வலீமா என்றால் என்ன? எதற்கான அதை நிறைவேற்ற வேண்டும்? யாரால் எப்போது, நிறைவேற்றப்பட வேண்டும்?
வலீமாவின் தத்துவம் என்னவென்றால் இருவருக்கிடையே திருமணம் நிகழ்ந்து விட்டதை பிரபலப்படுத்துவதாகும். திருமணம் நடைபெற்ற வீட்டாரிடையே அமைந்த புதிய உறவை கொண்டாடுவதாகும்.
மேலும் திருமணம் என்பது ஓர் இறையருட் கொடை. அதற்கு நன்றி செலுத்தும் அடையாளமும் ஆகும். மேலும் மக்களிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.
வலீமா கொடுப்பது என்பது புனிதமான சுன்னத்து ஆகும். வலீமா கொடுப்பது கணவனின் பொறுப்பாகும். அது திருமணத்துக்குப் பின் நிகழக்கூடியதாகும். இதற்கு தாம்பத்ய உறவு நிபந்தனையில்லை.
திருமணம் நடைபெற்ற மறுநாளே கொடுக்க வேண்டும் என்பதில்லை. இரண்டாம், மூன்றாம் நாட்களிலும் கொடுக்கலாம். அதற்கு பின் கொடுக்கப்படும் விருந்து வலீமா கிடையாது.
எவ்வாறாயினும் திருமணத்திற்குப் பின்பு வலீமா கொடுப்பது தான் விரும்பத்தக்கதாகும். (ஆதாரம்:பத்வா ரஹீமிய்யா பாகம்: 3)
நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற்று மறுநாளில் வலீமா விருந்து கொடுத்தார்கள்.
அப்துர் ரஹ்மானிப்னு அவ்ப் (ரழி) அவர்களின் உடையில் ஒருநாள் மஞ்சள் கறையைக் கண்ட நபி (ﷺ) அவர்கள் அது பற்றி வினவிய போது தான் ஒரு பேரித்தம் கொட்டையளவு தங்கத்தை மஹர் கொடுத்து திருமணம் செய்துள்ளதாக அப்துர் ரஹ்மானிப்னு அவ்ப் (ரழி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபி (ﷺ) அவர்கள் பாரகல்லாஹ் லக என்று வாழ்த்தியதுடன், ஓர் ஆட்டை அறுத்தாயினும் வலீமா கொடுப்பீராக என்று ரசூலு (ﷺ) அவர்கள் கூறினார்கள். – ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
வலீமா தத்தமது சக்திக்கும் வசதிக்கும் ஏற்ப கொடுக்க வேண்டும். சிரமப்பட்டு கடன் வாங்கி செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்துடன் வீண் விரயமும் கூடாது. ஹஜ்ரத் அலீ (ரழி) அவர்கள் வலீமா கொடுத்த போது பேரித்தம்பழம், சுத்தமான தண்ணீரை வழங்கினார்கள்.
உங்களை வலீமாவுக்கு அழைத்தால் செவி சாயுங்கள் என்று நபி (ﷺ) அவர்கள் நவின்றார்கள். (புகாரி, முஸ்லிம்) நியாயமான காரணமின்றி வலீமாவை நிராகரித்தால் அவர் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் மாறு செய்தவராவார் என்றும் கூறினார்கள்.
மோசமான வலீமா எதுவென்றால் பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகளை அழைக்காமல் விடப்படும் வலீமாவாகும் என்றும் நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
குறிப்பு: வலீமா விடயத்தில் சட்டம் விசாலமானதாகும். திருமணத்தின் போது, திருமணத்துக்குப் பின், தாம்பத்யம் நிகழ்ந்த பின் அல்லது நிகழும் முன் எந்நேரத்தில் வலீமா கொடுத்தாலும் ஏற்கப்பட்டதாகும். விரும்பத்தக்க நேரம் திருமணத்துக்குப் பின் கொடுப்பதாகும். (ஆதாரம்: ஃபிக்ஹ் சுன்னா)
மௌலானா மௌலவி, ஏ. முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில் பாகவி