‘இப்படியொரு பயணத்துக்கான சூழல் உருவானதே ஓர் அவலம்’ – கிரெட்டா தன்பெர்க் வேதனை! | That this mission has to exist is a shame: Greta Thunberg

ஏதென்ஸ்: “இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஒரு நாடு தடுக்கையில் அவர்களை எதிர்த்து கடல் வழியாக செல்ல வேண்டிய சூழல் உருவானதே ஒரு பெரும் அவல நிலை தான்.” என்று சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 50 படகுகளில் சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் உள்பட சுமார் 500 செயற்பாட்டர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டனர். இந்தப் படகுகளை இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்தனர். அதிலிருந்தவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இவர்கள் படிப்படியாக நாடுகடத்தப்பட்ட நிலையில், கிரெட்டா தன்பெர்க் உள்பட 160 பேர் ஞாயிற்றுக்கிழமை கிரீஸுக்கு நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் ஏதென்ஸ் விமான நிலையம் வந்தபோது ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களை வரவேற்றனர்.

அப்போது பேசிய கிரெட்டா, “கடல் வழியாகக் கூட நிவாரணம் காசா சென்று சேரக் கூடாது என்று மனிதமற்ற இஸ்ரேலின் முயற்சியை முறியடிக்கும் மிகப்பெரிய முயற்சிதான ஃப்ளோட்டிலா பயண,. ஆனால், இப்படியொரு மிஷனை நாங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதே ஒரு அவலம் தான். இஸ்ரேலின் இனஅழிப்பைத் தடுக்க உலக நாடுகள் செயல்பட வேண்டும். ஆனால், உலக அரசுகள் குறைந்தபட்ச அளவில் கூட செயல்படுவதாகத் தெரியவில்லை.” என்றார். முன்னதாக விமான நிலையத்துக்கு வந்தபோது கிரெட்டா பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியடி, “பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்; ஃப்ளோட்டிலா வாழ்க” என்று முழங்கினார்.

முன்னதாக, கிரெட்டா தன்பெர்க்கை காவலில் இருந்தப்போது இஸ்ரேலியப் படையினர் தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகவும், அவரை இஸ்ரேல் கொடியை முத்தமிட நிர்பந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதுபற்றி கிரெட்டா ஏதும் சொல்லவில்லை.

ஆனால். ஃப்ளோட்டிலா பயணத்தில் இருந்த யாஸ்மின் அகார் என்ற செயற்பாட்டாளர் கூறுகையில். ”எங்களை மிருகங்கள் போல், பயங்கரவாதிகள் போல் நடத்தினார்கள். நாங்கள் தாக்கப்பட்டோம். தூங்கவிடவில்லை. முதல் 48 மணி நேரம் எங்களுக்கு உணவு, சுத்தமான குடிதண்ணீரும் கூட கிடைக்கவில்லை.” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. ஃப்ளோட்டிலா பயணத்தில் வந்த சமூக செயற்பாட்டாளர்களில் கிரெட்டா உள்பட 170-க்கும் அதிகமானோரை கிரீஸ் மற்றும் ஸ்லோவேகியா வழியாக நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவித்தது.

நன்றி

Leave a Reply