கர்நாடகாவில் வீடு கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியிலிருந்து புதையல் மீட்பு!

கர்நாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், புகழ்பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவிலுக்கு அருகே, வீடு கட்டுமான வேலைகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 475 கிராம் பழங்கால தங்க நகைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த புதையல் கிடைத்ததன் எதிரொலியாக, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், புகழ்பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு அருகே வசிக்கும் கங்கவ்வா பசவராஜ் ரிட்டி என்ற பெண், புதிய வீடு கட்டுவதற்காக, சமீபத்தில் தன் நிலத்தில் பள்ளம் தோண்டிய போது, செம்பு பாத்திரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அதில், 475 கிராம் தங்க நகைகள் இருந்துள்ளன.

இதையடுத்து, லக்குன்டி கிராமம் முழுதும் புதையல் உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.

இந்நிலையில் வீரபத்ரேஸ்வரர் கோவில் வளாகத்தில், நேற்று அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

சுற்றுலாத்துறை, தொல்லியல் துறை, லக்குன்டி பாரம்பரிய மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக, கர்நாடக அரசு, 25 லட்சம் ரூபாய் நிதி விடுவித்துள்ளது.

நேற்று, 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்துள்ளன..

48 பேர் தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.

ஒரு அடி ஆழத்துக்கு மேல் தோண்டப்பட்ட நிலையில் தங்க நகைகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.

இந்நிலையில், லக்குன்டி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் கீழும் ஏராளமான தங்க நகைகள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர முழு கிராமத்திலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது எனவும் கதக் மாவட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply