மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை சந்தித்து உரையாடி இருந்தார்.
அதில் அவர் பேசிய மற்றொரு விடயம் பின்னர் ஊடகங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியது.மன்னார் மாவட்ட வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்காக அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆயர் கேட்டதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளிவந்தது. அந்த ஆஸ்பத்திரி மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது ஏற்கனவே தரப்பட்ட அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்திடம் தாரை வார்த்து கொடுக்கும் ஒரு முயற்சி என்று அதை விமர்சித்தவர்கள் கூறினார்கள். மன்னாரில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.ரவிகரனும் சத்தியலிங்கமும் அதை எதிர்த்துப் பேசியதாகவும் தெரிகிறது. மாகாண அதிகாரத்தில் கீழ்வரும் ஒரு வைத்தியசாலையை மத்தியிடம் கொடுப்பது என்பது என்பது காற்றாலை, கனிமவள அகழ்வு என்பவற்றிற்கு எதிரான போராட்டங்களையும் பலவீனப்படுத்தலாம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன
மன்னார் மறைமாவட்ட ஆயர் வெளிநாட்டில் இருந்த காலத்தில் இந்த விமர்சனங்கள் மேலெழுந்தன. ஆனால் அதே காலப்பகுதியில் இந்தியா அந்த ஆஸ்பத்திரியின் அபிவிருத்திக்கு வேண்டிய நிதி உதவியைச் செய்வதற்கு முன் வந்திருக்கிறது.அந்த ஆஸ்பத்திரியைத் தரமுயர்த்துவதற்கு பெருந்தொகையான பணத்தைத் தருவதற்கு இந்தியா முன் வந்திருப்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் பின்னர் உறுதிப்படுத்தினார்.
ஆஸ்பத்திரி தொடர்பான செய்திகளின் பின்னணியில்,ஆயர் வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில்,ஜனாதிபதி அனுரவும் வெளிநாட்டில் இருந்த ஒரு காலகட்டத்தில்,காற்றாலை தொடர்பான மக்களின் எதிர்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு காற்றாலைகளை நிறுவுவது என்ற முடிவை அரசாங்கம் அறிவித்தது.
அந்த முடிவை எதிர்த்து காற்றாலை நிறுவுவதற்கான உபகரணங்களை தீவுக்குள் கொண்டுவர விடாமல் தடுத்து மின்னார் மக்கள் நடாத்திய போராட்டத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் பலத்தைப் பிரயோகித்திருக்கிறது.அதில் கத்தோலிக்க மதகுருமார் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மன்னார் மக்கள் நாளை அதாவது வரும் திங்கட்கிழமை கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக மன்னார் மக்கள் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலுக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்களில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களோடு இணைந்திருக்கிறார்கள். வெளிமாவட்டங்களிலும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாக இப்போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை அண்மையில் கொழும்பு வரை விஸ்தரித்து இருந்தார்கள்.
கனிமவள அகழ்வுக்கு எதிரான மின்னார் மக்களின் கோரிக்கைகளை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் காற்றாலை தொடர்பான விடயத்தில் எதிரும் புதிருமான கருத்துக்கள் உண்டு. மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை. காற்றாலையும் சூரிய மின்கலங்களும் உலகின் பல பாகங்களிலும் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் காற்றாலைகள் தொடர்பான விமர்சனங்களை கவனத்தில் எடுத்து புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காற்றாலைகளில் உள்ள விசிறிகளில் பட்டு பறவைகள் இறப்பது தொடர்பாகவும் அவை அதிக இரைச்சலை எழுப்புவது தொடர்பாகவும் விமர்சனங்கள் உண்டு.
இந்த விமர்சனங்களை உள்வாங்கி தன்னைத் தானே சுற்றும் விசிறி இல்லாத காத்தாடிகளை ஐரோப்பா உருவாக்கிக் கொண்டிருக்கிறது.ஜெர்மன் இந்த விடயத்தில் முன்னோடியாக காணப்படுகிறது. மேலும் அண்மையில் கிடைத்த ஓர் ஆய்வு முடிவின்படி காத்தாடிகளின் செட்டைகளில் பட்டு இறக்கும் வலசைப் பறவைகளின் இழப்பு விகிதத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் வெற்றியளித்திருக்கின்றன. அதன்படி காற்றாலைகளின் ஒரு சட்டையை கறுப்பாக்கினால் கொல்லப்படும் பறவைகளின் எண்ணிக்கையை 70% ஆக குறைக்கலாம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காற்றாலை மின்சாரம் தொடர்பாக எழுப்பப்படும் விமர்சனங்களை உள்வாங்கி ஐரோப்பா புதிய முன்னேற்றகரமான காற்று மின்சக்தி திட்டங்களை உருவாக்கிக் கொண்டு வரும் ஒரு பின்னணியில், மன்னாரில் காற்றாலை மின்சக்தி திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடுவது குறித்து தமிழ் மக்கள் மத்தியிலேயே ஒரு பகுதியினர் கேள்வி எழுப்புவதுண்டு.
காற்றாலை மின் சக்தியை மன்னார் மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்குரிய காரணங்களைத் தனியாக விவாதித்துக் கொள்ளலாம். ஆனால் காற்றாலை மின்சக்தி திட்டம் எனப்படுவது சூழல் நேய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்று. சூழல் நேயம் என்பது என்ன? சுற்றுச்சூழல் என்பது அஃறிணைகள் மட்டுமல்ல. உயர்திணைகளும்தான். அதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதே மனிதனின் நோக்கு நிலையில் இருந்து உண்டாகிய ஒரு சிந்தனைதான். பூமியைக் குறித்த எல்லா வியாக்கியானங்களும் மனிதனின் நோக்கு நிலையிலிருந்து உருவாக்கப்பட்டவைதான். சுற்றுச்சூழல் என்பது அஃறினை,உயர்திணை அனைத்தும் அடங்கியது. எனவே ஒர் அபிவிருத்தித் திட்டம் குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு நேயமன ஒர் அபிவிருத்தி திட்டம் என்பது அப்பகுதி மக்களால் வரவேற்கப்பட வேண்டும். அப்பகுதி மக்களின் பங்கேற்போடு அதனை உருவாக்க வேண்டும்.அப்பொழுதுதான் அது ஆகக்கூடிய பட்சம் சுற்றுச்சூழலுக்கு நேயமனதாக இருக்கும்.
மன்னார் மாவட்டத்தில் காற்றாலைகளுக்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மட்டும் வரவில்லை கத்தோலிக்க திருச்சபையினர் மத்தியில் இருந்து மட்டும் வரவில்லை கொழும்பில் தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் மத்தியில் இருந்தும் வந்தது. காலி முகத்திடலில் “கோட்டா கோகம” கிராமத்தில் ஒரு பதாகை காணப்பட்டது. அதில் அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு எதிராக வாசகங்கள் காணப்பட்டன. அது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மதகுருவோடு ஒரு தமிழ் செயற்பாட்டாளர் உரையாடினார்.
போராட்டங்களில் முன்னணிகள் காணப்பட்ட ஆக்கத்தோலிக்க மதகுரு கூறினார் “ஆம் நாங்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” என்று. அப்பொழுது அந்தத் தமிழ் செயற்பாட்டாளர் அவரிடம் கேட்டிருக்கிறார் “அப்படியென்றால் ஜேவிபியின் கொள்கைகளில் ஒன்று ஆகிய இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தல் என்ற கொள்கை இப்பொழுதும் நடைமுறையில் உள்ளதா? அந்த இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவிகளாக மலையக மக்களை பார்க்கும் நிலைமை இப்பொழுதும் உண்டா? இந்தப் போராட்டம் மலையக மக்களுக்கும் எதிரானதா?” என்று.அதற்கு அந்த கத்தோலிக்க மதகுரு சொன்னார் “இல்லை.. இல்லை அது அதானி குழுமத்தின் முதலீட்டுக்கு எதிரானது. எல்லா விஸ்தரிப்பு வாதங்களுக்கும் எதிரானது”. என்று. “அப்படியென்றால் அம்பாந்தோட்டையிலும் கொழும்புத் துறைமுகத்திலும் சீன விஸ்தரிப்பையும் எதிர்த்து நீங்கள் பதாகைகள் போடுவீர்களா?” என்று அந்தத் தமிழ் செயற்பாட்டாளர் அந்தக் கோட்டா கோகம மதகுருவிடம் கேட்டிருக்கிறார்.
அந்தப் போராட்டத்தில் அதிகமாகக் காணப்பட்ட முக்கியஸ்தர்களில் அந்த மத குருவும் ஒருவர். அந்தப் போராட்டங்களின் நேரடி விளைவுதான் இப்போது இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகும். அதாவது காலிமுகத் திடலில் கோட்டா கோகம கிராமத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு எதிராக சுலோகங்களை ஏந்திக்கொண்டு நின்ற ஒரு போராட்டத்தின் குழந்தையாகிய என்பிபி அரசாங்கம் எந்தக் காற்றாலைத் திட்டத்தை இந்திய விஸ்தரிப்பு வாதம் என்று கூறி நிராகரித்ததோ, அதே காற்றாலைத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய மன்னார் மக்களையும் குறிப்பாக கத்தோலிக்க மத குருக்களையும் பலத்தைப் பிரயோகித்து அகற்றியிருக்கிறது.
மன்னாரில் சூரிய மின்கல திட்டங்களுக்கு தாங்கள் எதிர்ப்பு இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள்.கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்களும் கூறுகிறார்கள்.ஆனால் மன்னர் தீவுக்குள் காற்றாலைகள் நிறுவப்படுவதைத்தான் அவர்கள் எதிர்க்கின்றார்கள்.அதுதொடர்பான அவர்களுடைய கவலைகளைக் கேட்டு அதுதொடர்பான துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஆழமான உரையாடல்களை நடத்தி இறுதி முடிவை எடுக்கலாம்.ஒரு சூழல் நேயத் திட்டம் அப்பகுதி மக்களால் எதிர்க்கப்படுகிறது என்றால் அதனை பலவந்தமாக அமல்படுத்த முடியாது என்பது அது ஒரு சூழல் நேயத்திட்டம் என்பதனாலேயே அடிப்படையான ஒரம்சம்.
இப்பொழுது மக்களுக்கு எதிராகப் பலம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் எதிர்ப்பு மேலும் விஸ்தரிக்கப்படும் நிலைமைகளே தெரிகின்றன. நேற்று நடந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகச் சந்திப்பில் இது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான கட்சிகள் இந்த விடயத்தில் போராடும் மக்களோடு நிக்கக்கூடிய வாய்ப்புகள் தெரிகின்றன.எனவே இந்தப்போராட்டம் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படலாம்.
இந்த விடயத்தில் கட்சிகள் தலையிட வேண்டும் என்று போராடும் மக்கள் பல மாதங்களுக்கு முன்னரே கேட்டு வந்தார்கள்.அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அதுதொடர்பாக உரத்த குரலில் எதிர்க்கவில்லை என்றும் ஒரு விமர்சனம் அவர்களிடம் இருந்தது. இத்தகையதொரு பின்னணியில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பெருங்கூட்டம் மின்னார் நகரப் பகுதியில் நடந்தது. அதில் பேசிய சிவில் சமூகப் பிரதிநிதி காற்றாலை, கடல் அட்டை இரண்டிலும் அப்பகுதி மக்களுடைய விருப்பம் கேட்டுப் பெறப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்திப் பேசினார். காற்றாலை,கடலட்டை இரண்டும் தமிழ் மக்களின் நிலத்தின் மீதான உரிமையைக் குறிப்பவை. எனவே தமது நிலத்தின் மீது தமிழ் மக்களுக்குள்ள உரிமையைப் பாதுகாப்பது என்ற அடிப்படையில் காற்றாலை மற்றும் கடல் அட்டை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ் மக்களுக்கு வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
இப்பொழுது அந்த விடயம் பெரும்பாலான கட்சிகள் பேசும் ஒரு விடயமாக,பெரும்பாலான செயற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்ளும் ஒரு விடயமாக, ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை போராடிய மக்கள் மீது பலம் பிரயோகிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில் இந்தப் போராட்டம் மேலும் பல மடையும்.