ஐரோப்பாவைத் தாக்கக்கூடிய தொலைதூர ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருவதாக இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் பிரித்தானியா பாதுகாப்பாக உள்ளது என்றும் இங்கிலாந்தின் வீடமைப்புத்துறை செயலாளர் ஸ்டீவ் ரீட் ( Steve Reed) தெரிவித்துள்ளார்.
சாகோஸ் தீவுகளில் உள்ள இங்கிலாந்து-அமெரிக்க கூட்டணியின் டியாகோ கார்சியா இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தித் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களுக்கு ஈரானிய ஏவுகணைகள் அச்சுறுத்தலாக உள்ளன என்று டெல் அவிவ் சனிக்கிழமையன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தது.
எனினும், போருக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக இஸ்ரேல் அச்சுறுத்தலை மிகைப்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையிலேயே இங்கிலாந்தின் வீடமைப்புத்துறை செயலாளரின் மேற்படி கருத்துக்கள் வந்துள்ளன.
மேலும் அவர், பிரிட்டிஷ் இராணுவம் நாட்டைப் பாதுகாக்கும் “முழுத் திறனும்” கொண்டுள்ளதாக கூறினார்.
ஆனால், தெஹ்ரானின் ஏவுகணைகள் அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுத் தளமான டியாகோ கார்சியாவை எவ்வளவு அருகில் அடைந்தன என்பதை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
