அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது உட்பட 15 அம்ச திட்டங்களை கடந்த மார்ச் 26-ம் திகதி ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்தார். இந்த 15 அம்ச திட்டங்களை ஏற்று ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரானுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஈரான் நிராகரித்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஈரானுக்கான காலக்கெடு அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணிக்குள் முடிவடைகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதற்குப் பிறகு, அவர்களுக்குப் பாலங்கள் ஏதும் இருக்காது. மின் நிலையங்கள் ஏதும் இருக்காது. கற்காலம் போன்ற நிலைதான் இருக்கும். முழு நாடும் ஒரு இரவில் அழிக்கப்படக்கூடும். அந்த இரவு நாளைய இரவாகவும் இருக்கக்கூடும்” என்று எச்சரித்திருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை அடுத்து, அமெரிக்காவின் தாக்குதல் முயற்சிகளை தடுக்கும் ஒரு குறியீட்டு நிகழ்வாக மின் நிலையங்களைச் சுற்றி மனித சங்கிலி அமைக்குமாறு அந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்களுக்கு ஈரானின் துணை விளையாட்டுத் துறை அமைச்சர் அலிரேசா ரஹிமி கோரிக்கை விடுத்திருந்தார்.

“ஈரான் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு அனைத்து இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் மின் நிலையங்களுக்கு அருகில் கூடுமாறு கோருகிறேன். அவை நமது செல்வங்கள்; நமது உடமைகள்” என அலிரேசா ரஹிமி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக இந்த கணம் வரை 1.4 கோடிக்கும் அதிகமான பெருமைமிக்க ஈரானியர்கள் பதிவு செய்துள்ளனர். நானும் ஈரானுக்காக உயிர்த் தியாகம் செய்ய எந்தக் காலத்திலும் தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்ரேல் ராணுவம் இன்று தனது எக்ஸ் தளத்தில் பாரசீக மொழியில் வெளியிட்ட அறிவிப்பில், “உங்கள் பாதுகாப்பிற்காக, இப்போதிலிருந்து ஈரான் நேரப்படி இரவு 9 மணி அதாவது இலங்கை நேரப்படி இரவு 11 மணி வரை, ஈரான் முழுவதும் ரயில்களைப் பயன்படுத்துவதையும் பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ரயில்களிலும், ரயில் பாதைகளுக்கு அருகிலும் நீங்கள் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பில் குறிப்பிட்ட பிராந்தியங்களோ அல்லது ரயில் பாதைகளோ குறிப்பிடப்படவில்லை. எனவே, ஈரான் முழுவதும் மக்களிடம் அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த எச்சரிக்கை குறித்து ஈரான் அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில் மத்திய ஈரானின் காஷான் நகரிலுள்ள யஹ்யா அபாத் ரயில்வே பாலத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறித்த தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் செய்தி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஈரானிய மக்களின் பாதுகாப்பிற்காக இரவு 9 மணி வரை ரயில்களைப் பயன்படுத்த வேண்டாம் என இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply