சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்இவ்வருடம் மே மாதம் நடைபெறவுள்ள ஹஜ்காலத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள 3,500 இலங்கை யாத்திரிகர்களுக்கான புதிய சேவை வழங்குநராகநியமிக்கப்பட்டுள்ள ரிஹ்லத் வ மனாபிஃ நிறுவனத்தின் மக்கா நகரிலுள்ள தலைமையகத்திற்குச் சென்று சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, தூதுவர், அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) முஹம்மத் அல்-தைய்யப் அல்-குஸாமி அவர்களையும், குறிப்பாக மினா மற்றும் அரபா பகுதிகளில் ஹஜ்கிரியைகளுடன் தொடர்புடைய பல சேவைகளுக்குப் பொறுப்பான அவரது குழுவினரையும் சந்தித்தார். இலங்கையாத்திரிகர்கள் ஹஜ் கிரியைகளை சீராகவும் திறம்படவும் நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இந்த சந்திப்பின்போது, ரிஹ்லத் வ மனாபிஃ நிறுவனத்தின் திறன்கள் மற்றும் விரிவான அனுபவம் குறித்து தூதுவர் நம்பிக்கை வெளியிட்டதுடன், இலங்கை யாத்திரிகர்களின் நலன் மற்றும் உரிய வசதிகள் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அத்துடன் இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் ஆன்மீக திருப்தி அளிக்கக்கூடியதுமான சூழலில் தங்களது மார்க்க கடமைகளை நிறைவேற்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே பூர்த்திசெய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய, இருதரப்பும் நெருங்கிய ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி அளித்தனர்.

