அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் எப்போது? – லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் | Ask Permission to TN Govt for Case Registered Against AIADMK Former MLA: Anti Corruption Department Explain to HC

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்திய நாராயணன் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்துள்ளதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகவும், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இரு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த இரு வழக்குகளின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், வழக்குகளை விரைந்து விசாரித்து முடித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பால சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 4 மாதங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று வழக்கை முடித்து வைத்து 2024 செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “இந்த இரு வழக்குகளிலும் புலன் விசாரணை முடிந்து விட்டது. வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்ததும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு தொடர விரைந்து அனுமதி பெற்று, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply