புதுடெல்லி: இந்தியா, பிரேசில், சீனா உட்பட பல நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வர்த்தக மற்றும் வரி கொள்கை குறித்து ஆலோசிக்க பிரிக்ஸ் அமைப்பின் காணொலி கூட்டத்தை பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா கூட்டினார்.
இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். வர்த்தக வரியால் இந்திய உறவில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் முயற்சியில் அமெரிக்க அதிபர் ஈடுபட்டுள்ளார். அதேநேரம் பிரிக்ஸ் அமைப்பின் கூட்டத்தையும் அமெரிக்காவுக்கு எதிரான சதி என்ற சந்தேக கண்ணோட்டத்தோடு அவர் பார்க்கிறார்.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்துடன் சமநிலையை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், பிரிக்ஸ் காணொலி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: உலகின் இன்றைய நிலை கவலையளிப்பதாக உள்ளது.
கரோனா பாதிப்பு, ரஷ்யா-உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நடைபெறும் சண்டை, வர்த்தக மற்றும் முதலீட்டில் ஏற்படும் மாறுபாடுகள், மோசமான பருவநிலை மாற்றங்கள் போன்ற சவால்களை உலக நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வருகின்றன. உலகில் உள்ள பன்முக அமைப்புகள் தோல்வியடைந்து வருவதுபோல் உள்ளது.
பல முக்கிய பிரச்சினைகள் புரிந்து கொள்ளப்படுவது இல்லை. அது குறித்து பேசப்படுவதும் இல்லை. இதனால் உலகம் மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது. இது தொடர்பான ஒட்டுமொத்த அக்கறை காரணமாகத்தான், பிரிக்ஸ் அமைப்பு தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.
வர்த்தகத்துக்கு நிலையான மற்றும் முன்பே கணிக்கக்கூடிய சூழலை உலகம் எதிர்நோக்குகிறது. பொருளாதார நடைமுறைகள் நியாயமாகவும், வெளிப்படையாகவும், அனைவரும் பயனடையும் வகையிலும் இருக்க வேண்டும். சர்வதேச வர்த்தக நடைமுறைகளின் அடிப்படை கொள்கைகள் பாகுபாடற்றதாக இருக்க வேண்டும், விதிமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.