இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனால், இந்திய தொழில் துறையில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு என்பதைப் பார்ப்போம். குறிப்பாக, தமிழகத் தொழில் துறையில் ஏற்படக்கூடிய பின்னடைவு பற்றியும் பார்ப்போம்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீத அடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார். இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின்போதே ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும்’ என்று எச்சரித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் இப்போது கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
‘அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம்’ என்று மத்திய அரசு எதிர்வினையாற்றியுள்ளது.
பிரதமர் மோடியும் அமெரிக்காவுக்கு பதில் தரும் வகையில் பேசியுள்ளார். “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தி விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது” என்றார்.
இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களை இறக்குமதி செய்ய மறுத்துவிட்ட இந்திய அரசு, விவசாயம், பால் பொருள் சந்தைகளைத் திறக்கவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய 50% வரி என்பது வரும் 27-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் காலக்கெடுவுக்குள் இந்தியா தன் சொல் பேச்சை கேட்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைத்திருந்தார். ஆனால், அதுபோல் அடிபணியப் போவதில்லை என்பதையே இந்தியாவின் எதிர்வினையும், பிரதமர் மோடியின் பேச்சும் அமைந்துள்ளது. தற்போதைய நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் 20 சதவீத அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் ஆகும். அமெரிக்காவுக்கு ஓராண்டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. “ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் ரத்தினக் கற்கள், நகைகள், ஆடைகள், ஜவுளி மற்றும் ரசாயனங்கள் முதலான தொழில் பிரிவுகளில் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது” என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்தியப் பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில், பெரிய அளவில் பாதிப்பு இருக்காவிட்டாலும், ஓரளவு பின்னடைவு ஏற்படலாம் என வர்த்தகர்கள் கருதுகின்றனர். அதேவேளையில், இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் தாக்கம் என்பது பங்குச்சந்தையில் எதிரொலிக்க வாய்ப்பு அதிகம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கான அறிகுறிகள் இப்போதே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் தெரிய ஆரம்பித்துவிட்டது.
தற்போது இந்திய பொருட்கள் மீதுதான் அமெரிக்கா வரி விதித்துள்ளது என்பதால், ஐடி சேவை சார்ந்த முதலீடுகளில் பாதிப்பு ஏதும் இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்பப்படுகிறது. ஸ்டீல் மற்றும் அலுமினியம் உள்ளிட்ட உலோகப் பொருட்களின் ஏற்றுமதிக்கு பிரத்யேக உத்தரவின் மூலம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்தத் துறை சார்ந்த வணிக ஏற்றுமதியில் பாதிப்பு இருக்காது.
இதேபோல பரஸ்பர வரி விதிப்பில் இருந்து செமிகண்டக்டர் மற்றும் மின்னணு பொருட்களுக்கு விலக்கு உள்ளது. இதனால் இந்தியாவில் பெரிய அளவில் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ள ஆப்பிள் நிறுவன ஏற்றுமதியில் இந்த வரி விதிப்பு காரணமாக பெரிய பாதிப்பு இருக்காது எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டின் தொழில் நகரமான திருப்பூர் ‘டாலர் சிட்டி’ என்றழைக்கப்படுகிறது. திருப்பூரில் பின்னலாடைத் தொழில் கடந்த பல ஆண்டு காலமாக கோலோச்சி வரும் நிலையில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பின்னலாடைத் துறை உட்பட இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் பாதிக்கப்படும் என தொழில் துறையினர் கருதுகின்றனர்.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் 30 சதவீத ஏற்றுமதி அமெரிக்க சந்தையை நம்பி இருப்பதால், இந்த வரி விதிப்பு அவர்களது தொழிலை வெகுவாக குறைக்கும். குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்காவுக்கு 11 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜவுளி மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இது நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். இனி, அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும் வெகுவாக பாதிக்கும் அபாயம் உண்டு என்கின்றனர் தொழில் துறையினர். நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவும் தமிழகத்துக்கு மிக முக்கியப் பின்னடைவாக கருதப்படுகிறது.
எனினும், அமெரிக்க வரி விதிப்புகளில் இருந்து ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க, இந்தியா சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறது. புதிய விரிவான உத்திகளுடன் கூடிய இந்த ஏற்றுமதி திட்டங்கள் இன்னும் சில வாரங்களில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், கடன் அணுகலை எளிதாக்குவதையும், சர்வதேச சந்தைகளில் வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்வதையும் மையமாகக் கொண்டிருக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சியில் ‘பிராண்ட் இந்தியா’ என்ற பெயரில், ரூ.20,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது, இந்திய தொழில் துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.