காசா நகரம் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்ட தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது.
தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் படைகள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாயன்று (20) ஒப்புதல் அளித்தார்.
குறித்த ஒப்புதல் இந்த வார இறுதியில் பாதுகாப்பு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 ரிசர்வ் படையினர் இந்த நடவடிக்கைக்காக பணியில் உள்ள வீரர்களை விடுவிப்பதற்காக அழைக்கப்படுவார்கள்.
இதனிடையே, இஸ்ரேலின் ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படுவதால், காசா நகரில் உள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறி தெற்கு காசாவில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் பல நட்பு நாடுகள் அதன் திட்டத்தைக் கண்டித்துள்ளன.
இதற்கிடையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மேலும் இடம்பெயர்வு மற்றும் விரோதப் போக்கு தீவிரமடைதல் காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு “ஏற்கனவே பேரழிவு தரும் சூழ்நிலையை மோசமாக்கும்” என்று கூறியது.
கடந்த மாதம் ஹமாஸுடனான போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கம் முழு காசா பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்தை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.