ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களில் ஒருவரும், அதன் உச்ச தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவருமான அலி லாரிஜானி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என்பதை ஈரானிய அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
தெஹ்ரானுக்கு அருகிலுள்ள தனது மகளின் இல்லத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் தனது மகன், துணைத் தலைவர் மற்றும் மெய்க்காப்பாளர்களுடன் அலி லாரிஜானி கொல்லப்பட்டார் என்று ஈரானிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (17) உறுதிப்படுத்தினர்.
தெஹ்ரானுக்கு வடகிழக்கில் உள்ள பர்திஸ் என்ற இடத்தில் அதிகாலை நேரத்தில் லாரிஜானி கொல்லப்பட்டதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதன்போது, அவருடன் அவரது மகன் மொர்தெசா லாரிஜானி, அவரது பாதுகாப்புத் துணைவர் அலிரெசா பயாத் மற்றும் பல காவலர்களும் இருந்தனர்.
லாரிஜானி, ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகவும், படுகொலை செய்யப்பட்ட உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது மகனும் வாரிசுமான மொஜ்தபா ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராகவும் பரவலாகக் கருதப்பட்டார்.
அந்தப் பாதுகாப்புத் தலைவர், ஆளும் அமைப்பில் உள்ள ஏனைய பிரிவுகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்களுடன் நடைமுறைக்கு உகந்த உறவுகளைக் கடைப்பிடிப்பதில் நற்பெயர் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கி மூன்று வாரங்களுக்கும் மேலான நிலையில் இந்தக் குறிவைத்த படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.
இப்போர் விரைவாக ஒரு பிராந்திய மோதலாக உருவெடுத்துள்ளதுடன், பதற்றம் தணியும் அறிகுறிகளையும் காட்டவில்லை.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதை மீண்டும் தொடங்குவதற்காக இராணுவ உதவி கோரிய தனது கோரிக்கைகளுக்கு நட்பு நாடுகள் காட்டிய மெத்தனமான பதிலுக்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மைய நாட்களாக அந்நாடுகளைத் தொடர்ந்து கடுமையாகச் சாடி வருகிறார்.
