52
யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டினுள் நீதிமன்ற அனுமதி எதுவும் இன்றி அத்துமீறி நுழைந்து தேடுதல் நடாத்தினார்கள் என காவற்துறையினர் மீது குற்றம் சாட்டி சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என சட்டத்தரணிகள் சிலருக்கு எதிராக காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டத்தரணி ஒருவரை கைது செய்யும் நோக்குடன் அவரது வீட்டுக்கு சென்ற காவற்துறையினர் வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எவ்வித நீதிமன்ற அனுமதியும் பெறாது காவற்துறையினர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தேடுதல் மேற்கொண்டதாகவும் , காவற்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அதேவேளை , காணி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள சட்டத்தரணிகள் தம்மை காவற்துறையினர் கைது செய்வதனை தடுத்தும் முகமாக நாளைய தினம் புதன்கிழமை நீதிமன்றங்களில் முன் பிணை கோரவுள்ளதாக அறிய முடிகிறது.