அரசாங்கத்தின் மௌனமான செயலற்ற தன்மையால் நாட்டுக்கு ஆண்டுக்கு சுமார் 17.3 பில்லியன் ரூபாய் (1,730 கோடி ரூபாய்) வருமான இழப்பு ஏற்படுவதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு எச்சரித்துள்ளது.
வெரிட்டே ரிசர்ச் அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2021 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இலங்கையர்களின் தனிநபர் மற்றும் நிறுவன வருமான வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டன. அத்துடன், வற் (VAT) வரி 18% ஆக உயர்த்தப்பட்டு, மேலும் 97 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளும் வரி வலைக்குள் கொண்டு வரப்பட்டன.
ஆனால், ஏனைய அனைத்துத் துறைகளிலும் வரிகள் அதிகரித்த போதிலும், சிகரெட்டின் சில்லறை விலையில் காணப்பட்ட வரிப் பங்கு சராசரியாக 7.2 சதவீத புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது.
சிகரெட் மீதான வரியின் பெரும்பகுதி ‘கலால் வரியிலிருந்தே’ பெறப்படுகிறது. இது ஒரு சிகரெட் குச்சிக்கு நிலையான ரூபாய் தொகையாக வசூலிக்கப்படுவதால், வற் வரியைப் போல சிகரெட்டின் விலை உயரும் போது இந்த வரி தானாக அதிகரிப்பதில்லை.
இதன் விளைவாக, சிகரெட் நிறுவனங்கள் தங்களின் விலையை உயர்த்திய போதும், அரசாங்கம் கலால் வரியை அதற்கேற்ப மாற்றியமைக்காமல் மௌனம் காத்ததால், சில்லறை விலையில் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரியின் பங்கு குறைவடைந்துள்ளது என வெரிட்டே ரிசர்ச் விளக்கியுள்ளது.
உலக சுகாதார அமைப்பு பரிந்துரையின்படி, சிகரெட் வரிகள் அதன் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75% ஆக இருக்க வேண்டும்.
2018 இல் இலங்கை இந்த சர்வதேச அளவுகோலுக்கு மிக நெருக்கமாக (74% வரிப் பங்கு) இருந்தது.
2026 இல் இலங்கை தற்போது இந்த வரிப் பங்கு 66.8% ஆகக் குறைந்துள்ளது.
எளிமையாகச் சொன்னால், சிகரெட்டுக்காக மக்கள் செலவிடும் ஒவ்வொரு 12 ரூபாயிலும் கிட்டத்தட்ட 9 ரூபாய் வரியாக அரசாங்கத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், தற்போது அரசாங்கம் சுமார் 8 ரூபாயை மட்டுமே வசூலித்து, ஒவ்வொரு 12 ரூபாயிலும் 1 ரூபாயை இழந்து வருகிறது.
இந்த 17.3 பில்லியன் ரூபாய் இழப்பு ஏன் முக்கியமானது?
வரியை மீண்டும் 75% ஆக உயர்த்தினால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்குக் கிடைக்கும் 17.3 பில்லியன் ரூபாய் கூடுதல் வருமானம், நாட்டின் பின்வரும் அத்தியாவசிய வரவுசெலவுத் திட்டங்களுக்குச் சமமானதாகும் என வெரிட்டே ரிசர்ச் சுட்டிக்காட்டியுள்ளது

