– ஓய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி. சி. மௌனகுரு!
ஒரு சிறு அறிமுகம்
——————————–
அந்தோனி படம் பற்றி திரைப்படம் பற்றிய என்னுடைய அவதானக் குறிப்புகள் மூன்று பகுதிகளாக இங்கே பதியப்பட இருக்கின்றன, இது நீண்தொரு கட்டுரை
முதல் பகுதி எடுப்பு
இத் தலைப்பில் கட்டுரை ஆரம்பம் ஆகிறது இது அந்தோனி திரைப்படத்திற்கு முன்னர் உலகிலும் தமிழகத்திலும் வந்த கடல் வாழ் மக்களின் கதை கூறும் சில நாவல்கள் நாடகங்கள் திரைப்படங்கள் பற்றிக் கூறுகிறது
இரண்டாம் பகுதி தொடுப்பு
இத தலைப்பின் கீழ் அமையும் கட்டுரை அந்தோனியின் படக்கதையையும் அது படமாக்கப்பட்ட விதம் அதன் சிறப்புகள் பற்றியும் கூறுகிறது
மூன்றாம் பகுதி முடிப்பு
இத் தலைப்பின் கீழ் வரும் மூன்றாவது தொடர்ச்சி அந்தோணி யின் திரைப்பட நெறியாக்கம் படம் சார்ந்த அனுபவம் எதிர்பார்ப்பு என்பன பற்றிக் கூறுகின்றது
————————————————————————————————————–
எடுப்பு –1
உலகப் பரப்பில் கடலும் மக்களும் அவர்கள் வாழ்க்கை கலை யாக்கம் பெற்றமையும் சுருக்க அறிமுகம்
———————————————————————————————————-
அண்ட வெளியிலே நின்று சுழலும் புவிப் பந்திலே கடலும் நிலமும் இரண்டாக பிரிந்து கிடக்கின்றன, நிலத்தை விடக் கடலின் பரப்பே அதிகம் இந்தக் கடலில் இருந்துதானே நிலம் பிறந்தது?
அவ்வகையில் நிலத்தின் தாய் கடல்
அதிகம் பேரிரைச்சலோடு. அலை எறிந்து காட்சிதரும் அசைந்து கொண்டிருக்கும் திரவப்பொருளாக க் கடல்
மனிதர், தன்னை மிதித் து உ தை த்து கொத்தி வெட்டிக் காயபடுத்தினாலும் எல்லாவற்றையும் தாங்கிகொண்டு அமைதியாக் கிடக்கும் திடப்பொருளாக நிலம்
கடல் ஆர்ப்பாட்டம்
நிலம் அமைதி
ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் என்ற மஹா தத்துவத்தைப் போதிக்கின்றன இந்தக்க் கடலும் நிலமும்
கடல் சமூகம்
———————-
உலகம் பூராவும் அந்த காலம் தொடக்கம் இன்று வரை இந்த திரவப் பொருளான கடலின் கரைப்பகுதியிலே அதன் ஓரத்திலே உலகப்பரப்பில் பலர் கடல் சமூகமாக வாழ்ந்து வருகிறார்கள்
பண்டைக் காலத்திலே இந்த சமூகம் கடலை நம்பியே வாழ்ந்தது
கடலே அவர்களுக்கு தாயானது
கடலே அவர்களுக்கு உறவானது
கடல் அவர்களோடு பேசியது
கடல் அவர்களுக்கு பல கதைகள் கூறியது
தன் அருகில் தன்னையே நம்பி வாழ்ந்த மக்களின் உள்ளக் கதைகளெல்லாம் அந்தக் கடல் அன்னை அறிவாள்
உலகப் பரப்பில் கடல் நிலம்
————————-
உலக பரப்பிலே கடலுக்கும் கடல் அருகில் வாழ்ந்த மக்களுக்கும் இடையே உள்ள உறவுகளை கூறுகின்ற பல இலக்கியங்கள் உருவாகின அவற்றில் ஒன்று இரண்டை இங்கு பார்ப்போம்
உலகப் புகழ்பெற்ற நாவலான ஹெமிங்கேயின்
கடலும் கிழவனும்
தொடக்கம் தமிழ்நாட்டில் கரையோரப் பகுதி மக்களின் வாழ்க்கையை கூறுகின்ற வண்ண நிலவனின்
கடல்புரத்திலே வரை
பலமொழிகளிலும் கடல் அருகிலே வாழ்ந்த மக்களைப் ஒட்டிய பல புகழ் பெற்ற இலக்கியங்கள் உருவாகின பல திரைப்படங்களும் உருவாகின அவை இலக்கியமாகவும் திரைப்படமாகவும் எடுத்துரைக்கும் முறையினால் உலகப் புகழ் பெற்றன
- The Old Man and the Sea – Ernest Hemingway -கடலும் கிழவனும் எர்னஸ்ட் ஹெமிங் வே எழுதிய இந்த நூல் வெளியான ஆண்டு: 1952 அது Pulitzer பரிசு பெற்ற புகழ்பெற்ற நாவல்.
கதாநாயகன்: சாந்தியாகோ என்ற வயதான மீனவர்.84 நாட்களாக மீன் பிடிக்க முடியாத நிலையில் அவர் ஆழ்கடலுக்குச் சென்று ஒரு பெரிய மார்லின் மீனைப் பிடிக்க போராடுகிறார்
.மூன்று நாட்கள் கடலோடு, மீனோடு போராடும் அந்த மனிதனின் மனவலிமை கதையின் மையம்.
ஆனால் திரும்பும் போது சுறாக்கள் மீனைச் சாப்பிட்டு எலும்பாக மட்டுமே மீதமாகிறது.
இந்த நாவல் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம் , தோல்விக்குள் உள்ள கண்ணியம்,
தொழில் வாழ்க்கையின் போராட்டம்
ஆகியவற்றை ஆழமாக காட்டுகிறது.
தமிழில் மீனவர் வாழ்க்கையைப் பேசும் நாவல்கள் பல வந்துள்ளன
வண்ண நிலவனின்
கடல் புரத்திலே எனும் நாவல் முக்கியமானது
இந்த நாவல் தமிழில் மீனவர் வாழ்க்கையை மிகவும் இயல்பாக சித்தரித்த ஒரு முக்கியமான படைப்பாக கருதப்படுகிறது.
இந்த நாவலில் கடற்கரை கிராம வாழ்க்கை மீன்பிடி தொழிலின் சிரமங்கள் குடும்ப உறவுகள் வறுமை மற்றும் சமூக மாற்றங்கள் போன்ற பல அம்சங்கள் வருகின்றன.
கடல் மீனவர்களின் வாழ்க்கையில் எப்படி ஒரு தாயாகவும் ஒரு ஆபத்தாகவும் இருக்கிறது என்பதை இந்த நாவல் மிக உணர்ச்சிகரமாகச் சொல்கிறது.
அத்தோடு ராஜம் கிருஸ்ணனின் அலைவாய்க் கரையில் எனும்இந்த நாவல்’அலைவாய்க் கரையில்’ நாவல்
சாதாரண மீனவர்களின் வாழ்க்கையில் விசைப்படகுகள் நிகழ்த்திய மாற்றங்கள் பற்றிக் கூறுகிறது. கடற்கரை உழைப்பாளர் மக்களின் வாழ்கை கூறப்படுகிறது
இன்னும் பல நாவல்கள் தமிழில் எழுந்துமுள்ளன
நாடகங்களில் கடலோர வாழ்வு
—————————
கடல் ஓர மக்களின் வாழ்க்கை உலக நாடகங்களிலும் முக்கியமான கருப்பொருளாகத் தோன்றுகிறது. கடல் உணவையும் வாழ்வாதாரத்தையும் தரும். அதே நேரத்தில் அது அபாயமும் மரணமும் நிறைந்த உலகமாகவும் இருக்கிறது. அதனால் கடலோர மீனவர் வாழ்க்கை பல நாடக ஆசிரியர்களை ஆழமாக பாதித்துள்ளது.
கடல் வாழ்க்கையை மிகத் தெளிவாகச் சித்தரிக்கும் முக்கிய நாடகங்களில் ஒன்று Riders to the Sea. இதை எழுதியவர் ஜோன் மில்லிங்டன் சிஞ்
இந்த நாடகம் ஐர்லாந்து மீனவர் குடும்பத்தின் துயர வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு தாய் தனது குடும்பத்தினரை கடலில் ஒன்றன்பின் ஒன்றாக இழக்கிறாள். கடலின் கொடூர சக்தி இதில் வெளிப்படுகிறது.
அமெரிக்க நாடக ஆசிரியர் Eugene O’Neill எழுதிய Anna Christie நாடகமும் கடலோர வாழ்க்கையைப் பேசுகிறது.
இதில் ஒரு கடலோடியின் குடும்ப உறவுகளும் வாழ்க்கைப் போராட்டங்களும் காட்டப்படுகின்றன.
ஆங்கில நாடக மரபில் The Tempest என்ற நாடகம் கடல் புயலையும் மனித விதியையும் மையமாகக் கொண்டது. இதனை எழுதியவர்வில்லியம் சேக்ஸ்பியர்
இந்திய இலக்கியத்தில் மலையாளத்தில் செம்மீன் என்ற நாவல் முக்கியமானது. இதை எழுதியவர் தகழி சிவசங்கரன் பிள்ளை. இது நாடகமாகவும் வந்துள்ளது கேரள மீனவர் சமூகத்தின் காதல், நம்பிக்கை, மரபு ஆகியவை இதில் கூறப்படுகின்றன.
இலங்கையிலும் கடற்கரை மக்களின் வாழ்வு கூறும் நாடக மரபுகள் உள்ளன.
மஹா கவி ருத்ரமூர்த்தியின் புதியதொரு வீடு முந்தல் கிராம கடற்கரை வாழ் மக்களின் ஆசாபாசங்களைப் பேசுகிறது
அவர்கள் வாழ்வு கடல் வாழ்வு ஆனால் அதனை அவர் வென்று மீள்வார் என்பது அவரது கூற்று
சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்
எது வந்த தெனில் என்ன அதை வென்று மீள்வார்
என
கடலையும் வாழ்வையும் வெல்லும் மனிதரைக் காட்டுகிறர் நாடக ஆசிரியர் மஹாகவி ருத்ர மூர்த்தி
மொத்தத்தில், கடல் வாழ்க்கை மனிதனின் துயரம், துணிவு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த கருப்பொருளாக உலக நாடகங்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
கடலோர மீனவர் வாழ்வு கூறும் உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களும், இந்தியத் திரைப்படங்களும், அதன் பின்னணியில் தமிழ்த் திரைப்படங்களும்”
———————————————————————-
கடல் மனிதனுக்கு வாழ்வையும் அபாயத்தையும் ஒரே நேரத்தில் தருகிறது.கடலோரத்தில் வாழும் மீனவர்கள் தினமும் கடலுடன் போராடி வாழ்கின்றனர்.
அவர்களின் வாழ்க்கை கடின உழைப்பு, வறுமை, நம்பிக்கை, அன்பு ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இந்த வாழ்க்கை அனுபவங்கள் உலக திரைப்படங்களிலும் பலமுறை சித்தரிக்கப்பட்டுள்ளன.
உலக திரைப்படங்களில் கடலோர மீனவர் வாழ்க்கையை உணர்ச்சிகரமாகக் கூறிய படங்களில் ஒன்று The Old Man and the Sea.
இது Ernest Hemingway எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஒரு முதிய மீனவர் கடலில் பெரிய மீனைப் பிடிக்க போராடும் கதையை இது கூறுகிறது.
மனிதனின் உறுதி, தனிமை, கடலுடன் இருக்கும் உறவு ஆகியவற்றை படம் ஆழமாக வெளிப்படுத்துகிறது.
மற்றொரு முக்கியமான படம் The Perfect Storm.
இது ஒரு மீன்பிடி கப்பல் பேராபத்தான புயலில் சிக்கிக்கொள்ளும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
கடலில் மீன்பிடி தொழில் எவ்வளவு ஆபத்தானது என்பதை படம் வலியுறுத்துகிறது.
அதேபோல் இத்தாலிய இயக்குநர் Luchino Visconti இயக்கிய La Terra Trema என்ற திரைப்படம் மீனவர் சமூகத்தின் வறுமையும் சுரண்டலையும் வெளிப்படுத்துகிறது.
இது உலக சினிமாவில் “நியோ ரியலிசம்” என்ற கலைநடையின் முக்கியமான படமாகக் கருதப்படுகிறது.
இந்திய திரைப்படங்களிலும் கடலோர மீனவர் வாழ்க்கை பலமுறை சித்தரிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் மிகவும் புகழ்பெற்ற படம் செம்மீன்
மலையாள மொழியில் உருவான இந்த படம் கடற்கரை மீனவர் சமூகத்தின் மரபுகள், நம்பிக்கைகள், காதல் மற்றும் துயரங்களை உணர்ச்சிகரமாகச் சொல்கிறது.
இந்த படம் இந்திய தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
தமிழ் திரைப்படங்களிலும் மீனவர் வாழ்க்கை பின்னணியாக சில படங்கள் உருவாகியுள்ளன.
அவற்றில் ஒன்று
நீர்ப்பறவை
இந்த படம் கடற்கரை கிராமத்தில் வாழும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தையும் குடும்ப உறவுகளையும் சித்தரிக்கிறது.
மேலும்
கடல் என்ற திரைப்படமும் கடற்கரை கிராமத்தை மையமாகக் கொண்டு மனித வாழ்க்கையின் நல்லதும் கெட்டதுமான போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.
இதனால் உலக சினிமாவிலிருந்து இந்திய சினிமா வரை கடலோர மீனவர் வாழ்க்கை ஒரு முக்கியமான கலைப் பொருளாக இருந்து வருகிறதுஎன்பது தெளிவாகத் தெரிகிறது
இந்த திரைப்படங்கள் கடலில் உழைக்கும் மக்களின் துயரத்தையும் தைரியத்தையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றன.
அதே நேரத்தில் கடல் மனித வாழ்வின் அழகையும் அபாயத்தையும் நினைவூட்டுகின்றது.
கடற்கரைப் பண்பாடும் தமிழரும்
—————————————————-
இந்தப் பின்னணியிலே பார்க்கும் பொழுது தமிழ்நாட்டின் கிழக்கும் தெற்கும் மேற்கும் சங்ககாலத்தில் நீண்ட நிலம் கடல் சார்ந்த பிரதேசமாக இருந்தது
தமிழகத்தின் தென்கரை ஓரத்திலே தான் குமரித் தெய்வம் உருவானது
கடல் கோபம் கொண்டு குமரி நாட்டையும் மக்களையும் தனக்குள் இழுத்துகொண்ட தொன்மங்கள் உருவாகின
தமிழர் பரப்பிலே கடல் நிலம் மக்கள்
————————————————–
தமிழ் சங்க இலக்கியங்களிலே
நெய்தல்
என்றொரு நிலம் இலக்கிய அந்தஸ்து பெற்றது
அதன் பாடல்கள் இரங்கல் எனும் ஒழுக்கம் கூறும் பாடல்கள் என இலக்கணப்படுத்தப்பட்டு தொல்காப்பியத்தில் அகத்திணை எனும் தமிழ் இலக்கிய மரபுக்குள் அடக்கப்பட் ட து
கடலுக்குச் செல்கின்ற கணவன் திரும்பி வருவான் என்று நம்பி அவன் வரவை வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்து இரங்கிக் கொண்டிருக்கின்ற காதலிக்கு ஏற்படுகின்ற உணர்வுதான். அந்த
இரங்கல்
சங்க காலத்திலேயே பாண்டிய மன்னர்கள் கடலோடு சேர்த்து அடையாளம் காணப்பட்டார்கள்
மீன் கொடி அவர்களது சின்னம் ஆயிற்று
கேரளக் கடற்கரை வாழ்மக்கள்
—————————————————————
பண்டைய தமிழ் நாட்டின் சேர நாடு இன்றைய கேரளம் அந்தக் கேரள கடற்கரையிலே வாழ்ந்த மீனவர்கள் வாழ்கையைக் கூறிய தகழி சிவசங்கரன் பிள்ளையால் எழுதப்பட்ட செம்மீன் நாவல்
எங்களுக்கு கிடைத்த கடலை அண்டி வாழ்ந்த கேரள மக்களின் நம்பிக்கை ப்ழக்க வழக்கம் வாழ்வு கூறும் ஒரு பெரிய நவீன இலக்கியம்
ராமு கரியத் எடுத்த அந்தப் படம் அந்த காலத்தில் கேரள கரையோர மீனவர்களைப் பற்றிய ஒரு காதல் காவியம் இது முனமேயே குறிப்பிடப்பட்டும் உள்ளது
காதல் கதை ஆயினும் கடலுக்கும் மனித உறவுக்கும் வாழ்க்கைக்கு இடையே உள்ள உறவை கூறுகின்ற அற்புதமான படம்
தமிழர் வாழ்ந்த நெய்தல் நிலம்பற்றி மானுடவியல் முறையிலே ஆராய்ந்த பக்தவச்சல பாரதி கடலை உழுது ஆடவர் மீன் கொண்டுவர
அந்த மீனை உலர்த்தி சந்தைப்படுத்தி பண்டமாற்று செய்தவள் மீனவப் பெண்கள் என்று கூறுவர் உலர்வும் உழைப்பும் கொண்ட பெண்கள் இந்த கரையோர பெண்கள் குடும்பத்தின் அச்சாணிகள் ஆயினர்
கரையோர மக்களிடையே அவர்கள் தொழிலை பற்றியும் கடலைப் பற்றியும் பல்வேறு கதைகள் இருந்தன
மீன வப் பெண் இன்னொரு ஆடவனுடன் தொடர்பு கொண்டால் கடல் அந்தப் பெண்ணின் மீனவக் கணவனைத் தனக்குள் இழுத்துக் கொள்ளும் என்று ஒரு பழங்கதை கேரள மீனவரிடம் நிலவிஇருந்தது
அந்த தொன்மத்தை மையமாகக் கொண்டது செம்மீன் நாவலும் அதனை ஒட்டி எழுந்த திரைப் படமும்
கிறிஸ்தவர்கள் ஆயினும் இஸ்லாமியராயினும் ஒரு காலத்தில் பொங்கல் வைத்து பூஜை வைத்து படகை கடலுக்குள் தள்ளும் வழக்கம் மேற்கொண்டிருந்தனர்
இலங்கையின் கரையோர மீனவர்கள் முக்கியமானவர்கள்
இலங்கையில் கடலோர மக்கள்
————————————————-
கரையோரச் சிங்கள மீனவர்கள்
கரையோர வேடவ மீனவர்கள்
கரையோர தமிழ் மீனவர்கள்
கரையோர இஸ்லாமிய மீனவர்கள்
என்று இவர்களை நாங்கள் இனரீதியாக இலங்கையில் பிரித்தாலும்
கடலுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள
பழங்கதைகள் மரபுக் கதைகள்
பெரும்பாலும் ஒற்றுமையாகவே இருந்தன
படகுக்கும் அல்லது தோணிக்கும் பூசை செய்த பின்னரே அவர்கள் புறப்ப்ட்டனர் மீன் கிடையாத போது அவர்கள் கடல் அன்னையைக் கோவிக்கவில்லை தமது படகையோ தோணியையோ தான் கோபித்தனர்
அதற்கு ஏசினர் அடித்தனர் அ தைப்பிடித்த பேயை பிரண்டம் செடி கொண்டு அடித்து அப்பேயை விரட்டினர்
இலங்கை தமிழரிடையே கடல்-நிலம் வாழ்வு
————————————————————————
இலங்கைத் தமிழர்களை பொருத்தவரை நீர்கொழும்பு தொடக்கம் வடக்காக
சிலாபம்
முந்தல்
புத்தளம்
உடப்பு
மன்னர்
யாழ்ப்பாணம்
முல்லைத்தீவு
என சென்று
கிழக்கில்
திருகோணமலை
மட்டக்களப்பு
கல்முனை
அம்பாரை
என ஒரு மீன்பிடிச் சமூகம் வாழ்ந்து வருவதை ஈழத்து அல்லது இலங்கை நிலவியல் எங்களுக்குக் காட்டுகிறது
இந்த மக்களின் வாழ்க்கை பற்றி நாவல்கள் வந்திருக்கின்றன கதைகள் வந்திருக்கின்றன திரைப் படங்கள் கூட வந்திருக்கின்றன
இலங்கையில் வந்த தமிழ் சினிமா படங்களிலே கடலோரக் கதையைக் கூறுவன இரண்டு
ஒன்று வாடைக்காற்று
இன்னொன்று பொன்மணி
வாடைக்காற்று முழுக்க முழுக்க மன்னார்ப் பகுதியில் வாழ்ந்த கரையோர தமிழ் மக்கள் கதை கூற
பொன்மணி யாழ்ப்பாணக் கரையோர தமிழ் மக்களுக்கும் யாழ்ப்பாண நிலத்தில் உள்ளே வாழ்ந்த இன்னொரு சமூக மக்களுக்கும் இடையில் இருந்த உறவுகளைக் கூற வருகின்றது
பொன் மணி பற்றி அன்று விமர்சனம் எழுதிய பேரா. சிவத்தம்பி
கரையோரக் கோவிலான முனியப்பர் கோவிலில் ஆரம்பமாகும் கதை
நாவாந்துறைக் கிறிஸ்தவ சவக்காலையில் முடிவது ஒரு சமூ கக் குறியீடு என்கிறார்
அந்த கூற்றுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன அல்லவா?
அடுத்து இந்தப் பின்னணியில் நமது அந்தோனிக்கு வருவோம்
(தொடரும்)
——————————————————————————————————————
தொடுப்பு 2
அந்தோனி திரைப்படக்கதையும் அது படமாக்கப்பட்ட விதமும்
————————————————————————————————-
உலகப்பரப்பிலும் தமிழ்ப்பரப்பிலும் கடலை அண்டி வாழும் மக்கள் வாழ்க்கை கலையாக்கம் பெற்ற கதை இதுவரை குறிப்பிடப்பட்டது
இந்த அகண்ட பின்னணியில் தான்அண்மையிலே வந்த அந்தோணி திரைப் படத்தை வைத்து நாம் மதிப்பிட வேண்டி இருக்கிறது
சங்கத் தமிழர் பண்பாட்டின் நெய்தல் நில மக்களின் வாழ்வின் தொடர்ச்சியும் நீட்சியும் தான் இந்த அந்தோனி
பண்டைத் தமிழர் பண்பாட்டின் நெய்தல் பண்பாட்டின் அடித்தளங்கள்
இன்றைய நகர மயமாக்க
உலக மயமாக்க
டிஜிரல் மயமாக்கச்
சூழலில் சுருங்கிச் சுருங்கி இல்லாதாகும்
காலச்சூழலில்
கடலோரத் தமிழர் வாழ் குக்கிராமங்களில்தான் அந்த பழைய எச்சங்கள்
மனித உணர்வுகள்
நேர்மை நீதி நியாயம்
வாழ்க்கை முறைகள் பண்பாடுகள்
யாவும் ஒரு வாழ்வாகக் காணவும் படுகின்றன
அந்த எச்சம் கலை நயத்தோடு அந்தோனியில் தரப்படுகிற்து
இனி படியுங்கள்
————————–_—————————————————————————-
அந்தோணி படம் பாசையூர் அல்லது நாவாந்துறைக் கிராமம் போன்ற ஒரு மீனவக் கிராமத்தின் வாழ்க்கை என நினைக்கிறேன்
நான் யாழ்ப்பாணதில் வாழ்ந்த காலத்தில் அதனை கண்முன் கண்டேன் காலம் சென்ற டானியல் அன்ரனி வீட்டில் உண்ட உணவு அதன் வித்தியாசமான சுவை நண்டுச் சுண்டல் பெரிய மீன் துண்டுக் குழம்பு அந்த்க் குடும்பத்தின் அன்பான உபசரிப்பு எல்லாம் ஞாபகம்வருகிறது
அப்பகுதிகளில் பார்த்த கூத்துகள் ஞாபகம் வருகிறது
அங்கு அலுப்பாந்தியில் மீன் வாங்கசென்ற காலங்கள் ஞாபகம் வருகின்றன
பொன் மணி படப்பிடிப்பில் தர்ம சேன பத்திராஜா அந்தக் கிராம தொழில் சார் அசைவியக்கத்தை 1978 இல் கமராவுக்குள் கொணர்ந்தார் அந்த நினைவுகள் ஞாபகம் வருகின்றன
அந்த மீனவக் கிராமங்களுக்கென்று
தனித்துவமான வாழ்க்கை முறை ஒன்று இருக்கிறது
தனித்துவமான பண்பாடு ஒன்று இருக்கிறது
தனித்துவமான பேச்சு வழக்கு ஒன்று இருக்கிறது
தனித்துவமான உறவும் முறைகளும் இருக்கின்றன
இந்து மதம் சார்ந்தவர்களாக இருந்து கிறிஸ்தவர்களாக அவர்கள் மாறிய போதிலும் பழைய இந்து மதம மரபுகளை கடைப்பிடிக்கும் பழைய தலை முறையினரையும் நாங்கள் அவர்களிடம் காணுகிறோம்
அந்தோனி திரைப்படம் அந்த ஒரு கிராமத்தின் மக்களையும் அவர்களுடைய உளவியலையும் அவர்களுடைய உறவுகளையும் மனித உணர்வுகளையும் ஒரு கதை மூலம் சிறப்பா க் காட்டுகிறது
அந்தோணியின் கதைச் சுருக்கம் இதுதான்
—————————————————————————–
இதில் வரும் அந்தோனியுடைய பூர்வீகம் நமக்கு தெரியாது
செம்மீனில் வரும் கதாநாயகன் போல் இவனும் ஒருவன்
அந்தோனிக்கு சொந்த பந்தம் இல்லை
வாலிபனாக இருந்த போதும் சொந்த பந்தம் எதுவும் இல்லாமலே இருந்த அவனுக்கு சொந்தமெல்லாம் அந்த கடல் அன்னை தான்
ஆழக்கடல் சென்று மீன்பிடித்து வருவதிலே அவன் அசாத்திய கெட்டிகாரனாக இருந்தான்
அவர்கள் பாசையில் தொழில் தெரிந்தவனாக இருந்தான் தொழிலை அவன் நேசித்தான் அதனைப் பூசித்தான்
ஒரு நாள் கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது அங்கே இன்னொரு படகிலே வந்த நினைவற்று தனியாக உலர்ந்து கிடந்த பெண்ணை மாத்திரம் காணுகின்றான் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து கரைக்கு வந்து சேர்க்கின்றான்
அவள் எதையும் பேசாத ஒரு அமைதியானவள்
அவனும் அவளுடைய பூர்வீகத்தை அறிய விரும்பவில்லை
கரையோரத்தில் இருந்த கோயில் பாதிரியார்
அவர்களுக்கு ஆலோசனை கூறி அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவனை வேண்ட இரண்டு அனாதைகளும் கருணையினால் இணைந்து காதலால் கட்டுப்படுகின்றனர்
அந்தோனியைப் பொறுத்தவரை அவள் அவனுக்குக் கடல் அன்னை தந்த கன்னி
அந்தோனியைத் திருமணம் செய்து அவள் கணவனிடம் தூரக் கடலுக்குச் செல்லக்கூடாது என்று வாக்குறுதி வாங்குகிறாள்
அதற்கேற்ப அவன் தன் சம்மாட்டியாரிடம் கடல் ஓரத்தில் இருந்து மீன் பிடிக்க்க ஒரு சிறு படகை கேட்டுப் பெற்றுக் கொள்கின்றான்
அதற்குப் வாடகைப்பணம் தேவையில்லை என்று அவர் சொன்ன போதும் பழக்க மரபு காரணமாக அவன் தினமும் அவருக்கு ஒரு சிறிது பணம் கொடுத்து வருகின்றான்
அவனின் வாகனம் இரண்டு
ஒன்று அவனது கால்கள் இன்னொன்று
லொடலொத்துப்போன ஒரு பழைய சைக்கிள்
அந்தோனியின் வாழ்க்கை அமைதியாகப் போகிறது
அந்தோனிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது
அவன் அவளை இன்னொரு அம்மாவாவைக் காணுகின்றான்
அவனது முதல் அம்மா கடல் அன்னை
இரண்டாவது அம்மா அவனுடைய மனைவி
மூன்றாவது அம்மா அவருடைய மகள்
அந்தோணியின் உலகமே அந்த குடும்பம் தான்
ஒரு நாள் மனைவி மயங்கி விழுகின்றாள்
அவளை அவன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்கின்றான் இரத்தப் பரிசோதனை நடக்கின்றது அவள் உடலில் வினோதமான ஒரு நோயைக் கண்டுபிடிக்கின்றார் டாக்டர் அது ஒரு ஆட்கொல்லி நோய் மெல்ல ஆளைக் கொல்லும் நோய் என்கிறார் டொக்டர்
அந்தோனியையும் அந்தோனியின் மகளையும் டொக்டர் பரிசோதிக்க விரும்புகின்றார்
மகளை இவன் பாடசாலையில் இருந்து அழைத்து வருகின்றான் அவளும் பரிசோதிக்கப்படுகின்றாள்
அந்த புது விதமான வருத்தம் மகளுக்கும் இருப்பதை பரிசோதனை மூல்ம் டொக்டர் கண்டு பிடிக்கின்றார் ,
பெரும் செலவுகோரும் வைத்தியம் பண்ண முடியாத வருத்தம் அது
அதற்கு வைத்தியச் செலவுக்கு நிறைந்த பணம் தேவை
அந்தோனி உடைந்து விடுகிறான்
இந்த செய்தியை மகளிடமும் மனைவியிடமும் சொல்ல முடியாத, மற்றவரிடமும் சொல்ல முடியாத அந்தோணி குடிக்கிறான்.
தனக்குள் புலம்புகிறான் நடைப் பிணமாக வாழ்கிறான்
அவன் குணாதிச மற்றத்திற்கான காரணம் அறிய முடியாத அமைதியான அந்த அப்பாவி மனைவி தவித்துப் போகிறாள்
சம்மாட்டியாரிடம் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி மனைவியக் காப்பாற்ற பணம் வேண்டும் என்பதற்காக மீண்டும் தான் ஆழக்கடலுக்கு மீன் பிடிக்கப்போவதாக கூறுகிறான்
ஆழக் கடலில் இருந்து அவன் இரவில் வந்து சேர்ந்தபோது மகள் தூங்குவதைக் காணுகின்றான்
அப்பா என ஓடி வந்து அணைக்கும் அந்த குழந்தை நித்திரையில் ஆழ்ந்து கிடப்பதைக் காணுகிறான்
மகளை அன்போடு அழைக்கின்றான் ஆனால் அது அவளது நிரந்தர தூக்கம்
அவன் மகள் இந்த நோயினால் பிணமாகிவிட்டாள்
அழுதபடியே
தான் நடைபணமாக வாழ்ந்த ரகசியத்தையும்
மனைவிக்கு கொடுத் த வாக்குறுதியையும் மீறி ஆழ்கடலுக்கு சென்ற கதையையும்
தன் நடைப்பிண வாழ்கைக்கான காரணத்டஹியும் அவள் காலடியில் வீழ்ந்து கதறி அழுது கூறுகிறான்
அவளுக்கும் மிக விரைவில் மரணம் சம்பவித்து விடும் என்பதை இருவரும் உணர்கிறார்கள்
தனித்து வாழ்ந்து அவனுக்கு வந்து சேர்ந்த குழந்தையும் போய்விட்டது மனைவியும் போகப் போகின்றாள் , அவனுக்கு இனி ஒரே ஒரு ஆறுதல் அவனது தாய் கடல் அன்னை தான்
இடையில் அவனது நிலையை அறிந்தமீனவத் தொழிலாளர்கள்
அனைவரும் மறுநாள் ஆழக்கடல் சென்று அன்று கிடைக்கும் முழு மீனையும் அதனால் கிடைக்கும் பணத்தையும் அந்தோணிக்குக் கொடுத்து உதவ முடிவு செய்கிறார்கள் மீன் கிடைக்கிறது அதனை விற்ற பணம் கிடைக்கிறது அந்தப் பனக்கட்டை எடுத்துக் கொண்டு அந்த இரவிலே அவர்கள் அந்தோனியின் வீட்டுக்கு வருகிறார்கள்
அங்கே அந்தோனியைக் என் காணவில்லை
அவன் மனைவியை காணவில்லை
அவன் மகளையும் காணவில்லை
அந்த அரிக்கன் லாம்பு மாத்திரம் அங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
அதுவும் வழக்கமான இடத்தில் அல்ல இன்னொரு பற்றைக்குள்ளே
அவர்களுக்கு தெரிந்து விட்டது அந்தோணி மகளோடும் மனைவியோடும் ஆழ்கடலுக்கு சென்று விட்டான் என்று
அவர்களை மீட்டு வர மீனவர் கூட்டம் தமது வள்ளங்களிலே புறப்பட்டுச் செல்கிறார்கள்
தமது அன்னையோடு போராடி அவனை மீட்க ஆரோகணித்துச் செல்கிறார்கள்
படத்தின் உச்ச காட்சி ஆழக்கடலில் அந்தோணியின் பிரியத்துக்குரிய வள்ளம் அவனது அன்னை மடியான கடலில் நிற்கிறது
இறந்த குழந்தையை தொழிலே போட்டுக் கொண்டு இயேசு நாதர் சிலுவை சுமந்து நிற்பது போல அந்தோனி நடுக்கடலின் மத்தியில் தனது குழந்தையைத் தோழிலே சுமந்த படி நிற்கின்றான்
கடல் குமுறுகிறது
அலை மேல் அழுகிறது
அவன் தன்னையும் குழந்தையையும் மனைவியையும் கடல் அன்னையிடம் ஒப்புவிக்கின்றான்
அப்படியே அவனையும் அவன் மனைவியையும் பிணமான அவள் குழந்தையையும் கடல் அன்னை உள்வாங்கிக் கொள்ளுகின்றாள்
யாரும் அறியாத அந்த அந்தோனி கிராமத்தின் ஒரு மாமனிதனாக மதிக்கப்படுகின்றான்
ஏசுவின் திருப்பாடுகள் காட்டப்படுகின்றன
மக்களுக்காக தன்னை வருத்திய அந்த மகானின் காட்சியோடு அவன் நினைவும் இணைக்கப்படுகின்றது
மக்களை பாவத்திலிருந்து மீட்க வந்தவர் இயேசுபிரான்
அதானால் கசையடி பட்டவர் முள்முடி தாங்கியர் இரத்தம் சிந்தியவர்
தன்னையும் சிலுவையில் அறைந்து கொண்டு மக்களை மீட்க வந்த இயேசுவாக மக்கள் மனதிலே அந்தோனி அக்கிராம மக்கள் மனதில் இடம் பெறுகிறான்
கதையைப் படமாக்கிய விதம்
———————————————-
இந்தக் கதையை மையமாகக் கொண்டு இன்னும் சில கிளைக் கதைகளை அதனோடு இணைத்து அந்தோணியோடு முரண்படுகின்ற பாத்திரங்களையும் உடன்படுகின்ற பாத்திரங்களையும் ஒன்று கூட்டி
கரையூரிலே அந்தக் கரையோரத்தில் நாம் அன்றாடம் காணுகின்ற சம்மாட்டி. அவன் மனைவி. அவன் பிள்ளைகள், தொழிலாளர்கள் மீன்பிடிப்பவர்கள், மீன் விற்பவர்கள் கடல் தொழிலாளர் சங்கம். கடல் தொழிலாளர்களின் நம்பிக்கைகள், வள்ளம் நிமிர்த்தல், வள்ளம் கவிழ்த்தல். வலை வீசும் முறை. ஆழக் கடலில் மீன் பிடிக்கும் முறை வலை வளைக்கும் முறை .அவர்கள் கொண்டாட்த்தின் போது மகிழும் பாங்கு என்று ஒரு கிராமத்தின் வாழ்க்கையை அதன் உயிர்ப்பை நம் முன் கொண்டு வந்து விடுகிறது இந்த படம்
படத்தில் முக்கியமாக குறிப்பிடக்கூடிய பல விடயங்கள் உள்ளன
ஒன்று அதன் வலிமையான திரைக் கதையும் அந்த திரை கதையை படம் ஆக்கிய விதமும்
திரைக் கதையும் அதனை திரைப்படம் ஆக்கிய விதமும்
———————————————————————————————-
நான் முதலில் நேர்கோட்டில் சொல்லிய இந்த கதை இப்படியே திரைப்,படத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வரவில்லை
நவீன ஓவித்தில் முக்கியமாக கொலாஜ் ஓவியத்தில் அங்கொன்று இங்கொன்றாக காட்சியளிக்கும்
சில ஆழமான கோடுகள்
வர்ணங்கள்தான் தெரியும் ஆனால் ஓவியத்தை உற்று நோக்கும் ஒரு இரசிகன் பார்வையில் இறுதியில் அது திரண்டு ஒரு பேருணர்வு தரும் பெரும் காட்சி தரும் அது போ;அ போல
நான் நேர்கோட்டில் கூறிய இக்கதை முன் பின்னாக கூறப்பட்டு இறுதியில் ஒரு பேருணர்வு தரப்ப்டுகிறது
படத்தின் ஆரம்பத்தில் நடு வயது தாண்டிய நரை வெளிக்காட்டும் கிழவனாகவும் ஒரு குடும்பத்தவனாகவும் காட்சியளிக்கின்றான் அந்தோனி.
அவனது முன்னைய வாழ்வு எப்படியிருந்திருக்கும் என நாம் யோசிக்கிறோம் இது இடை வேளைவரை
பின்னர் தான் அவனுடைய வாலிப வயதும் அவன் தன் துணையை கடலில் கண்டெடுத் தது ம் அவனுடைய திருமணமும் அவனுடைய் முதல் குழந்தையின் பிறப்பும் அவன் வாழ்வு என்ற அற்புத்தில் திளைத்த அவனுடைய ஆரம்ப வாழ்க்கையும் காட்டப்படுகிறது
படத்தின் ஆரம்பக் கட்டங்களில் முதிர்ந்த வயதினும் தொழில் பக்தியும் மிகுந்த அந்தோனி இளம் தலைமுறை வாலிபர்களோடு தொழில் நிமித்தம் முரண்படுகின்ற சந்தர்ப்பங்கள் வருகின்றன
தொழிலையே தெய்வமாகவும் கடலையே தாயாகவும் பக்தியாகவும் செய்தவன் அவன்
தொழில் தெரிந்தவன் என்ற பெரும்பெயர் எடுத்தவன்
தொழில் தெரிதல் ஒரு மீனவனுப்பு சமூகம் அளித்த பி எச் டி பட்டம்
பின்னாளில் தனது அடுத்த தலைமுறை பீடித்துண்டை வாயிலேயே வைத்துக்கொண்டு
பியர் போத்தலை கையிலே வைத்துகொண்டு தொழில் தெரிந்தவர்களைப்போல போல பாவனை செய்வதை கண்டு அவன் மனம் வெதும்புகின்றான்
தொழிலுக்குப் போகும்போது அதை புனிதமாக செய்த பரம்பரையைக் கணட்வன் அவர்களோடு வாழ்ந்தவன் இந்த அந்தோனி.
ஆனால் அவன் காணும் இளைய பரம்பரையோ நன்றாக்க குடித்துவிட்டு படகுகளை கவனிக்காமல் பீடி குடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சுற்றும் பழைய விழுமியங்களை உதாசீனம் செய்கின்ற இளம் தலைமுறை
இந்த இரு வேறுபட்ட வாழ்க்கை முறைகளை அழகாகப் பின்னி இருக்கிறார் திரைக்கதை ஆசிரியர்
திரைக்கதை வசனங்கள்
———————————————————————————-
திரைக்கதையினை விழிப்புள்ளதாக்குவது அதில் வரும் சின்ன சின்ன வசனங்கள்
. இந்தப்பட த்தின் ஒவ்வொரு வசனங்களின் பின்னாலும் ஒவ்வொரு தத்துவ கருத்துக்கள் அடங்கியிருப்பது போல எனக்கு தெரிந்தது
ஒரு இடத்திலே அந்தோனியின் மகள் அவனிடம்
அப்பா நீங்கள் என்னையும் அம்மா என்று கூப்பிடுகிறீர்கள் அம்மாவையும் அம்மா என்று கூப்பிடுகிறீர்கள் என்று கேள்வி கேட்க
நீயும் என்னை அப்பா என்று கூப்பிடுகிறாய் அம்மாவும் என்னை அப்பா என்று தானே கூப்பிடுகின்றாள் என்று அவன் கூறுகின்ற அந்த பதிலுக்குள் ஆயிரம் அர்த்தங்களும் உணர்வுகளும் அன்பும் உறவு முறைகளும் அடங்கி விடுகின்றன
இது ஒரு சின்ன உதாரணம்
இதே போலவே அதிகமான வசனங்கள் ஆழ்ந்த அர்த்த பாவம் உடையவை
படத்தோடு ஒட்டி அவற்றைப் பார்க்கின்ற பொழுது அது எம்மை இன்னொரு தளத்துக்கு இட்டுச் செல்கின்றன
திரைக்கதையும் பாத்திரமும் இருந்தால் போதுமா அதனை காட்சிப்படுத்த வேண்டாமா
கமரா மேனும் ஒரு கலைஞனே
—————————————————————-
கமராமேன் இதிலே புகுந்து விளையாடி இருக்கிறார்
கிட்டடிக் காட்சிகளிலும்
தூரக் காட்சிகளிலும்
மேலிருந்து கீழ் நோக்கும் காட்களிலும்
கீழிருந்து மேல் நோக்கும் காட்சிகளிலும்
அவர் பார்வை புரிகிறது
அந்தோனியின் வாழ்வை தமது கமராக் கண்ணூடாக கண்டு நமக்குத் தருபவர் இந்தக் கமராமேன்
நுணுக்கமான நடிப்பை
ஒரு கண் அசைவை
உதட்டுத் துடிப்பை
ஒரு பெரு மூச்சை
மிக அருகில் கொணர்ந்து அந்த நடிப்பை கேமராவில் உள்ளடக்குவதிலும் கேமரா அசைகின்ற விதம் ஒரு தேர்ந்த கேமராக்காரனின் கைவண்ணத்தை காட்டுகின்றது.
காட்சிகள் இங்கே கலையாகின்றன
கமராமேன் இங்கேகலைஞன் ஆகி விடுகின்றார்
உலகப் புகழ் பெற்ற கமராக் கலைஞர்கள் வரிசைக்கு நெருங்குகிறார்
படத் தொகுப்பு
—————————————————————
ஒரு திரைக் கதையை எடுப்பதற்கு அவர்கள் பல்வேறு விதமாக அலைவார்கள் பல்வேறு சொட்டுகளை எடுப்பார்கள் சில வேளைகளில் திரைக்கதையில் இல்லாதது கூட அந்த கணத்தில் கற்பனையில் எடுக்கப்படும்
சில காட்சிகளை தேவையில்லாத காட்சிகளை கூட படம் எடுத்து வைப்பார்கள்
இவை எல்லாவற்றையும் தெரிந்து. எடுத்து. வெட்டி ஒட்டுகின்றவர் தான் எடிட்டர்
அதாவது ப டத் தொகுப்பாளர்
ஒரு எடிட்டர் தான் ஒரு சினிமாக் கலைக்கு ஒரு முக்கியமான ஆளாக இருக்கிறார்
அவரை நாங்கள் அதிகமாக கவனிப்பதில்லை
டைட்டிலில் அவர் பெயர் பத்தோடு பதினொன்றாக இடம் பெறும்.
இங்கே எடிட்டிங் மனதிலேயே பதியுமாறு செய்யப்பட்டிருக்கிறது
பாத்திரங்களும் நடிப்பும்
—————————-
படத்தில் அடுத்ததாக முக்கியமானது பாத்திரங்களும் அதில் வரும் நடிப்புகளும். நடித்தவர்கள் எல்லோருமே நடிக்கவில்லை அந்தந்த பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்
மீனவர் சங்க தலைவராக வருபவரின் பேச்சு மொழி மாத்திரம் ஏனையவர்களில் இருந்து சற்று வித்தியாசமாக காணப்படுகிறது
ஏனையோர் எல்லோரும் அசல் கரையூர் யாழ்ப்பாணத் தமிழ் பேசி நடித்திருக்கிறார்கள்
கரையூர் தமிழ் வேறு. ஏனைய இடங்களில் வழங்கும் யாழ்ப்பாணத் தமிழ் வேறு
தமிழின் சிறப்பே அதுதான் எங்கெங்கே அது வேர் கொள்கிறதோ அங்கெல்லாம் அதுஅந்தந்த நிலத்துக்கு ஏற்ப உணர்ச்சி பூர்வமான சொற்களை ஒருவகையான ஓசை நயம் மிகுந்த பேச்சை உருவாக்கும்ஆனால் பொதுவாக யாழ்ப்பாணத்தமிழ் என அறியப்பட் ட ஒரு பேச்சு தமிழ் இருக்கிறது
பிரதேசத்திற்கேயுரிய பிரதேசத் தமிழையும் யாழ்ப்பாணத்திற்குரிய அந்தப் பொதுத தமிழ் மொழியையும் அணைத்துக் கொண்டு சினிமாவுக்கு ஆன ஒரு பொது மொழியையும் பேசிக்கொண்டு கரையூருக்கான பேச்சு மொழியை பிரதானமாக்கி எந்த வித பிசுறும் இல்லாமல் படம் செல்வது படத்துக்கு கிடைத்த முக்கிய வெற்றி எனலாம்
பாத்திரங்கள் தோன்றினால் மாத்திரம் போதுமா நடிகர்கள் நடிகைகள் முக்கியமல்லவா
நடிப்பிலே மனதில் மிகவும் இடம் பெறுகிறார்கள் அந்தோனியும்
அவன் மனைவியும்
அந்த குழந்தையும்
சம்மாட்டியும்
எதிர்பாத்திரங்களான அந்த வாலிபன் அவனது நண்பர்களும்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயம்
மனித இயல்பு அது தான்
எல்லோரும் ஒத்த குணாதிசயமுடையவர்கள் அல்ல
அவரவர் குணாதிசயம் அவர்களை வேறுபடுத்துகிறது
அவர்களுடைய பேச்சிலே மூச்சிலே அசைவிலே பேச்சு ஓசையிலே அவர்களின் எடுத்துரைப்பிலே அவர்கள் நிற்கும் நிலையிலே நடக்கும் நடையிலே பார்க்கும் பார்வையிலே பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்திலே அவர்கள் குணாதிசயம் வெளிப்படும்
இதற்கான நடிப்பு பயிற்சியும் மிக மிக முக்கியமானது
இதில் நடித்தவர்கள் பலர் நான் அறிந்த முகங்கள்
நாடகங்களில் நடித்து பழக்கப்பட்டவர்கள்
நாடக நடிப்பு வேறு கேமரா முன் நடிப்பது வேறு
நாடக நடிப்பில் முழு அவையமும் நடிக் க வேண்டும் அங்கு எடுத்துரைப்பு முறையும் வேறு
கேமரா முன் நடிப்பது மிக நுணுக்கமான நடிப்பு
அதனை அவர்கள் நன்றாக செய்திருந்தார்கள்
நெறியாளரின் நெறிப்படுத்தல் இங்கே தான் தொடங்குகிறது
அந்தோனியின் மனைவியின் நடிப்பு
இன்னும் மனதை விட்டுப் போகவில்லை
அந்த அப்பாவித் தனமான மெல்லிய தோற்றமும் அந்த மெல்லிய புன்னகையுமே அந்தப் பாத்திரத்துக்கான பிளஸ் பாயிண்ட்
அழகான மெல்லிய உடல்வாகு
ஆனால் அதற்குள்ளே ஒரு நோய் இருப்பது போல ஒரு தோற்றம்
அமைதியான அவள் பார்வை அவள் அதிகம் பேசவில்லை ஆனால் அவருடைய கண்கள் அவருடைய அசைவுகள் அவருடைய பெருமூச்சு அவள் இருக்கின்ற விதம் எல்லாமே பேசுகின்றன
அந்தோனியின் மகள் ஒரு அருமையான நடிப்பு கொண்ட ஒரு சிறுமி
வெகுளித்தனமாக அப்பாவிடம் கேள்விகள் கேட்கின்ற பொழுது அவருடைய முகபாவம் மிக அருமையாக வருகிறது
அந்தோனியின் நடிப்பு ஒரு தனித்துவமானது அந்தப் பாத்திரம் அப்படியானது
இதிலே நாங்கள் வாலிப அந்தோனியை காணுகிறோம்
திருமணம் முடித்தபின் குடும்பஸ்தனாக வருகின்ற அந்தோனியை காணுகின்றோம்
பிள்ளை பிறந்த பின்நடுத்தர வயது தாண்டிய அந்தோனியைக் காணுகின்றோம்
காலம் போக வயது முதிர்ந்து நரைத்துப் போன அந்தோனியைக் காணுகின்றோம்
ஒரு பெரிய காலம் மாற்றம் அவன் உடலிலும் நடையிலும் பார்வையிலும் மூச்சிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது
இவை அனைத்தையும் அந்தோனியாக நடித்தவர் நன்றாக்க கொண்டு வருகின்றார்
அவர் இயல்பு குறும்புத்தனமானது என்றும் அவர் எறும்புபோல மிகவும் சுறுசுறுப்பானவர் என்றும் என்னிடம் ஒருவர் கூறினார்
அந்த இயல்புக்கு உள்ளே ஒரு அப்பாவித்தனமான குறும்பு இருப்பதை நான் அவர் நடித்த கயல் படத்திலே கண்டேன்
இந்த அப்பாவித்தனமான குறும்பு தான் அவருடைய பிளஸ் பாயிண்ட்
இங்கு அவர் குறும்பாக இருக்கவில்லை அப்பாவித்தனமாக இருக்கிறார்
அது வெறும் அப்பாவித்தனம் அல்ல வாழ்க்கையை உணர்ந்ததால் வந்து அப்பாவித்தனம்
அந்தோனியின் நடிப்பு
———————-
அந்த நடிப்பு பற்றி நான் சிறிது கூற வேண்டும்
அந்தோணியாக அவர் நடிக்கவில்லை அந்தோனியாக அவர் வாழ்ந்தது போலவே எனக்கு தெரிகிறது
நான் நம்புகிறேன் அந்த சூழலும் அந்த வாழ்க்கையும் அவருக்குள் ஊறி கிடக்கின்றது
அவரது ஒவ்வொரு நரம்பும் தசையும் நடித்தது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது
இரண்டு மூன்று கட்டங்களை சொல்லலாம்
ஒன்று வாலிபனான அந்தோணி ஆழக்கடல் வேகமாகச் செல்லும் ஒரு படகில் அணியத்திலே நிமிர்ந்து ஒரு படைத் தளபதிபோல ஒரு மிடுக்கான அரசன் போல நின்று நடுக்கடல் நோக்கி செல்லுகின்ற அந்த கம்பீரமான தோற்றமும் அதற்குள் உடல் மொழிக்குள் பொதிந்திருந்த அனாசாயமான ஒரு மிடுக்கோடு செல்லுகின்ற அந்த வீரமும்
அது ஒரு அந்தோனி
தன்னை விட இளையவர்கள் பிழையான வழியில் செல்கிறார்கள் என்பதனை கண்டும் அதனால் தான் தாக்கப்பட்டும் அவர்கள் மீது கோபம் வராமல் அவர்களை பரிவோடு நோக்கம் அந்தப் பார்வையும் அந்த அந்தோனியும்
இது இன்னொரு அந்தோனி
ஆழக்கடல் செல்லாமல் அன்பு மனைவியின் ஒரு சொல்லிற்காக சாதாரண கடலிலே மீன்பிடிக்க செல்கின்ற அந்தோனியம் அவனது நடையும் உடல் அசைவுகளும்
இது இன்னொரு அந்தோனி
அன்பான மனைவிக்கு வைத்தியம் செய்யப் பணம் தேவை என்று வேகத்தில் மீண்டும் ஆழ் கடலுக்குப் போகின்ற அந்த அந்தோணியின் பார்வைகளும் செயல்களும்
இது இன்னொரு அந்தோனி
எனது ஒரே வள்ளத்தை அவன் இன்னொரு குழந்தையாக தடவி கொடுக்கின்ற அதற்கு மஞ்சள் பூசி சாந்தமாக்கும் அந்தோனி
இது இன்னொரு அந்தோனி
வள்ளதிற்கு பிடித்த பேயை ஓர் இரவில் தனியனாகச் சென்று அந்த் பிசாசுக்ளை ஓட்ட அதற்கு பிரண்டை இலைகள் கொண்டு அடித்து விரட்டி அன்போடு அதனை கழுவி அழகுபார்க்கும் அந்தோனி
இது இன்னொரு அந்தோனி
டாக்டரோடு கதைக்கின்ற பொழுது அந்த நோயின் தன்மைகள் அறியாமல் வெகுளித்தனமாகபதில் கேள்விகள் கேட்கின்ற பதில் கூறுகின்ற் பேச்சும் அப்பாவி முகமும் கொண்ட அந்தோனி
இது இன்னொரு அந்தோனி
குடித்து அழிகின்ற இளைஞரை பார்த்து முறைகின்ற அந்தோனி
மனத் துயர் போக்க பாதி வெட்டப்பட்ட அந்த பிளாஸ்டிக் போத்தலில் கள்ளு குடித்து வெறியாகின்ற அந்த அந்தோனி
மது போதையில் கண்களும் உதடுகளும் அடிமன உணர்வுகளின் கதை கூறக் காட்சி தரும் அந்தோனி
செத்த பிணம் போல மனைவியையும் மகளையும் அணைத்துகொண்டு கிடந்து கண்ணீர் விடும் அந்தோனி
மகளின் மரணத்தைக் கண்டு அதிர்ந்து போன அந்தோனி
ஒரு கணம் அதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த கணங்களில் அவன் உறுதியோடு உதவாத இந்த உலகத்தை விட்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு மரணத்தை நோக்கி செல்லுகின்ற அந்த. அந்தோனி
எத்தனை எத்தனை அந்தோனிகள்
உச்சக்கட்டம் இயேசுவோடு அந்தோனியை இணைத்து காட்டும் கட்டம்
இயேசுவும் ஒரு அப்பாவி தான் ஆனால் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுந்து அப்பாவி
கேள்வி கேட்ட அப்பாவி
அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி
கடவுள் கூட தன்னை கைவிட்டு விட்டார் என்று கலங்கிய அப்பாவி
அப்பாவிகள் எப்போதும் மனதிலே ஆழமாக இடம் பிடிப்பார்கள்
அந்தோனி ஆகிய இந்த அப்பாவி வின்சென்ட் என் மனதில் ஆழமாக இடம் பிடித்திருக்கிறார்
இசை
——————————
இத்தனைக்கும் அப்பால் இந்த படத்தை தூக்கி நிறுத்துவது இளையராஜாவினுடைய இசையாகும்
பாடல்கள் அருமையாக இருக்கின்றன
பாடல்களைப் பாடியவர்கள் மிகப் பிரபல்யமானவர்கள் அல்ல ஆனாலும் தமிழ் படப் பாடல்களின் தரத்தை இவை எட்டி இருக்கின்றன அந்த தரத்திலும் சில நேரங்களில் அவற்றை விட சற்று தூக்கலாகவும் இந்த பாடல்களும் குரல்களும் அமைந்திருப்பது போல எனக்கு தெரிந்தன
இளையராஜாவினுடைய இசை படத்துக்கு உயிர் ஊட்டுகிறது
வாழ்க்கை ஓடுகிறது சில இடங்களிலே மௌனங்கள் இசையாக வருகின்றன
தண்ணீரின் இயல்பான அசைவோசை கடலின் அலை ஓசை என்ற இயற்கை ஓசைகளை இளையராசா பயன் படுத்துகிறார்
சில இடங்களிலே ஒரே ஒரு ஓசை கேட்கின்றது அது குமுறும் கடலோசை
படத்தின் கடைசி காட்சியிலே அவர் கொண்டு வருகின்ற அந்த ஓசை பிரம்மாண்டமான கடல் ஓசை நம்மை கால் விரலின் உச்சத்தில் நின்று கேட்க வைக்கின்றன
இளையராஜா இந்தப் படத்தை அனுபவித்து அனுபவித்து இசை கொடுத்திருக்கிறார் போல எனக்குப்படுகிறது
அதன் நெறியாள்கையும் தாக்கமும் தனியாக பேச வேண்டியவை அவற்றை அடுத்த கட்டுரை பேசும்
( தொடரும்)
முடிப்பு =3
————————————————————
இந்தப் பகுதி அந்தோனியின் திரைப்பட நெறியாக்கம் படம் சார்ந்த அனுபவம் எமது எதிர்பார்ப்பு என்பன பற்றிக் கூறுகின்றது
————————————————————————–
திரைப்பட நெறியாக்கம்
————————————————
முன் கட்டுரையில் நான் கூறிய எல்லாவற்றையும் இணைத்து ஒருங்கிணைத்து வைத்து ஆரம்ப தயாரிப்பு pre- production தயாரிப்புக்கு பின்னர் post production என்று மண்டையை உடைத்துக் கொண்டு உழைப்பவர்தான் நெறியாளர்
அவர் மனதில் வைத்துக்கொண்டிருக்கும் அந்தக் காட்சிகளுக்குத்தான் நான் மேற்சொன்னவர்கள் உருவம் தருகிறார்கள்
இந்தப்பட த் தின் நெறியாளர்கள் இருவர் என்பதனை டைட்டிலில் தெரிந்து கொண்டேன் ஒருவர் சுகிர்தன் கிறிஸ்து ராஜா மற்றவர் ஜெனூசன்
இணை நெறியாள்கை (Co-direction) என்பது இரண்டு இயக்குநர்கள் சேர்ந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் நடைமுறை.
இதில் சில சாதகங்களும் பாதகங்களும் உள்ளன.
சாதகங்கள்:,இரண்டு பேரின் சிந்தனைகள் சேருவதால் படைப்பாற்றல் அதிகரிக்கும். வேலைப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். கதை, காட்சி அமைப்பு, நடிகர் இயக்கம் போன்றவற்றில் பல கோணங்களில் சிந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் படம் ஆழமும் தரமும் பெறலாம்.
பாதகங்கள்:சில நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படும். ஒரே கலைப்பார்வை இல்லாவிட்டால் படத்தின் ஒருமை பாதிக்கப்படலாம்.
சுருக்கமாக, நல்ல புரிதல் இருந்தால் இணை நெறியாள்கை சிறந்த படைப்பை உருவாக்க உதவும். இல்லையெனில் அது சிக்கல்களையும் உருவாக்கலாம்.
உலக சினிமாவிலும் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் இணை நெறியாளர்கள் சேர்ந்து இயக்கியதாகும்.
தமிழ் சினிமாவில் பழைய காலத்தில் கிருஸ்ணன் பஞ்சு என்ற கூட்டணி மிகவும் முக்கியமானது.
, சில நேரங்களில் இரண்டு இயக்குநர்கள் இணைந்து புதிய சிந்தனைகளுடன் சிறந்த படைப்புகளை உருவாக்க முடியும் என்பதும் தெளிவாகிறது.
நெறியாளர் ஜெனூசன் ஒரு நாடக அரங்கியல் மாணவர் என்பதையும் எங்கள் வகுப்புகளிலேயே கலந்து கொண்டிருக்கின்றார் என்பதையும் அவர் எனக்கு எழுதிய போது தான் நான் அறிந்து கொண்டேன் அது பழைய காலக் கதை
நான் அவரை மறந்து விட்டேன்
உரிமையோடு எனக்கு அவர் எழுதிய வார்த்தைகள் இவை
வணக்கம் Sir.
எங்கள் திரைப்படத்தின் சிறப்பு காட்சி கொழும்பில் நாளை மறுநாள் 11ம் திகதி மாலை 6 மணியளவில் திரையிடுகின்றோம்.
நாடகங்கள் ஊடாக உங்கள் கல்வி பயின்று வந்த மாணவனின் படைப்பை நீங்கள் காண முடிந்தால் அது என் பாக்கியம்.
ஒரு மசாலா சினிமாவாக இல்லாமல் எங்கள் வாழ்வியலை திரைப்படமாக எடுத்திருக்கின்றோம்.
நீங்கள் கட்டாயம் வருகை தந்தால் அகமகிழ்வேன்.
அன்புடன்
ஜெனோசன்.
இத்தகைய ஒரு படத்தை தயாரிக்க
அவர்கள் எடுத்த முயற்சிகளே முக்கியமானவை
இந்தப் படத்தை நெறியாள்கை செய்ய முதலாவதாக ஒரு கரையோர சமூகத்தை அறிய வேண்டும்
அதனுடைய வாழ்க்கை முறையைக் காட்சிப் படுத்த வேண்டும்
அந்த சமூகத்தின் மன உணர்வுகளை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும்
அவர்கள் பெருமூச்சுகளை
வாழ்க்கை அனுபவங்களை
உறவுகளை
பேச்சு மொழிகளை
அறிந்து கொள்ள வேண்டும்
அவர்களுடைய மத நம்பிக்கைகள் கிறிஸ்தவ மதமாக இருந்தாலும் அவர்களுடைய முன்னோர்கள் போற்றிய அந்தப் பழைய இந்து மத நம்பிக்கைகளை அவர்கள் இன்னும் விடாமல் இருப்பதை மானுடவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும்
அவர்களுக்கு அந்த பழைய சம்பிரதாயங்கள் பழைய பழக்க வழக்கங்கள் மதம் சார்ந்தவை அல்ல
அவை பண்பாடு சார்ந்தவை என்ற பண்பாட்டு மானிடவியல் அறிவு வேண்டும்
அந்த சமூகத்திற்கென
ஒரு உளவியல் உண்டு
அந்த சமூக உளவியல் அறிவு வேண்டும்
இது எல்லாம் நமது இணை நெறியாளர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் போலவே எனக்குப் பட்டது
நமக்கு இரு நெறியாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்
. திரைக்கதை வசனமும் அவர்களது என அறிகிறேன்
படத்தின் ஆரம்ப அறிமுகத்தில் மேடையில் இருவரையும் அவதானித்தேன்
நெறியாளருள் ஒருவர் பேசினார்
ஆனால் அவர் பேச்சிலே ஒரு அங்கதம் வெளிப்படையாகத் தெரிந்தது
மற்ற நெறியாளரோ இரண்டு வார்த்தைகளில முடித்துக் கொண்டார்
இதில் நான் ஒருவரை ஒருவர் குறைத்து கூறவில்லை இரண்டு பேரும் இரண்டு குணாதிசயங்கள் என்பதை சொல்லவே இதனை நான் குறிப்பிட்டேன்
படம் ஓடும்போது அவதானித்தவை
————————————————————
படம் ஆரம்பமானது
சில வசனங்களுக்கு இடையிடையே கைதட்டல்கள் வந்தன
ஒருவிதமான சத்தமும் எழும்பவில்லை
எல்லோர் மனதும் மெல்ல மெல் ல இறுகிப் போய் இருந்தது போன்ற உணர்வே வந்தது
இடைவேளைக்கு வெளிச்சம் போடப்படவில்லை தொடர்ந்து படம் போடப்பட்டதால் அந்த முடிவு ஏற்படவில்லை
சில இடங்களில் காட்சிகளும் வசனங்களும் மனதைக் கசக்கிப் பிழிந்தன
மனதிலே ஏதோ ஒரு பாரம் மெல்ல மெல்ல ஏறிக்கொண்டு வந்தது மனம் கனத்துப் போய் இருந்தது
அந்தோனியையும் ஏசுநாதரையும் இறுதியில் இணைத்துப் பார்க்கின்ற பொழுது ஒரு மகா மனிதனின் இறப்புத்தான்மனதில் தேங்கி நின்றது
படம் முடிந்து விட்டது
எழுத்துக்கள் ஓடத் தொடங்கின
வழக்கமாக எழுத்துக்கள் போடப்பட்டதும் சனம் எழும்பி விடும்
சபையிலே ஒரு சலசலப்பும் உருவாகிவிடும்
இங்கே ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்தது
படம் முடிந்து எழுத்துக்கள் காட்டப்படும் போது ஒரு சிறிது நேரம் தான் சங்கீதம் சென்றது
அதற்குப் பின்னால் மயான அமைதி
அந்த அமைதியின் பின்னணியிலே எழுத்துக்கள் மெல்ல மெல்ல ஓடிக் கொண்டிருந்தன
அதில் பங்கு பற்றிய அதற்காக உழைத்த அனைவரின் பெயர்களும் வரிசையாக வந்து கொண்டு இருந்தன
சபையில் உட்கார்ந்து கொண்டிருந்த அதாவது கிட்டத்தட்ட ஹவுஸ் ஃபுல் எவருமே
எழும்பவில்லை
அசையவில்லை
அப்படியே உறைந்து போய் இருந்தார்கள்
நான் நம்புகின்றேன்
அந்த மனித உரைவும் அந்த அமைதியும் அந்தப் படத்தின் வெற்றியை நிரூபித்தது என நினைத்துகொண்டேன்
அழைக்கப்பட்டமையினால் அவர்கள் மரியாதையாக இருன்ஹார்கள் எனவும் இதற்கு ஒருவர் விளக்கம் கொடுக்க கூடும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு அல்லவா?
இந்த படைப்பின் முக்கியஸ்தர்கள் இவர்கள் என அறிகிறேன்
தயாரிப்பாளர் ரமணன் மற்றும் சுகந்தினி
இயக்குனர்கள் சுகிர்தன் மற்றும் ஜெனோசன்\
இசை இளையராஜா
ஒளிப்பதிவு ரிஷி செல்வம்
ப ட த் தொகுப்பு சுரேஸ் ஏ பிரசாத்
அனைவரும் இளைஞர்கள் இளம் தலை முறை
இவர்களோடு சேர்ந்து உழைத்த ஒரு பெரும் தொழிலாளர் படையே இருக்கிறது
சினிமா உற்பத்தி என்பது ஒரு மிகபெரும் கூட்டுத் தொழில்
– ஈழத்தமிழ்க் கலைத் தனித்துவம்
——————–
ஈழத்து தமிழ் நாடகம்
ஈழத்து தமிழ் இசை
ஈழத்து தமிழ் இலக்கியம்
ஈழத்து தமிழ் ஆராய்ச்சி
ஈழத்தின் தமிழர்தனித்துவம்
என்று நாங்கள் இப்போதல்ல எமக்கும் முந்திய ஒரு தலைமுறையே பண்டைக் காலம் தொட்டுச் சொல்லி சொல்லி வந்துள்ளது
1960 களிலே நாங்கள் இளைஞர்
, எங்கள் இளம் பருவத்திலே இதனை நாம் அழுத்தி அழுத்தி கூறினோம்
எங்கள் கால்களிலே நாங்கள் நிற்போம்
எங்களுக்கானதை நாங்கள் உருவாக்குவோம்
நாம் தனித்துவமானோர்
எமக்கு என ஒரு பண்பாடு உண்டு
‘நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம்’
என்று மஹாகவி ருத்ரமூர்த்தி கோடை நாடகத்தில் கூறுகிறார்
இந்த மஹா வாக்கியத்தை நம்பிக்கையோடு கூறிய முதிரா இளைஞர்கள் அன்று நாம்
அன்று அந்த இளம் தலை முறை அன்றைய வணிக கலை இலக்கியங்க ளுடன் போட்டியிட வேண்டி இருந்த து
பொன் மணி 1978 இல் யாப்பாணத்தில் திரையிடப் பட்ட போது தென்னிந்திய தமிழ் சினிமா வசனங்களைக் கேட்டுக் கேட்டு அதற்கு பழகிப்போயிருந்த நமது சனம்
உள்ளூர் யாழ்ப்பாணப் பேச்சு தமிழ் கேட்டுக் கூச்சலிட டது
அது ஒரு தனி அனுபவம்
வாடைக் காற்று வீசத் தொடங்கியதும் மன்னாருக்குக் கூழைக்கடாக்களும் வந்து விடும்
அது நாவலில் படத்தில் ஒரு குறியீடு
வாடை காற்று திரைப்படம் வெளிவந்தது படத்தில் அதன் கதாநாயகி ஆ னந்தராணி குடிசைக்குள் இருந்து வெளி வந்து வானத்தில் பறவையைப் பார்த்து
கூழைக் கடா……………………
எனக் கூறியதும் சபையிலிருந்து கூ என்று ஒரு கூச்சலே எழுந் தது
நமது பேச்சுத் தமிழை நம்மவரே கேலி செய்த காலத்திலே தான் 1940 50 களில் நமது முன்னோடி பேராசிரியர் கணபதிப் பிள்ளை பேச்சு தமிழில் நாடகம் எழுதினார்
அதனை பேராசிரியர் வித்தியானந்தன்ன் மேடையிட்டார்
கைலாசபதி சிவத்தம்பி முன்னாள் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் ஆகியோர் அதில் நடித்தார்கள் அத் நடந்தது 1950 களின் நடுப்பகுதியில்
அந்த நாடகங்களை வாசித்து விட்டு
மதங்க சூளாமணி எனும் நாடக வழிகாட்டி நூல் எழுதிய சுவாமி விபுலானந்த அடிகள்
மட்டக்களப்பு தமிழிலும்
இப்படி சில நாடகங்கள் எழுதலாமே
என்று ஆலோசனை கூறினாராம்
அவர்களெல்லாம் நமது முன்னோடிகள்
யாழ்ப்பாணப்பேச்சுத் தமிழ்
பேராசிரியர் கணபதிப்பிள்ளை நாடகங்களில்
மேடையில் விளையாடியது தமிழ் நாடு உட்பட முதல் முதலாக தமிழ் நாடக வரலாற்றிலே பேச்சுத் தமிழ் பிரதான தமிழாக பேசப்பட்டது ஈழத்து நாடகங்களி தான்
நம்மை வெளிப்படுத்த நம் தனித்துவதைன் நிலை நாட்ட நம் முன்னோரும்
நாமும் பட்ட பாடுகள் அதிகம்
மிக அதிகம்
இந்தப் பின்னணிகள் இன்றைய தலை முறை அறியார்
மக்கள் வாழ்வை
அவர் பேசும் மொழியை
இலக்கிய மாக்க
நாடகமாக்க
சினிமாவாக்க
ஒரு பெரும் போராட் டமே அன்று நட த்த வேண்டி இருந்த து
அன்றைய தலைமுறை அன்று ஏதோ செய்தது
இன்றோ எமது அடுத்த தலைமுறை
பழைய தலைமுறை யின்
தோழிலேயே ஏறி நின்று உலகத்தைப் பார்க்கிறது
பழைய தலைமுறையினரின் பார்வை வட் ட த்துள் புலப்படும் காட்சிகளைவிட தோழில் மீது நிற்கும் இவர்கள் காணும் காட்சிகள் வேறானவை
பழையவர்களின் பார்வை வட் டத்துள் வராத காட்சிகள் பல மேலே நிற்கும் இவர்கள் பார்வைக்குப் புலப்படுகின்றன
சில இடங்களில் அவர்கள் பழையவர்களைக் கடந்து பாய்ந்து செல்கிறார்கள்
அது பழம் தலைமுறைக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது
ஆரவாரமான
ஆர்ப்பாட்டமான
அர்த்தமே இல்லாத
கூச்சல் எழுப்புகின்ற
தமிழ்ச் சினிமாப் படங்கள் மத்தியில்
அமைதியாக ஒரு வாழ்க்கையை
ஆழமாக கூறிச் செல்லும் அமைதியான படமாக அந்தோணி இருக்கிறது
இது எழுதுகின்ற பொழுது ஒரு ரஷ்ய நாவலான
டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
என்ற அந்த நாவல் தான் ஞாபகம் வருகிறது
வாழ்க்கை என்பது இப்படி ஆழமாக அமைதியாக ஓடும் ஒரு நதிதான்
இடையில் வருபவை எல்லாம் ஆர்ப்பாட்டங்கள் தான்
அந்தோனி அந்த நாவல் போல
ஒரு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்ற வாழ்வின் பல அர்த்தங்களையும் தருகின்ற ஆழமாக மனதை த் தாக்குகின்ற ஒரு நதிதான்
கரையோர மக்களின் ஒரு கதையை நம் மனதிலே போட்டு பூட்டி அதை இறுக்கி விடுகிறது படம்
அந்தப் படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன
இன்னும் நான் அதன் சில காட்சிகளில் இருந்தும் அது தந்த உணர்வில் இருந்தும் மீளவில்லை
ஒரு படைப்பின் வெற்றி எதிலே இருக்கிறது என்று சொன்னால் அந்தக் படைப்பு தரும் அனுபவம் நமது மாசுபட்ட மனங்களை கழுவி விடும் தன்மையில் இருக்கிறது
அந்தோனி நம் மனதைக் கழுவி விடுகிறது போலவே எனக்குப்பட் ட து
சாதாரண தமிழ்ச் சினிமாப்படம் என்று இதனை ஒதுக்கி விட முடியாது போலவே எனக்குப் படுகிறது
உலகத்தரப் படங்களோடு ஒப்பீட்டு இதனை அக்கு வேறு ஆணிவேராக பிய்ப்பது வேறு
அதன் நல்ல அம்சங்களை சிலாகித்து வளர்ப்பது வேறு
இப்போது மெல்ல மெல்ல வளரும் நம் செடிகளை மேலும் வளர்ப்பதே சிறந்த செயல் போல எனக்குப்படுகிறது
இதுவும் ஒரு வகையில் ஒரு யாழ்ப்பாணத்தமிழரின் ஒரு போராட்டக் கலைதான்,
ஆம் மனித போராட்டங்களையும்
மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான போராட்டங்களையும்
மனித மனங்களின் போராட்டங்களையும்
கூறுகின்ற ஒரு போராட்டப் படமாக இது இருக்கிறது
சிலவேளை இந்தப் படம் வசூல் இல்லாமல் போய்விடலாம்
ஏனென்றால் ஏனைய ஆர்ப்பாட்டங்களுக்கு பழக்கப்பட்ட நமது தமிழ் மக்கள் இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்
ஆனால் அழகியல் ரீதியாகவும் இது சில இடங்களைத் தொட்டுள்ளது என்பதே எனது அபிப்பிராயம்
இந்த இடத்திலே எனக்கு தங்கலான் படம் ஞாபகம் வருகின்றது
பின்தங்கிய குடிகளின் வாழ்வை அவர்கள் பெரு மூச்சை வாழ்வை பழக்க வழக்கங்களை அவர்களின் தொன்மங்களை மானுடவியல் ரீதியாக உளவியல் ரீதியாக கண்டு படமாக்கினார் அந்த பட நெறியாளர்
இங்கே அதேபோல கரையோர மீனவர் கிராமம் ஒன்றின் கதையை அவர்களின் பெரு வாழ்வை மானுடவியல் ரீதியாக உளவியல் ரீதியாக அணுகிக் அதன் தொன்மங்களை கொண்டு வந்து முன் வைக்கின்றார்கள் நெறியாளர்கள்
இறுதியில் வாழ்வை துணிவோடு எதிர்த்து நிற்கும் தைரியம் கொடுக்காமல் தற்கொலையைத் தீர்வு கூறுகிறார்கள் எனக்கூடச் சிலர் வாதிக்கலாம்
மரணம் சிலருக்கு விடுதலையும் கூட என வாதித்த, செய்து காட்டிய மஹா மனிதர்களையும் நாம் கண்டுள்ளோம்
விடுதலைக்கான தற்கொலை அது
தர்கொலைக்கும் கலைஞன் ஒரு ஞாயம் வைத்திருப்பான் அது அவனது பார்வை
கலைஞனை இதனைத்தான் செய்ய வேண்டும் என்று கூற நாம் யார்?
கடும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இது ஒரு கலைப்படம் என்ற அந்தஸ்தைப் பெறாது போகவும் கூடும்
இப்படி எழுதும்போது நெறியாளருள் ஒருவரான ஜெனூசன் எழுதிய கடித வரிகள் ஞாபகம் வ்ருகின்றன
‘ஒரு மசாலா சினிமாவாக இல்லாமல் எங்கள் வாழ்வியலை திரைப்படமாக எடுத்திருக்கின்றோம்’.
மசாலா — வாழ்வியல் என்ற சொற்கள்
இவற்றை அவர் புரிந்து வைத்திருக்கிறார் ;போல தெரிகிறது
அவர் கலைப்படம் எனக் குறிப்பிடாமல் வாழ்வியலை எடுத்திருக்கிறோம் எனக் கூற வந்தமையை நான் புரிந்து கொண்டேன்
அவர்கள் தங்கள் பலம் -பலஹீனங்களை அறிந்து வைத்திருக்கிறார்கள்
தரமான கலை படைப்பு ஒன்றை அளிக்கும் வல்லமையை நமது இளம் தலைமுறை பெற முயற்சிக்கிறது
என்ற மகிழ்ச்சியே நெஞ்சை நிரப்பி இருக்கிறது
வாழ்க என் இளம் தலைமுறையே!
மேலும் முயற்சிகள் செய்க
மேலும் தரம் மிக்க சினிமா பற்றி அறிக
உலகத்தின் உன்னத திரைப்படங்களுடன் மேலும் மேலும் பரிச்சியமாகுக
உங்களுடைய படைப்பு உலகத்தரத்தில் இருக்க வெண்டுமானால் அது நமது பண்பாட்டில் வேரூன்றி இருக்க வேண்டும். பண்பாடு பற்றிய அறிவும் தெளிவும் படைப்பாளிக்கு மிக மிக அவசியம். பண்பாடோ பன்முகம் கொண்ட து
உங்கள் முயற்சி நம்மை மேலும் உயர்த்தட்டும்
உழைப்பில் வாரா உயர்வுகள் உ ண்டோ
முற்றும்
———————————————————————————-
The post உலகக் கரையோர மக்களின் வாழ்வு கூறும் காவியங்களின் பின்னணியில் அந்தோனி திரைப்படம் – சி. மௌனகுரு! appeared first on Global Tamil News.
