”வாயை மூடிக்கொண்டிருங்கள்” என சபைக்குத் தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவைப் பார்த்து, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்ததைத் தொடர்ந்து நேற்று சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், ரோஹிணி குமாரி விஜேரத்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய போது, அந்தக் கேள்வியுடன் தொடர்புடையதாக சில விடயங்களை முன்வைத்தார்.
அதன் போது ”உங்களின் கேள்வியைக் கேளுங்கள்” என்று அடிக்கடி சபாநாயகர் கூறிக்கொண்டிருந்த நிலையிலேயே இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது.
1989 பெப்ரவரி 08 ஆம் திகதி தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பிய ரோஹினி குமாரி விஜேரட்ன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பதிலைத் தொடர்ந்து இரண்டாவது இடைக் கேள்வியை எழுப்பி, தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள வீதி மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் தற்போது பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை இல்லாத நிலைமையில் ஏன் இந்த வீதியை மூடி வைத்திருக்க வேண்டும் என்றும் வினவினார்.
அத்துடன் வடக்கில் வீதிகள் திறக்கப்படுகின்றன. பாதாள குழுக்களின் மோதல்கள் அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்று ஆளும் தரப்பினால் கூறப்படுகிறது. அவ்வாறானால், ஏன் வீதியை மூட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இவ்வேளையில் நீங்கள் உங்களுடைய கேள்வியை முன்வையுங்கள். கேள்வியை கேட்காமல் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று சபாநாயகர் தெரிவித்த நிலையில், கேள்வியைத்தான் கேட்கின்றேன். நீங்கள் கேட்டுக்கொண்டிருங்கள் என கூறிய ரோஹிணி குமாரி எம் பி , ”ஐயோ வாயை மூடிக்கொண்டு நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருங்கள்” என்று சபாநாயகரை நோக்கி தெரிவித்தார். நீங்கள் யாரைப் பார்த்து அவ்வாறு கூறுகின்றீர்கள் என ஆளும் கட்சி தரப்பினர் கேள்வி எழுப்பிய நிலையில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.இதன்போது எழுந்த அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, இதனை பாடசாலை என்று நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம். ஆசிரியர்கூட பேசாத ஒன்றையே இவர் இங்கே கூறியுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)