அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது: விக்கிரம ராஜா | Products Banned by TN Govt should not be Sold: TN Traders’ Associations Federation President

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் தங்களது கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: கும்பகோணத்தை தனி வருவாய் மாவட்டமாக தமிழக முதல்வர் விரைவில் அறிவிக்க வேண்டும். இதேபோல் 2028-ல் நடைபெற உள்ள மாசி மகா விழாவிற்கு தேவையான அனைத்து பணிகளையும் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு, அந்த விழாவிற்கு தேவையான நிதிகளை ஒதுக்க வேண்டும்.

பந்தநல்லூரில் அமைக்கப்பட்ட சாலையால், வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. அதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டாலும் அதன் சட்ட விதிகள் மாற்றப்படாமல் உள்ளது. மத்திய அரசு, சமானிய வணிகர்கள் பாதுகாக்கக்கூடிய வகையில் அந்தச் சட்டத்தை எளிமை படுத்த வேண்டும்.

தமிழகத்தில் எந்த மூலையில் வணிகர்கள் பாதிக்கப்பட்டாலும், பேரமைப்பும், தமிழக முதல்வரும் உறுதுணையாக இருக்கின்றாோம். வணிகர்கள் பாதிக்கப்பட்டால், அவருக்கு தகவல் தருவதற்காக எங்களுக்கு தனி செல்போன் எண்ணை வழங்கி உள்ளார். வணிகர்கள் மீது போலீஸார், இடையூர் ஏற்படுத்தாமல், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இதேபோல் வணிகர்கள், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறு விக்கிரமராஜா கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவர் மகேந்திரன், செயலாளர் சத்திய நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நன்றி

Leave a Reply