சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில், பொருட்கள் சேவை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (04) மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்ற MEMU  (Mainline Electric Multiple Unit) பயணிகள் ரயில், நின்று கொண்டிருந்த பொருட்கள் சேவை ரயிலுடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Image

விபத்து நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன, காயமடைந்தவர்கள் பிலாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை, சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனம் (CIMS) ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகளல் பயணிகள் ரயில், சிவப்பு சமிக்ஞையை மீறி, 60-70 கிமீ வேகத்தில் பொருட்கள் சேவை ரயிலில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா‍ 10 இலட்சம் ரூபாவும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply