இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு!

வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். 

அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தருவதாகக் கூறினார். 

அமெரிக்கத் தலைவர் இதுபோன்ற கூற்றுக்களை கூறுவது இது முதல் முறை அல்ல. 

மே 10 ஆம் திகதி, வொஷிங்டனின் மத்தியஸ்தத்தில் “நீண்ட இரவு” பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான, உடனடி” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார்.

அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம், இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வொஷிங்டன் வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாகவும், அதிக வரிகளால் புது டெல்லிக்கு அழுத்தம் கொடுப்பபோம் என பிரதமர் மோடியை மிரட்டியதாக ட்ரம்ப் கூறினார். 

எனினும், பாகிஸ்தான் இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல், இந்த விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியை அணுகிய பின்னர், போர் நிறுத்தம் குறித்த புரிதல் எட்டப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது.

பாகிஸ்தான் ஆரம்பத்தில் இந்தக் கூற்றை மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக்கொண்டது.

நன்றி

Leave a Reply