இந்தியா – பாக். போரை நிறுத்திய ட்ரம்ப்புக்கு அமைதி நோபல் வழங்க வேண்டும்: வெள்ளை மாளிகை | Trump should be awarded Nobel Peace Prize for stopping India Pakistan war White House Press Secretary

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் உட்பட உலகெங்கிலும் உள்ள பல மோதல்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரோலின் லீவிட், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போதைய தாய்லாந்து மற்றும் கம்போடியா மோதல், இஸ்ரேல் மற்றும் ஈரான் போர், ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு மோதல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல், செர்பியா மற்றும் கொசாவோ மோதல், எகிப்து மற்றும் எத்தியோப்பியா மோதல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஆறு மாத பதவிக் காலத்தில் சராசரியாக மாதத்திற்கு ஒரு சமாதான ஒப்பந்தம் அல்லது போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளர். எனவே இது அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதற்கான நேரம்” என்றார்.

மே 10-ஆம் தேதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் சுமார் 30 முறை கூறியுள்ளார். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசுகையில், எந்த நாட்டின் தலைவரும் இந்தியாவிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொல்லவில்லை என்று கூறினார்.

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் எந்த நாடும் மத்தியஸ்தம் செய்யவில்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதால், ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

நன்றி

Leave a Reply