடும்பங்களின் நிலையை என்னவென்று சொல்வது.
ஒரு தந்தை-மகள் பாசத்தை கருவியாகப் பயன்படுத்தி எங்களைத் துடைத்து எடுக்கிறீர்கள். பெண் பெற்றெடுப்பது பரகத் என்பதைப் பொய்யாக்கிய பாவம் உங்களோடு போகட்டும்.
கடையில் இருந்த அனைத்தையும் மருமகனுக்கு தானமாக்கி விட்டு கடன்காரனாக கைவிரித்தபடி நிற்கின்றேன். இது ஆயுள் கடனல்ல, பரம்பரைக் கடன். எப்போது இந்தக் கடனை அடைக்கப் போகிறேனோ தெரியாது.
ஆனால் மருமகனே நீங்கள் ஒன்றுக்கும் பயப்படாதீர்கள் , இதை எவரிடமும் சொல்ல மாட்டேன். எனது மனதில் ஊசலாடும் எதையும் உங்கள் மீது வெளிக் காட்ட மாட்டேன். உங்களைக் கண்டதும் சந்தோஷத்துடன் பல்லிழித்துக் கொள்வேன்.
சொந்தக் காலில் வாழத் தெரியாத சோம்பேறி என்று மனதுக்குள் கூறிக் கொள்வேன். உங்கள் குடும்ப உறவினர்கள் வந்தால் ஓடி ஓடி கவனித்துக் கொள்வேன். என்னை கடனாளியாக்கி கூட்டம் கொஞ்சம் கூட வெட்கமும், சொரனையுமில்லாமல் வந்துட்டாரகள் என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொள்வேன்.
எனது மருமகன் ரொம்ப நல்லவர், மருமகனுக்கு எல்லாரிடமும் கொள்ளை பாசம், அவரைப் போல் உலகில் எவருமில்லை என்று எல்லோரிடமும் கூறிக் கொள்வேன். அழகிய முறையில் உழைத்து ஒரு பெண்ணை வைத்து வாழ வக்கில்லாதவன் என்று மனதிற்குள் சொல்லிக் கொள்வேன்.
வெள்ளாமை அறுவடை நெல் அனுப்பி வைத்தால் மருமகனின் கவனிப்பை வண்டிக்காரனிடம் பராட்டி மருமகனுக்கு நன்றியை சொன்னதாக சொல்லி விடுவேன். எனது நிலத்தின் விளைச்சலை எனக்கே அனுப்புகிறான் என்று எனக்குள் நானே நகைத்துக் கொள்வேன்.
எனது மருமகனுக்கு என் மகள் மீது எவ்வளவு இரக்கம் என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறுவேன். மருமகனுக்கு வீடு சொத்து கொடுக்காவிட்டால் மகளை திருமணம் முடித்திருப்பானா? பிச்சைக்காரன் என்று எனக்குள் நானே கூறிக் கொள்வேன்.
நான் உங்க கூடவே இருப்பேன். உங்களுடன் சேர்ந்து சிரிப்பேன். உங்களுடன் சேர்ந்து வாழ்வேன். இறுதி மூச்சு வரைக்கும் எனது வெறுப்பையும், கவலையையும் நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். இப்படித் தானே உலகத்தில் வாழும் ஒவ்வொரு மாமனாரும் வாழ்கிறார்கள்.
இக் கடிதத்தை உங்களிடம் நான் காண்பிக்கவும் மாட்டேன். சிறு சிறு துண்டுகளாக கிழித்தெறிந்து விடுவேன். இதனை நீங்கள் வாசித்தால் அடுத்த கணம் எனது மகளை விட்டு விட்டு ஓடி விடுவீர்களே. எனது பலவீன்மும் உங்கள் பலமும் எனது மகள்தானே.
எல்லாம் முடிந்து விட்டது மருமகனே நேரமாகிவிட்டது. வௌியேற வேண்டும். நான் கட்டிய வீட்டையும், மகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நாளை முதல் அழுது கொண்டிருக்கும் உள்ளத்தோடும் புன்முறுவல் பூத்த முகத்தோடும் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். ஒரு தற்காலிக நாடகம் தானே இந்த வாழ்கை.
இப்படிக்கு,
மதிப்புக்குரிய மாமனார் மருமகனுக்கு!
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!