தாய்லாந்து தலைநகர் பெங்காங்கில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் முன்னிலையில், 58 வயதான பூங்கா ஊழியர் ஒருவர் சிங்கக் கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்காங்கில் சஃபாரி உலக உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது.
இங்கு சிங்கங்கள், யானை, ஓரங்குட்டன் குரங்குகள், கடல் சிங்கம் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1988 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பூங்கா 480 ஏக்கர் திறந்தவெளி பூங்காவாகவும் 180 ஏக்கர் பறவைகள் சரணாலயமாகவும் செயல்பட்டு வருகிறது.
இங்கு இரவு நேரங்களில் சிங்கங்கள் உறுமும் சப்தம் கேட்கும்.
பகல் நேரத்தை விட இரவு நேர பயணம், நல்ல அனுபவத்தை கொடுக்கும். ஆனால் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும். இதற்காக அந்த நாட்டு பொது போக்குவரத்து, வேன், ஜீப், டெக்ஸிகள் உள்ளன.
அதில் பயணித்தபடியே விலங்குகளை காணலாம்.
காலை 10 மணிக்கு விலங்குகளுக்கு உணவளிப்பார்கள். அப்போது விலங்குகள் உற்சாகத்துடன் இருக்கும்.
இந்த பூங்காவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் ஜியான் ராங்காரஷாமி.
இவர் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்கு பாதுகாப்பு விதிகளை மீறி காரில் போய் இறங்கியுள்ளார்.
அப்போது அவரை சிங்கங்கள் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த பூங்காவை பார்வையாளர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த போது ஜியானின் அலறல் சத்தம் கேட்டு சிங்கங்கள் இருக்கும் இடத்திற்கு மக்கள் சென்றனர்.
அப்போது ஜியானை 3 க்கும் மேற்பட்ட சிங்கங்கள் தாக்கிக் கொண்டிருந்தன.
அவரால் தப்பிக்க முடியவில்லை. அப்போது சிங்கங்களின் கவனத்தை சிதறடிக்க மக்கள் ஏதேதோ சப்தங்களையும் எழுப்பி பார்த்தனர். ஆனால் அவை அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவரை விடாமல் கடித்துக் கொண்டிருந்துள்ளன.
சுமார் 15 நிமிடங்கள் ஜியான் சிங்கங்களுடன் போராடினார். இதுகுறித்து பார்வையாளர்கள் கூறுகையில், ஜியான் தனது காரை விட்டு இறங்கியவுடனே அந்த சிங்கங்கள் அவரை தாக்கின.
நாங்கள் அந்த சம்பவத்தை பார்த்தாலும் எப்படி அவருக்கு உதவுவது என தெரியவில்லை. நாங்கள் எங்கள் காரின் ஹாரன் சப்தத்தை அடித்தோம். கத்தி பார்த்தோம். ஆனாலும் அவரை விடவே இல்லை.
முதலில் ஜியானுடன் சிங்கங்கள் விளையாடுவதாக நினைத்தோம். பின்னர் கடித்தவுடன்தான் விஷயம் தெரிந்து பூங்கா அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தார்கள் என்றனர்.
இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறுகையில், சிங்கங்கள் பசியோடு இல்லை. அவற்றில் ஒரு சிங்கத்திற்கு நல்ல மனநிலை இல்லை என்பதால் அது முதலில் தாக்குதல் நடத்தியிருக்கலாம்.
அதன் பிறகு மற்ற சிங்கங்களும் தாக்குதல் சம்பவத்தில் இறங்கி இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் சிங்கங்களிடம் இருந்து அவரை மீட்ட அதிகாரிகள், அவரை மருத்துவமனையில் சேர்த்த போது ஜியான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.