ரமழானில் ஷைத்தானுக்கு விலங்கிட்டாலும் தீமைகள் செய்து விடுகிறோமே! ஏன்?

தீமைரமழான் காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகின்றது. எனினும் சில தவறுகள் தீமைகள் அறிந்தோ அறியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார்.

நோன்பு காலங்களில் ரமழானில் இறைவன் ஷைத்தான்ளுக்கு விலங்கிடுவது உண்மைதான் இருப்பினும் எம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல எமது நப்ஸ் எனும் மனோ இச்சைகளின் மூலமாகவும் தவறுகள் நடைபெறும்.

உலகில் மனிதனுக்கு பெரும் எதிரி யாரெனில் நப்ஸ் என சொல்லப்படும் மனோ இச்சைதான். அது ஷைத்தானை விட பெரும் எதிரி.

எனவே தான் முஹம்மத் நபி (ﷺ) அவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து வந்தவுடன் சிறிய யுத்தத்திலிருந்து விடுதலையாகி பெரிய யுத்தத்திற்கு தயாராகிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் யாரசூலுல்லாஹ் தபூக் யுத்தமே பெரும் யுத்தம் தானே அதைவிட பெரிய யுத்தமா? என கேட்டபோது ஆம் உங்கள் நப்ஸோடு (மனதோடு) யுத்தம் செய்ய வேண்டும் அதுவே ஜிஹாதுல் அக்பர் பெரிய போர் எனக் கூறினார்கள்.

கண்ணுக்கு தெரிந்த எதிரியுடன் யுத்தம் செய்யலாம். கண்ணுக்கு தெரியாத நமது உள்ளத்திலே குடிகொண்டிருக்கும் நப்ஸை எதிர்த்து யுத்தம் செய்வதே சிரமமான விடயம்.

நாம் நம்மிடமிருந்து என்ன தவறுகள் தீமைகள் வெளியானாலும் அதை ஷைத்தானின் மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்கின்றோம்.

நாம் நடந்து செல்லும் பாதையை கவனிக்காமல் சென்று, கல் தடுக்கி நாம் விழுந்தால் கூட கல் தான் நம்மை இடறிவிட்டது என கல்லின் மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்பவர்கள்தானே நாம்.

அதைப் போலவே ஷைத்தான் என்ற ஒருவன் இருப்பதால் எம்மிடமிருந்து என்ன தவறுகள் தீமைகள் வெளியானாலும் உடனே ஷைத்தான் வழி கெடுத்து விட்டான் என ஷைத்தானின் மீது பழியைப் போடுகின்றோம்.

நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களை குறிப்பிட்ட மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள் என இறைவன் கூறினான். ஆனால் ஷைத்தானின் பேச்சைக் கேட்டு நெருங்கினார்கள்.

நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் நினைத்திருந்தால் “இறைவா ஷைத்தான் எங்களை வழிகெடுத்து விட்டான்”என கூறியிருக்கலாம்.

ஆனால் ”ரப்பனா லலம்னா அன்புஸனா” இறைவா எங்கள் நப்ஸிற்க்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் என கூறி நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தவறை ஒப்புக்கொண்டார்கள்.

பெரும் நபிமார்களும் “வமா உபர்ரிஉ நப்ஸி” எங்களது மனோ இச்சைகளிலிருந்து நாங்கள் விடுதலையாகவில்லையே எனக் கவலைப்பட்டார்கள். ஆனால் எமக்கு இந்த நப்ஸை பற்றிய கவலையே கிடையாது.

நமது நப்ஸுக்கு நாம் எதை பழக்குகின்றோமோ அது மீண்டும் மீண்டும் வெளியாகும். பதினோரு மாதங்களில் நாம் எமது நம் நப்ஸை எவ்வாறு பழக்கி வைத்திருக்கின்றோமோ அதுவே ரமழான் மாதத்திலும் வெளியாகும்.

எனவே தவறுகள், தீமைகள் ஷைத்தானைக் கொண்டு மட்டுமல்லாமல் நப்ஸைக் கொண்டும் வெளியாகும். ரமழானில் ஷைத்தானுக்குத்தான் விலங்கிடப்பட்டிருக்கிறது நப்ஸுக்கல்ல..

அல்லாஹ் அஹ்லம்.
– உலமா ஊடகம் –


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy PolicyX

Leave a Reply

error: Content is protected !!